புதிய, பழைய விலை பட்டியல் ஷோரூம்களில் வைக்க உத்தரவு
புதிய, பழைய விலை பட்டியல் ஷோரூம்களில் வைக்க உத்தரவு
ADDED : செப் 10, 2025 12:20 AM

புதுடில்லி:ஜி.எஸ்.டி., குறைப்புக்கு முந்தைய மற்றும் இப்போதைய விலை சரிவு பட்டியலை, வாகன நிறுவனங்கள், வாடிக்கையாளர் பார்க்கும்படி காட்சிப்படுத்துமாறு மத்திய கனரக தொழில் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அமைச்சக அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., விகிதம் குறைக்கப்பட்டதால், கார்கள், இருசக்கர வாகனங்கள் விலை கணிசமாக குறையத் துவங்கியுள்ளது. இந்த விலை வேறுபாட்டை வாடிக்கையாளர்கள் எளிதாக அறிந்து கொள்ள, வாகன நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கள் வினியோக நிறுவனங்களின் ஷோரூமில், முந்தைய விலை, தற்போதைய விலை என கார்கள், இருசக்கர வாகனங்களின் விலைப்பட்டியலை பார்வையில் படும்படி இடம்பெறச் செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, போஸ்டர்களை தயாரித்து, கனரக தொழில் துறையின் ஒப்புதலுக்கு வாகன நிறுவனங்கள் அனுப்பத் துவங்கிஉள்ளன.
மாநில மொழிகளிலும் ஆங்கிலத்திலும் இந்த போஸ்டர்கள் அச்சிடப்பட்டு, அமைச்சக அனுமதி பெற்று, காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
வாகன நிறுவனங்கள், வினியோகஸ்தர்கள் இதை மேற்கொள்ள 20 முதல் 30 கோடி ரூபாய் செலவாகும் என்றும் இந்த செலவை தயாரிப்பு நிறுவனம் ஏற்பதா, வினியோக நிறுவனம் ஏற்பதா என்பதை அவர்களுக்குள் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளனர்.