டாடா சன்ஸ் நிறுவன இயக்குனர் நியமனத்தில் கருத்து வேறுபாடு
டாடா சன்ஸ் நிறுவன இயக்குனர் நியமனத்தில் கருத்து வேறுபாடு
UPDATED : செப் 12, 2025 11:40 PM
ADDED : செப் 12, 2025 11:39 PM

மும்பை:மும்பையில் நடைபெற்ற டாடா டிரஸ்ட் கூட்டத்தில், டாடா சன்ஸ் குழுமத்தின் இயக்குநர் நியமனம் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் எழுந்தன.
தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு பின், கடந்தாண்டு அக்டோபரில் டாடா டிரஸ்ட் தலைவராக, அவரது சகோதரர், நோயல் டாடா பொறுப்பேற்றார். 75 வயதை தாண்டிய டாடா டிரஸ்ட் நியமன இயக்குநர்கள் மறுநியமனம் தொடர்பாக, ஒவ்வொரு ஆண்டும் முடிவு செய்யப்பட வேண்டும் என, புதிய தீர்மானத்தை டாடா டிரஸ்ட் நிறைவேற்றியது.
இதன்படி, தற்போது 77 வயதாகும் விஜய் சிங், டாடா டிரஸ்டின் சார்பாக, மீண்டும் டாடா சன்ஸ் குழுமத்தின் நியமன இயக்குநராக தொடர வேண்டுமா என்பது குறித்து, நேற்ற நடந்த கூட்டத்தில் விவாதம் நடந்தது.
இதில், விஜய் சிங்கை மீண்டும் நியமிப்பதற்கு, நான்கு அறங்காவலர்களான மெஹ்லி மிஸ்திரி, பிரமித் ஜாவேரி, ஜஹாங்கீர் மற்றும் டேரியஸ் காம்பட்டா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் இருந்து விஜய் சிங் விலகினார். இருப்பினும், அவர் தொடர்ந்து, டாடா டிரஸ்டின் அறங்காவலராக நீடிப்பார்.
பின், மெஹ்லி மிஸ்திரியை, டாடா டிரஸ்ட் சார்பில் டாடா சன்ஸ் குழுமத்தின் இயக்குநராக நியமிக்க, நான்கு அறங்காவலர்களும் முயற்சி செய்தனர்.
ஆனால், டாடா டிரஸ்டின் தலைவர் நோயல் டாடா மற்றும் அறங்காவலர் வேணு சீனிவாசன் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எந்தவொரு நியமனமும் டாடா குழுமத்தின் பாரம்பரிய மதிப்புகளுக்கும், சரியான நடைமுறைகளுக்கும் உட்பட்டு இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
கிட்டத்தட்ட 27 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் சந்தை மதிப்பு கொண்ட டாடா சன்ஸ் குழுமத்தின் எதிர்கால செயல்பாடுகளை, டிரஸ்டிகள் எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என விவாதம் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.