மின்சார மூன்று சக்கர வாகனங்களுக்கான மானியத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு
மின்சார மூன்று சக்கர வாகனங்களுக்கான மானியத்தை நிறுத்த மத்திய அரசு முடிவு
ADDED : ஜன 01, 2026 01:15 AM

புதுடில்லி: 'பி.எம்., இ - டிரைவ்' திட்டத்தின் கீழ், மின்சார மூன்று சக்கர வாகனங்களுக்கான இலக்கு எட்டப்பட்டதை அடுத்து, இதற்கான மானியத்தை நிறுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, 'பேம்' திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு, கடந்தாண்டு பி.எம்., இ- - டிரைவ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வரும் 2026, மார்ச் 31 வரை செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு 10,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 857 கோடி ரூபாயை, அதிகபட்சமாக 2.90 லட்சம் மின்சார மூன்று சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயித்து இருந்தது.
இந்நிலையில், மத்திய கனரக தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
மின்சார மூன்று சக்கர வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு முன்கூட்டியே எட்டப்பட்டுள்ளது. எனவே, கடந்த டிச.,26ம் தேதிக்கு பின் இப்பிரிவில் மானியம் கேட்டு விண்ணப்பிக்க இயலாது. தற்போது மின்சார மூன்று சக்கர வாகனங்கள் பயன்பாடு 32 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

