யுனிகார்ன் அந்தஸ்தை இழந்த 4 ஆன்லைன் கேம் ஸ்டார்ட் அப்கள்
யுனிகார்ன் அந்தஸ்தை இழந்த 4 ஆன்லைன் கேம் ஸ்டார்ட் அப்கள்
ADDED : செப் 12, 2025 01:27 AM

மும்பை:பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்கள் தடை செய்யப்பட்டதால், ட்ரீம் 11 மற்றும் மூன்று முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், யுனிகார்ன் அந்தஸ்தை இழந்துள்ளன.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் 100 கோடி டாலர், அதாவது 8,800 கோடி ரூபாய் மதிப்பு கொண்டவை யுனிகார்ன் என குறிப்பிடப்படுகின்றன.
அடிமையாக்கும் மற்றும் பண இழப்பை ஏற்படுத்தும் ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பெரும்பாலும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களாக துவங்கப்பட்ட இவற்றில், ட்ரீம் 11, கேம்ஸ் 24X7 உள்ளிட்ட பல நிறுவனங்கள், அபார வளர்ச்சி கண்டு, யுனிகார்ன் அந்தஸ்தை பெற்றிருந்தன.
அரசின் தடையால், இவற்றின் மதிப்பு மளமளவென சரிந்ததன் காரணமாக, ட்ரீம் 11, கேம்ஸ் 24X7, கேம்ஸ்கிராப்ட், மொபைல் பிரீமியர் லீக் ஆகிய நான்கு நிறுவனங்கள் யுனிகார்ன் அந்தஸ்தை இழந்துள்ளன. இவற்றின் மதிப்பு, 100 கோடி டாலருக்கு கீழ் இறங்கி விட்டது.
ரியல் மனி கேம் எனப்படும், பணம் வைத்து விளையாடும் இதுபோன்ற செயலிகளின் பயனாளர்கள் எண்ணிக்கை வேகமாக சரிந்து வருவதாகவும் ஏ.எஸ்.கே பிரைவேட் வெல்த் ஹரூன் இந்தியா 2025 அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.