பெங்களூரில் விடிய விடிய கன மழை பல பகுதிகளில் வெள்ளம் தேக்கம்
பெங்களூரில் விடிய விடிய கன மழை பல பகுதிகளில் வெள்ளம் தேக்கம்
ADDED : மே 14, 2024 04:34 AM

பெங்களூரு: பெங்களூரு நகரில் நேற்று அதிகாலை விடிய விடிய கன மழை பெய்ததால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் போல் காட்சியளித்தது.
பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பெங்களூரில் கடந்த வாரம் முதல், ஒரு நாள் விட்டு, ஒரு நாள் என பலத்த மழை பெய்கிறது.
நகரின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் பகலில் மழை பெய்தது. ஆனால், நேற்று அதிகாலை 1:00 மணியளவில், பலத்த காற்று, பயங்கர சத்தத்துடன் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
அனுமதி மறுப்பு
எச்.ஏ.எல்., இந்திராநகர், மாரத்தஹள்ளி, ஒயிட்பீல்டு, ராமமூர்த்திநகர், கே.ஆர்., புரம், பானசவாடி, ஹெப்பால், எலஹங்கா, யஷ்வந்த்ப்பூர், ராஜாஜிநகர், தாசரஹள்ளி, மாகடி சாலை, விஜயநகர், பசவனகுடி, பனசங்கரி,
ஜெயநகர், திலக்நகர், மடிவாளா, கோரமங்களா, சர்ஜாபுரா, எலக்ட்ரானிக் சிட்டி உட்பட நகரின் பல பகுதிகளில், அதிகாலை 4:00 மணி வரை விடிய விடிய மழை பெய்தது.
இரவு 11:00 மணியளவில் தேவனஹள்ளி சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது. சூறாவாளி காற்றும் வீசியது. மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு பயங்கரமாக இருந்தது.
இதனால், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், இரவு 11:18 மணி முதல், 11:54 மணி வரை விமானங்கள் தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
11 விமானங்கள்
இதனால், பெங்களூரில் தரையிறங்க வேண்டிய 11 விமானங்கள், சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. இரண்டு, மூன்று மணி நேரம் தாமதமாக சென்னைக்கு அந்த விமானங்கள் சென்றடைந்தன.
இதில், பாங்காக் நகரில் இருந்து வந்த இரண்டு விமானங்கள், பாரீஸ் நகரில் இருந்து வந்த ஒரு விமானம், ஆம்ஸ்டர்டெம் நகரில் இருந்து வந்த ஒரு விமானமும் அடங்கும்.
இதற்கிடையில், மழை பாதிப்பு குறித்து, பெங்., மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார்கிரிநாத் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அனைத்து மண்டல கமிஷனர்கள், குடிநீர் வடிகால் வாரியம், பெஸ்காம், மெட்ரோ ரயில் நிர்வாகம், தீயணைப்பு துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
325 மரங்கள்
நீண்ட நேர ஆலோசனைக்கு பின், அவர் கூறியதாவது:
கடந்த ஒரு வாரமாக பெங்களூரு நகரின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்துள்ளது.
இதனால், 150 இடங்களில் மழை நீர் தேங்கின. அந்த நீர் 2 மணி நேரத்தில் அப்புறப்படுத்தப்பட்டன. மொத்தம் 325 மரங்கள் சாய்ந்தன. 698 மர கிளைகள் முறிந்து விழுந்தன.
மரங்களை அப்புறப்படுத்துவதற்காக, 39 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகரில், 198 இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில், 74 இடங்களில் நிரந்தர தீர்வு காண வேண்டும்.
தலா ரூ.30 லட்சம்
கால்வாய்களில் மழை நீர் செல்லும் வகையில், 225 வார்டுகளிலும், துார்வருவதற்காக, தலா 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, கூடுதலாக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை, புதிதாக வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு பயன்படுத்தி கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது போன்று, சிக்கபல்லாப்பூர், கோலார், பெங்களூரு ரூரல், விஜயநகரா, பெலகாவி, சிக்கமகளூரு, ஷிவமொகா, ஹாசன், சித்ரதுர்கா, தாவணகெரே உட்பட பல பகுதிகளில் மழை பெய்தது. ஆங்காங்கே வாழை, மா மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

