/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
விவசாயத்தை அழிக்கும் வேர்ப்புழுக்கள்
/
விவசாயத்தை அழிக்கும் வேர்ப்புழுக்கள்
PUBLISHED ON : செப் 17, 2025

செடி மற்றும் மரங்களின் வேர்களைத் தாக்கி அழிக்கக்கூடியது வேர்ப்புழுக்கள். இப்புழுக்கள் கரும்பு, நிலக்கடலை, உருளைக்கிழங்கு, நெல் (விதைப்பு), கொய்யா, தென்னை, பாக்கு, புகையிலை மற்றும் பயிறு வகைப்பயிர்களை குறிப்பாக சல்லிவேர்த் தொகுப்பு உள்ள செடிகளின் வேர்களைத் தாக்கி அழிக்கும். வேர்களை மட்டுமின்றி மண்ணில் உள்ள அங்கக கரிமங்களையும் வயலில் உள்ள எருக்களையும் உண்டு வாழும்.
இவை ஆண்டு முழுவதும் காணப்பட்டாலும் ஜூன் முதல் டிசம்பர் வரையான மழைக்காலங்களில் இப்புழுக்கள், தாய் வண்டுகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும். மே, ஜூன் மாதங்களில் பெய்யும் முதல் பருவமழையின் போது தாய் வண்டுகள் அதிகளவில் வெளியாகி இனப்பெருக்கம் செய்கிறது. அங்கக கரிமங்கள் நிறைந்த காற்றோட்டம், ஈரப்பதம் வாய்ந்த மண்ணில் அதன் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் போது அதிகளவில் உற்பத்தியாகி சேதம் விளைவிக்கிறது.
வாழ்க்கை சுழற்சி
முட்டையிலிருந்து தாய்வண்டு வரையுள்ள பருவம் ஓராண்டில் முடிகிறது என்றாலும் புழுப் பருவம் மட்டுமே வேர்களைத்தாக்கும். தாய் வண்டுகளால் வேர்களுக்கு சேதம் இல்லை. மே, ஜூனில் பின் அந்திப்பொழுதில் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்களில் இருந்து தாய் வண்டுகள் வெளிவந்து அருகிலுள்ள மரங்களுக்கு சென்று ஆண் வண்டுடன் கூடிய பின் விடியற்காலையில் மண்ணிற்குள் சென்று உருண்டை வடிவ வெள்ளைநிற முட்டைகளை இடும். வயலைச் சுற்றி இலந்தை, முருங்கை, புளியமரம், ஆலமரம், வேப்பமரம், நாவல், கொய்யா, சப்போட்டா, மாமரங்கள் இருந்தால் தாய் வண்டுகள் அதன் இலைகளைத் தின்று சேதம் விளைவிக்கும். வேர்ப்புழுக்கள் 96 முதல் 228 நாட்கள் வரை அதன் வாழ்க்கை சுழற்சிக்கு எடுத்துக் கொள்கிறது.
இரண்டு முதல் நான்காம் பருவம் வரை வேகமாக வேர்களைக் கடித்து உண்டு சேதப்படுத்தும். வெள்ளை நிறப்புழுக்கள் கூட்டுப்புழு பருவத்திற்கு மாறும் முன் உண்ணுவதை நிறுத்திவிட்டு மண்ணில் 40 முதல் 70 செ.மீ ஆழத்திற்கு சென்றுவிடும். பின் வண்டுகள் உறக்க நிலையிலேயே அடுத்த பருவமழை வரும் வரை மண்ணிற்குள் இருக்கும்.
சேதார நிலை
பெரும்பாலான பயிர்களில் இளம்புழுக்கள் சல்லி வேர்களின் சிறிய வேர்க்கற்றைகளையும் வளர்ந்த புழுக்கள் முழு வேர்த்தொகுப்பையும் உண்டு 20 முதல் 80 சதவீத அளவிற்கு சேதம் விளைவிக்கும். தாக்கப்பட்ட செடிகள் காய்ந்து வாடி காணப்பட்டால் புழுக்களின் தாக்கம் மண்ணிற்குள் இருக்கிறது என்று அர்த்தம்.
