ரூ.800 கோடி மதிப்பில் 3 தொழில் முதலீடுக்கு ஒப்புதல்
ரூ.800 கோடி மதிப்பில் 3 தொழில் முதலீடுக்கு ஒப்புதல்
ADDED : செப் 10, 2025 12:22 AM

சென்னை:தமிழகத்தில், 3,500 வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், 800 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று தொழில் முதலீடுகளுக்கு, சென்னை, 'மெப்ஸ்' சிறப்பு பொருளாதார மண்டலம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை தாம்பரத்தில் உள்ள, 'மெப்ஸ்' சிறப்பு பொருளாதார மண்டலத்தின் இணை மேம்பாட்டு ஆணையர் ஆர்தர் வோர்ச்சுயோ தலைமையில் தொழில் ஒப்புதல் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, பொறியியல் மற்றும் தளவாடம் ஆகிய துறைகளில், 3,500 வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், 800 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில், 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவன தொழில் பூங்காவில், 'குளோபல் டெக்னாலஜீஸ்' நிறுவனம், 644 கோடி ரூபாய் முதலீட்டில் தன் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய உள்ளது.
வி.வி.டி.என்., டெக்னாலஜீஸ் நிறுவனம், திருப்பூர் மாவட்டம், பொள்ளாச்சியில், 101 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
சுபெனோ இந்தியா நிறுவனம், கோவை, 'எல்காட்' சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள டைடல் பூங்காவில், 4.77 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.
இதனால், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, பொறியியல் உள்ளிட்ட துறைகளில், 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்