குப்பை நிர்வகிக்க வீடுதோறும் ரூ.100 கட்டணம் அரசு ஒப்புதலுக்கு அனுப்பியது பெங்., மாநகராட்சி
குப்பை நிர்வகிக்க வீடுதோறும் ரூ.100 கட்டணம் அரசு ஒப்புதலுக்கு அனுப்பியது பெங்., மாநகராட்சி
ADDED : ஜூன் 11, 2024 04:27 AM
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கும் வகையில், குப்பை நிர்வகிப்பதற்காக, மாதந்தோறும் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 100 ரூபாய் கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கும்படி, மாநில அரசின் ஒப்புதலுக்கு, மாநகராட்சி அனுப்பி உள்ளது.
குப்பை பிரிப்பு
பெங்களூரில் குப்பை நிர்வகிப்பது பெரும் சவாலான பணி. கண்ட கண்ட இடங்களில் மக்கள் குப்பை கொட்டுவதைத் தடுப்பதற்காக, வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதற்காக, மாநகராட்சி தரப்பில், இரண்டு வார்டுகளுக்கு, மூன்று ஆட்டோக்கள் செயல்படுகின்றன. அதுவும் உலர்ந்த குப்பை, ஈர குப்பை என தரம் பிரித்து, சேகரிக்கப்படுகிறது.
தரம் பிரித்து மக்கள் குப்பை கொட்டுகின்றனரா என்பதை கண்காணிக்க, மார்ஷல்களும் நியமிக்கப்பட்டனர். ஆனாலும் பல வீடுகளில் குப்பை தரம் பிரிக்காமலேயே கொட்டுகின்றனர். இன்னும் சிலர், இரவு நேரத்தில் கண்ட, கண்ட இடங்களில் குப்பை கொட்டி, நகரின் துாய்மைக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர்.
இதற்கிடையில், மாநகராட்சிக்கு முக்கிய வருமானம் வருவதே சொத்து வரியில் இருந்து தான். இது தவிர, மாநகராட்சி கட்டட வாடகை மூலம் ஓரளவு வருவாய் கிடைக்கிறது.
தற்போது, குப்பை சேகரிப்பிலும் வருவாய் ஈட்டுவதற்கு முன்வந்துள்ளது. குப்பை நிர்வகிப்பதற்காக, சில மாதங்களுக்கு முன்பு, மாநகராட்சி தரப்பில், பெங்களூரு குப்பை நிர்வகிப்பு நிறுவனம் அமைக்கப்பட்டது.
இந்த நிறுவனம், நாட்டின் வெவ்வேறு மாநகராட்சிகளில் குப்பை நிர்வகிப்பு கட்டணம் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. இதை பெங்களூரு மாநகராட்சியிடம் தாக்கல் செய்தது.
ஆய்வறிக்கையை பரிசீலனை செய்த மாநகராட்சி, மாதந்தோறும், ஒவ்வொரு வீட்டுக்கும் 100 ரூபாய் குப்பை நிர்வகிப்பு கட்டணம் வசூலிக்க அனுமதி தரும்படி, மாநில அரசிடம் கோரி உள்ளது.
மேலும், வணிக கட்டடங்களுக்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அரசு என்ன முடிவு எடுக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்கள் ஏற்கனவே பல்வேறு வரிகள் செலுத்தி வரும் நிலையில், குப்பைக்கும் கட்டணம் விதிக்கின்றனரா என்று ஆதங்கம் வெளிப்படுத்தி உள்ளனர்.
வெவ்வேறு வரிகள் செலுத்தி மக்கள் சோர்வடைந்து உள்ளனர். குப்பைக்கு கட்டணம் விதிப்பதை பா.ஜ., கடுமையாக கண்டிக்கிறது. வருங்காலத்தில், பால், பஸ் டிக்கெட் கட்டணம், மது விலையும் உயர்த்த காங்கிரஸ் தயாராகி வருகிறது. இதை கண்டித்து பா.ஜ., போராட்டம் நடத்தும்.
அசோக், எதிர்க்கட்சி தலைவர், சட்டசபை

