'இஸ்ரோ ராக்கெட் தயாரிப்பில் சிறுதொழில்கள் முக்கிய பங்கு'
'இஸ்ரோ ராக்கெட் தயாரிப்பில் சிறுதொழில்கள் முக்கிய பங்கு'
ADDED : டிச 19, 2025 01:11 AM

மதுரை: “தமிழகத்தில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், இஸ்ரோ ராக்கெட் தயாரிப்புக்கான உதிரிபாகங்களை தயாரித்து வழங்கலாம்,” என, மகேந்திரகிரி இஸ்ரோ ப்ரபல்ஸன் காம்ப்ளக்ஸ் துணை இயக்குநர் சிவகுமார் தெரிவித்தார்.
மதுரையில் நடந்த எம்.எஸ்.எம்.இ., கனெக்ட் - 2025ல் பங்கேற்ற அவர் கூறியதாவது:
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் திரவ ராக்கெட்டுக்குரிய இன்ஜின், பிற பாகங்களை பொருத்தி ஒருங்கிணைக்கும் பணியும், அதற்கான பரிசோதனையும் நடக்கிறது. ராக்கெட் சோதனை செய்வதற்குரிய டெஸ்ட் ஸ்டாண்ட், பிக்ஸர்கள் உட்பட பிற உபகரணங்கள் தேவைப்படும்.
ராக்கெட் என்றால் அதன் உருவாக்கத்திற்கு தேவையான உபகரணங்கள், உதிரிபாகங்கள் நிறைய உள்ளன. இந்த கருவிகளில், 50 சதவீத அளவுக்கு எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்கிறோம். சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கெமிக்கல், நிர்வாகத்திற்கு தேவையான பர்னிச்சர், கேன்டீனுக்கு தேவையான பொருட்கள், கம்ப்யூட்டருக்கு தேவையான பொருட்கள், அவுட்சோர்ஸிங் உட்பட அனைத்து பணிகளுக்கும் மத்திய அரசின் ஜெம் போர்ட்டல் வாயிலாக கொள்முதல் செய்கிறோம்.
எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களிடமே அதிக கொள்முதல் நடக்கிறது. சிறு நிறுவனங்கள் வாயிலாக வாங்க முடியாத சில பொருட்களை மட்டும், இஸ்ரோவின் இ - போர்ட்டல் வழியாக கொள்முதல் செய்கிறோம்.
உற்பத்தித் தொழிலோ, சேவைத் தொழிலோ எதுவாக இருந்தாலும் ஜெம் போர்ட்டலில் பதிவு செய்து இஸ்ரோவுக்கு பொருட்களை வினியோகம் செய்யலாம். வினியோகஸ்தர்கள், உற்பத்தியாளரிடம் இருந்து வாங்கியும் இஸ்ரோவுக்கு அனுப்பலாம்.
தமிழகத்தில் கம்ப்யூட்டர் பொருட்கள், கேபிள்கள், பைப்லைன், ரெகுலேட்டர், வால்வு அதிகம் உற்பத்தியாகின்றன. ஆனால், ஜெம் மார்க்கெட்டில் இணைவோர் குறைவு. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே 'எம்.எஸ்.எம்.இ., கனெக்ட்' நிகழ்ச்சியில் பங்கேற்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வரையிலான பர்சேஸ் ஆர்டரில் 100 கோடி ரூபாய் வரை எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களிடம் கொள்முதல்
கொள்முதல் செய்யும் பொருட்களின் விலை, 10 ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை இருக்கும்
கோவை, திருச்சி, சென்னை நிறுவனங்கள் நட்டு, போல்ட், பெயின்ட், ஸ்டேஷனரி, பர்னிச்சர், பேப்ரிகேஷன் வழங்குகின்றன.

