'ஓசூர் டெக் எக்ஸ்போ-2025' 200 ஸ்டால்களுடன் துவக்கம்
'ஓசூர் டெக் எக்ஸ்போ-2025' 200 ஸ்டால்களுடன் துவக்கம்
ADDED : செப் 20, 2025 12:53 AM

ஓசூர்:'தி இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் இந்தியா' ஓசூர் மைய பிரிவு சார்பில், மூக்கண்டப்பள்ளி ஹில்ஸ் ஹோட்டலில், 'ஓசூர் டெக் எக்ஸ்போ- 2025' என்ற தலைப்பில், 3 நாள் கண்காட்சி துவங்கியது.
காணொளி வாயிலாக கண்காட்சியில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி பேசியதாவது:
ஓசூர் வளர்ந்து வரும் தொழில் நகராக உள்ளது. இங்கு ஆட்டோ மொபைல்ஸ், மருந்து, ஜவுளி, நுகர்வோர் சார்ந்த பொருட்கள் மற்றும் ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம், ஏரோஸ் பேஸ் காரிடார் ஆகியவை ஓசூரை நல்ல வளர்ச்சிக்கு கொண்டு செல்லும்.
புதிய தொழிற்சாலைகள், முதலீடுகள் வரும். ஓசூரில் சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாடு முழுதும் கனரக தொழில்கள் மற்றும் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
கண்காட்சியில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்கள், பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளில் இயங்கும் நிறுவனங்கள் என மொத்தம், 200க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்துள்ளன.
சிறு, குறு மற்றும் பெரிய தொழில் சார்ந்த நிறுவனங்கள், ஆர்டர்களை பெறும் வகையில், நேரடியாக பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளன. கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்.
கண்காட்சியில் தொழில்துறை, ஆட்டோமேஷன் கட்டிங் டூல்ஸ், லேசர் மெஷின் ரோபாட்டிக்ஸ், பேக்கிங் அன்ட் பேக்கேஜிங், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் இடம் பெற்றுள்ளன