இந்தியாவை தலைமையிடமாக்க பானாசோனிக் நிறுவனம் திட்டம் புதிய தொழிற்சாலை அமைக்க முடிவு
இந்தியாவை தலைமையிடமாக்க பானாசோனிக் நிறுவனம் திட்டம் புதிய தொழிற்சாலை அமைக்க முடிவு
ADDED : செப் 20, 2025 12:51 AM

புதுடில்லி:பானாசோனிக் நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக, பானாசோனிக் லைப் சொல்யூஷன்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தடாஷி சிபா தெரிவித்துள்ளார்.
வொயிட் குட்ஸ் எனப்படும் வாஷிங் மெஷின், ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களுக்கான மத்திய அரசின் பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்தியா வழங்கும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜப்பானை மையமாகக் கொண்ட செயல்பாடுகளுக்கு பதிலாக, இனி இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சர்வதேச அளவில், பானாசோனிக் பொருட்களுக்கான வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. நுகர்வோர் மின்சார பொருட்கள் விற்பனையில் தான் நிறுவனம் பிரபலம் என்றாலும், இந்திய வணிகத்தின் வருவாயில் பாதி, பி 2 பி எனும் தொழில்துறை நிறுவன பொருட்கள் விற்பனை வாயிலாகவே கிடைக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வொயிட் குட்ஸ் பிரிவுக்கான உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, மத்திய அரசு மீண்டும் கால அவகாசம் வழங்கி உள்ளது. இதன்படி கடந்த 15ம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.