நினைத்தது 5; நடந்தது 18 ஜி.எஸ்.டி., உயர்வு குறித்து குறுந்தொழில்கள் கவலை
நினைத்தது 5; நடந்தது 18 ஜி.எஸ்.டி., உயர்வு குறித்து குறுந்தொழில்கள் கவலை
ADDED : செப் 10, 2025 11:35 PM

சென்னை:சிறு நிறுவனங்களிடம் இருந்து, 'ஜாப் ஆர்டர்' பணிகளை மேற்கொள்ளும் குறுந்தொழில்களின் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.,யை, 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து, சங்க தலைவர் மோகன், பொதுச்செயலர் வாசுதேவன் ஆகியோர் கூறியதாவது:
தமிழகம் உட்பட நாடு முழுதும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாகன உதிரி பாகங்கள் என, பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
பெரிய தொழில் நிறுவனங்களிடம் இருந்து ஆர்டர்களை பெறும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், குறுந்தொழில்களுக்கு, 'ஜாப் ஆர்டர்களை' வழங்குகின்றன. அந்நிறுவனங்களிடம் மூலப்பொருட்களை வழங்கி, தாங்களின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்து, வாங்குகின்றன.
இந்த பணிகளை, பெரும்பாலும் குறுந்தொழில் நிறுவனங்கள் தான் செய்கின்றன. ஒரு நிறுவனத்தில், இரண்டு - மூன்று பேர் தான் பணிபுரிகின்றனர்.
குறுந்தொழில்களின் ஜாப் ஆர்டர் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., 12 சதவீதமாக உள்ளது. இதை, ஜி.எஸ்.டி ., மறுசீரமைப்பில், 5 சதவீதமாக குறைக்கு மாறு ஜி.எஸ்.டி., கவுன்சி லிடம் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், மறுசீரமைப்பு குறித்த அறிவிப்பில், ஜி.எஸ்.டி.,யை குறைப்பதற்கு பதிலாக, 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது, குறுந்தொழில்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, 'ஜாப் ஆர்டர்' பணிகளை மேற்கொள்ளும் குறுந்தொழில்களின் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி.,யை, 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்குமாறு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.