பெட்ரோல் காருக்கு ஜி.எஸ்.டி., குறைப்பு மின்சார கார்கள் விற்பனைக்கு சிக்கல்
பெட்ரோல் காருக்கு ஜி.எஸ்.டி., குறைப்பு மின்சார கார்கள் விற்பனைக்கு சிக்கல்
ADDED : செப் 20, 2025 12:39 AM

புதுடில்லி:பெட்ரோல், டீசல், மற்றும் சி.என்.ஜி., கார்களுக்கான ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த கார்களின் விலை வரும் 22ம் தேதி முதல் குறையவுள்ளது. இதனால், மின்சார கார் விற்பனை பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஜி.எஸ்.டி., குறைப்பால், மின்சார கார்களுக்கும், எரிபொருளில் ஓடும் கார்களுக்கும் இடையேயான விலை வித்தியாசம் அதிகரித்துள்ளது. அதாவது, பெட்ரோல், டீசல் கார்கள் விலை குறைவாகவும், மின்சார கார் விலை அதிகமாகவும் உள்ளது.
வரும் பண்டிகை காலத்தில், இது மின்சார கார்களின் விற்பனையை பாதிக்கலாம் என கருதப்படுகிறது.
ஜி.எஸ்.டி., குறைப்புக்குப் பின், பெட்ரோல், டீசல் எரிபொருள் பயன்படுத்தும் கார்களின் விலை 40,000 ரூபாய் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை குறைந்திருக்கிறது. இதனால், மின்சார கார்களை வாங்குபவர்கள் இனி ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் மின்சார கார் சந்தையில் 70 சதவீத பங்குடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. ஒரே மாடலின் பெட்ரோல், டீசல், சி.என்.ஜி., மற்றும் மின்சார கார்களை அது விற்பனை செய்கிறது. ஜி.எஸ்.டி., குறைப்பால் இந்நிறுவனத்தின் மின்சார கார் விற்பனை அதிகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
மாருதி சுசூகி நிறுவனம் அதன் ஆல்டோ, செலெரியோ, மற்றும் வேகன் ஆர் போன்ற மாடல்களின் விலையை 1.30 லட்சம் ரூபாய் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. இது பண்டிகை காலத்தில் எரிபொருள் வாகனங்களுக்கான தேவையை மேலும் அதிகரிக்கும்.
விலையுயர்ந்த கார்களைப் பொறுத்தவரை, வரி குறைப்பின் தாக்கம் பெரிய அளவில் இருக்காது என மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.