அமெரிக்க வரி விதிப்பால் சிக்கல் தினசரி ரூ.60 கோடி இழக்கும் தமிழகம் பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
அமெரிக்க வரி விதிப்பால் சிக்கல் தினசரி ரூ.60 கோடி இழக்கும் தமிழகம் பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ADDED : டிச 19, 2025 01:13 AM

சென்னை,: 'இந்தியா -- அமெரிக்கா இருதரப்பு ஒப்பந்தம் வாயிலாக, வரி சிக்கலை விரைவில் தீர்க்க பிரதமர் முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்துக்கு தினசரி இழப்பு, கிட்டத்தட்ட 60 கோடி ரூபாயாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தில், ஏற்றுமதி துறைகளில் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.
இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியின் அடித்தளமாக தமிழகம் விளங்குகிறது. நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில், 28 சதவீதம் பங்களிப்பை வழங்குகிறது.
கிட்டத்தட்ட 75 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தோல் பொருட்கள் மற்றும் காலணி ஏற்றுமதியிலும் தமிழகம் 40 சதவீத அளவிற்கு முக்கிய பங்காற்றி, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறது.
அமெரிக்க வரிவிதிப்பால் தற்போது வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள இடர்பாடு என்பது, வெறும் பொருளாதார பின்னடைவு மட்டுமல்ல. இது, ஈடுசெய்ய முடியாத சமூக இழப்பினை ஏற்படுத்தும் மாபெரும் சவால்.
திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் 60 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சரிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளன. வேலுார், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்------------துார் மாவட்டங்களில் உள்ள காலணி உற்பத்தி நிறுவனங்களிலும் இதேபோன்ற மோசமான சூழ்நிலை காணப்படுகிறது.
இது அவர்களின் போட்டித்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை குலைக்கும் வகையில் உள்ளது. இதன் காரணமாக, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது.
எனவே, இந்திய - -அமெரிக்க இருதரப்பு ஒப்பந்தம் வாயிலாக, இந்த வரி சிக்கலை விரைவில் தீர்ப்பதற்கு பிரதமர் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பின்னலாடை தலைநகரான திருப்பூரில், உறுதிப்படுத்தப்பட்ட ஆர்டர்களில் ஏற்றுமதியாளர்களுக்கு 15,000 கோடி ரூபாய் இழப்பு
பின்னலாடை நிறுவனங்களில், 30% வரை கட்டாய உற்பத்தி குறைப்பு; புதிய ஆர்டர்களும் கவலை அடையும் அளவில் குறைவு

