/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பங்கு சந்தை முதலீடு குறிப்புகள் ஏன் பலன் அளிப்பதில்லை?
/
பங்கு சந்தை முதலீடு குறிப்புகள் ஏன் பலன் அளிப்பதில்லை?
பங்கு சந்தை முதலீடு குறிப்புகள் ஏன் பலன் அளிப்பதில்லை?
பங்கு சந்தை முதலீடு குறிப்புகள் ஏன் பலன் அளிப்பதில்லை?
ADDED : செப் 14, 2025 08:19 PM

பங்குகளில் நேரடி முதலீடு செய்ய முறையான ஆய்வும், அலசலும் அவசியம் என சொல்லப்படுகிறது. எனினும் பல முதலீட்டாளர்கள், அள்ளி தரக்கூடிய பங்குகளை சுட்டிக்காட்டும் குறிப்புகளை நாடுபவர்களாகவே இருக்கின்றனர்.
குறிப்பிட்ட பங்குகளை வாங்கவும் அல்லது விற்கவும் எனும் வகையிலான பரிந்துரைகளை ஈர்த்தாலும், நடைமுறையில் சிக்கலை ஏற்படுத்தலாம். அதிலும் குறிப்பாக தற்போது சமூக ஊடகத்தின் தாக்கத்தால், பங்கு பரிந்துரைகள் பலரால் பின்பற்றப்படுகின்றன. குறிப்புகள் அடிப்படையில் பங்கு முதலீடு செய்வதில் உள்ள பிரச்சனைகளை பார்க்கலாம்.
பங்கு வழிகாட்டல்:
ஆயிரக்கணக்கான பங்குகளில் வெற்றி தரக்கூடிய பங்குகளை அறிவதில் ஆர்வம் இருப்பது இயல்பானது தான். ஆனால், அதை கண்டறிவது தான் கடினமானது. ஆகவே தான் பலரும், முதலீடு குறிப்புகள் இதற்கு பதில் அளிக்கும் என நம்புகின்றனர். இந்த குறிப்புகள், முதலீடு தொடர்பான வழிகாட்டுதலை கொண்டிருப்பதில்லை.
புதிய போக்குகள்:
பங்குகள் மட்டும் அல்லாமல், மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் தொடர்பான குறிப்புகளும் வழங்கப்படுகின்றன. தொழில்நுட்ப துறைக்கு தான் எதிர்காலம் அல்லது மருந்தக துறை இப்போது பாதுகாப்பானது என்பது போல இவை அமைகின்றன. இந்த உத்திக்கான அடிப்படைகள், இதில் உள்ள இடர் அம்சங்கள் விளக்கப்படுவதில்லை.
அடுத்தது என்ன?
முதலீட்டில் பல அம்சங்கள் உள்ளன. எவ்வளவு முதலீடு செய்யலாம்? எப்போது வெளியேறலாம் என உள்ளிட்ட கேள்விகளை பரிசீலிக்க வேண்டும். குறிப்புகள் இவற்றை கொண்டிருப்பதில்லை என்பதோடு, முதலீடு செய்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்றும் வழிகாட்டுவதில்லை.
அதிக பாதிப்பு:
வழிகாட்டுதல் இல்லாத முதலீடு சந்தை ஏற்ற இறக்கத்தின் போது பதற்றத்தையும், குழப்பத்தையும் அளிக்கும். யாரோ சொல்கின்றனர் என்பதற்காக, வலுவான பங்கை குறைந்த விலையில் விற்க நேரலாம். அதே போலவே, விற்க வேண்டிய பங்கை பொய்யான எதிர்பார்ப்பில் கையில் வைத்திருக்கலாம்.
நிதி இலக்கு:
வெறும் எதிர்பார்ப்பை மட்டும் நம்பி செய்யப்படும் முதலீடுகள் பாதகமானவை. எனவே, பங்குகள் தொடர்பான பரிந்துரைகள் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முதலீடு முடிவுகள் நிதி இலக்குகள் சார்ந்து இருப்பதும் அவசியம். எனவே, முறையான வழிகாட்டுதல் மிகவும் அவசியம்.