கட்டுப்படுத்தும் முறை
வாழ்க்கைச் சுழற்சியில் இப்புழுக்கள் வளர்வதற்கு ஏற்ற வெவ்வேறு சாதகமான நிலைகளை அழிப்பதன் மூலம் புழுக்கள் பயிர்களைத் தாக்காமல் பாதுகாக்கலாம். முதல் பருவமழையின் போது இரவு 7:00 மணி முதல் 10:00 மணி வரை விளக்குப்பொறி அமைத்து தாய் வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
வயலைச் சுற்றியுள்ள புதர்களை அகற்ற வேண்டும். மரங்கள் இருந்தால் கவாத்து செய்து இலைகளை வெட்டி விடலாம். அந்தி வேளையில் மரங்களில் கூடியுள்ள வண்டுகளை அழிக்க ஒரு மரத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.5 மில்லி இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல் கலந்து தெளிக்கலாம். இனக்கவர்ச்சிப் பொறிகளை மரங்களில் வைத்து தாய் வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம். மரங்களின் கீழே விழுந்துள்ள வண்டுகளைச் சேகரித்து அழிக்க வேண்டும்.
புழுக்களைக் கட்டுப்படுத்துதல்
கோடையில் நிலத்தை நன்றாக உழுவதன் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்கள் வெளிவரும். அவை வெயிலில் காய்வதோடு பறவைகள் உண்பதன் மூலம் கட்டுப்படுத்தப்படும். ஈரமாக உள்ள தொழுஉரம் வேர்ப்புழுக்களின் உற்பத்திக்கும், பெருக்கத்திற்கும் காரணமாக இருப்பதால் காய்ந்து மட்கிய உரத்தையே அடியுரமாக இட வேண்டும்.
ஒரே பயிரைத் தொடர்ந்து பயிரிடாமல் பயிர் சுழற்சி முறையைக் கையாளவேண்டும். முதல் உழவின் போதே ஒரு எக்டேருக்கு 33 கிலோ கார்போபியூரான் 3 ஜி அல்லது 10 கிலோ குளோரன் டரனிலிபுரோல் 0.4 சதவீதம் ஜி என்கிற குருணை வடிவ பூச்சிக்கொல்லி மருந்துகளை மண்ணில் இடுவதன் மூலம் வேர்ப்புழுக்களின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
விதைநேர்த்தி
ஒரு கிலோ விதைக்குத் தேவையான தண்ணீருடன் 6.5 முதல் 12 மில்லி குளோர்பைரிபாஸ் 20 ஈ.சி மருந்து அல்லது இரண்டு மில்லி இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல். கலந்து இரவு முழுவதும் ஊறவிட வேண்டும். அதை மறுநாள் எடுத்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.
கரும்பில் வேர்ப்புழுவின் தாக்கத்தால் சேதம் அதிகம் என்பதால் கரணைகளை ஊறவைக்க நிறைய தண்ணீர் தேவைப்படும். அதற்கேற்ப மருந்தின் அளவை அதிகரிக்க வேண்டும். தாய் வண்டுகளின் நடமாட்டத்தை வயலில் கண்ட மூன்று வாரங்கள் கழித்து, ஒரு எக்டேருக்கு 500 லிட்டர் தண்ணீரில் 4 லிட்டர் அளவு குளோர்பைரிபாஸ் 20 ஈ.சி அல்லது 3.5 லிட்டர் குயினால்பாஸ் 25 ஈ.சி கலந்து பயிர்களின் வேர்ப்பகுதியை நனைப்பதன் மூலம் வேர்ப்புழுக்களை முற்றிலும் கட்டுப்படுத்தலாம்.
மெட்டாரைசியம் அனிசோபிலியே, பிவேரியா பேசியானா பூஞ்சாணங்களில் ஏதாவது ஒன்றை வேர்ப்புழுக்களின் மீது தெளித்தும், மட்கிய தொழு உரத்துடன் கலந்து வயலில் இட்டு கட்டுப்படுத்தலாம்.
-விஷ்ணுப்ரியா
இணைப்பேராசிரியை (பூச்சியியல் துறை)
சேதுபாஸ்கரா
வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
காரைக்குடி
அலைபேசி: 94425 42476