மும்பையில் ரூ.3,500 கோடிக்கு இடம் வாங்கியது ரிசர்வ் வங்கி
மும்பையில் ரூ.3,500 கோடிக்கு இடம் வாங்கியது ரிசர்வ் வங்கி
ADDED : செப் 12, 2025 01:26 AM

மும்பை:ரிசர்வ் வங்கி, மும்பையின் முக்கிய வணிக பகுதியான 'நரிமன் பாயின்ட்' பகுதியில் உள்ள 4.16 ஏக்கர் நிலத்தை, 3,472 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் இருந்து இந்த இடத்தை வாங்கியுள்ளது.
கடந்த 5ம் தேதி இந்த இடத்துக்கான பத்திரப் பதிவு நடைபெற்றுள்ளது. முத்திரை வரியாக 208.30 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. சொந்த பயன்பாடுக்காகவும், வணிக ரீதியான காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் என, ரிசர்வ் வங்கி ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் தலைமையகம் தெற்கு மும்பையின் போர்ட் என்ற இடத்தில் உள்ளது. தற்போது கைமாறியுள்ள இந்த இடம், கடந்த 2023ல் மகாராஷ்டிரா அரசால், மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இந்த இடத்தை வைத்துக்கொள்ளவும், விற்கவும் மும்பை மெட்ரோவுக்கு முழு உரிமை வழங்கப்பட்டது. ரிசர்வ் வங்கி, கடந்தாண்டு நவம்பரில் இந்த இடத்தை வாங்க விருப்பம் தெரிவித்தது.இங்கு அரசு அலுவலகங்கள் மற்றும் ஒரு அரசியல் கட்சியின் பழைய அலுவலகம் உள்ளிட்டவை இருந்தன.
முதலில், இந்த அலுவலகங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என, ரிசர்வ் வங்கியிடம் தெரிவிக்கப்பட்டது. விவாதங்களுக்குப் பின், இந்த கோரிக்கை கைவிடப்பட்ட து. இதற்கு பதிலாக, பரஸ்பரம் ஒப்புக்கொண்ட தொகையை ரிசர்வ் வங்கி செலுத்தி, இடத்தை வாங்கியுள்ளது.