சில்லரை விலை பணவீக்கம் ஆகஸ்டில் 2.07 சதவிகிதம் ஆக உயர்வு
சில்லரை விலை பணவீக்கம் ஆகஸ்டில் 2.07 சதவிகிதம் ஆக உயர்வு
ADDED : செப் 12, 2025 11:38 PM

புதுடில்லி, செப். 13-
நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2.07 சதவீதமாக அதிகரித்துள்ளது. முந்தைய ஜூலை மாதத்தில் பணவீக்கம் 1.55 சதவீதமாக இருந்தது. கடந்தாண்டு அக்டோபர் மாதத்துக்கு பின் தொடர்ந்து குறைந்து வந்த பணவீக்கம், கடந்த மாதம் சற்று உயர்ந்துள்ளது.
காய்கறிகள், முட்டை, இறைச்சி, மீன் மற்றும் எண்ணெய் வகைகளின் விலை உயர்வே பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது.
உணவுப் பொருட்களின் விலை சற்று அதிகரித்த போதிலும், தொடர்ந்து மூன்றாவது மாதமாக உணவுப் பொருட்கள் பிரிவு பணவீக்கம் மைனஸ் நிலையிலேயே நீடிக்கிறது.
கடந்த ஜூலையில் மைனஸ் 1.76 சதவீதமாக இருந்த நிலையில் கடந்த மாதம் மைனஸ் 0.69 சதவீதமாகியுள்ளது.
கடந்த ஆகஸ்டை பொறுத்தவரை, பணவீக்கம் கிராமப்புறங்களில் 1.69 சதவீதமாகவும்; நகர்ப்புறங்களில் 2.47 சதவீதமாகவும் இருந்தது.
இதனிடையே, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஆகஸ்டில் அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள முதல் ஐந்து மாநிலங்களில், 2.93 சதவீத பணவீக்கத்துடன் தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
கேரளா, கர்நாடகா, ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகியவை முதல் நான்கு இடங்களில் உள்ளன.