/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கணவரை கொன்ற ஆசிரியை, கள்ளக்காதலருக்கு மரண தண்டனை
/
கணவரை கொன்ற ஆசிரியை, கள்ளக்காதலருக்கு மரண தண்டனை
ADDED : ஆக 24, 2025 05:38 AM
ஷிவமொக்கா: காதலனுடன் சேர்ந்து, கணவரை கொன்ற ஆசிரியை, அவரது கள்ளக்காதலருக்கு, மரண தண்டனை விதித்து, பத்ராவதி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதி தாலுகாவின், ஜன்னாபுரா கிராமத்தில் வசித்தவர் இம்தியாஸ், 38. இவர் ஆசிரியராக பணியாற்றினார். இவர் அந்தரகங்கா கிராமத்தில் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய லட்சுமி, 25, என்பவரை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கள்ளத்தொடர்பு அதன்பின் சொரபாவின் தெலகுந்தா கிராமத்தின் தொடக்கப் பள்ளியில், இம்தியாஸ் பணியாற்றி வந்தார். பத்ராவதியின், அந்தரகங்காவில் லட்சுமி பணியாற்றியதால், என்.டி.பி., அலுவலகம் அருகில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது இம்தியாஸ், அவ்வப்போது சொரபாவில் இருந்து, பத்ராவதிக்கு வந்து மனைவியை பார்த்துச் சென்றார்.
லட்சுமியின் பக்கத்து வீட்டில், அவரது பால்ய நண்பர் கிருஷ்ணமூர்த்தி வசித்து வந்தார். அக்கம், பக்கத்தில் வசித்ததால், இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் அன்யோன்யமாக இருப்பதை பார்த்து, இம்தியாஸ் திட்டினார்.
கடந்த 2016 ஜூலை 7ம் தேதி இரவு 7:30 மணியளவில், தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது தன் கள்ளக்காதலர் கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து, இரும்பு ராடால் அடித்து கணவரை கொலை செய்தார். கிருஷ்ணமூர்த்தியின் கூட்டாளி சிவராஜின் உதவியுடன், உடலை பத்ராவதிக்கு கொண்டு சென்றனர். பத்ராவதியின் புதிய பாலத்தில் இருந்து உடலை கயிறு கட்டி, பத்ரா ஆற்றில் வீசினர்.
மூன்று பேர் கைது பத்ராவதிக்கு சென்ற இம்தியாஸ், மீண்டும் சொரபாவுக்கு திரும்பாததால், அவரது சகோதரர், நியூடவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது, இம்தியாஸ் கொலையானதை கண்டுபிடித்தனர். லட்சுமி, அவரது கள்ளக்காதலர் கிருஷ்ண மூர்த்தி, சிவராஜு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் விசாரணை முடித்து, பத்ராவதி நகரின் 4வது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் மூவரின் குற்றம் உறுதி செய்யப்பட்டது. எனவே லட்சுமிக்கும், கிருஷ்ண மூர்த்திக்கும் மரண தண்டனை; இவர்களுக்கு உதவியாக இருந்த சிவராஜுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி இந்திரா மைலசாமி, நேற்று தீர்ப்பளித்தார்.
அபராத தொகையை, கொலை செய்யப்பட்டவரின் தாய்க்கு நிவாரணமாக வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.