sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பொய்மையும் வாய்மையிடத்து...

/

பொய்மையும் வாய்மையிடத்து...

பொய்மையும் வாய்மையிடத்து...

பொய்மையும் வாய்மையிடத்து...

2


PUBLISHED ON : செப் 21, 2025

Google News

PUBLISHED ON : செப் 21, 2025

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''மூன்று மாசமா உங்க பென்ஷன் பணம் வங்கியிலே, 'க்ரெடிட்' ஆகலை,'' என்றாள், சிவராமனின் மனைவி மைதிலி.

''ஏன், என்ன காரணம்,'' என, படபடத்தார், சிவராமன்.

''என்ன வழக்கம் போல, 'லைப் சர்டிபிகேட்' கொடுத்திருக்க மாட்டீங்க. எல்லாம் நான் பார்த்துக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு மறந்திட வேண்டியது,'' என்றாள்.

அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர், சிவராமன். நன்றாக பாடம் கற்பிப்பவர் என, பெயர் பெற்ற சிவராமனுக்கு, வலைதளம் ஒரு மாயதளம்.

வலைதளம் மூலம் பொருட்கள் வாங்குவது, வங்கிக் கணக்கை சரிபார்ப்பது, பயணத்திற்கு டிக்கெட் பதிவு செய்வது எல்லாமே, மனைவி மைதிலி தான்.

''நம்ம வங்கியிலே, 'லைப் சர்டிபிகேட்' வாங்கலாம். இன்னிக்கே போய் பண்ணிக்கிட்டு வாங்க,'' என்றாள், மைதிலி.

மனைவி சொல்லை தட்ட முடியாமல், வங்கிக்கு புறப்பட்டார், சிவராமன். வங்கியில் கூட்டம் அவ்வளவாக இல்லை. வலைதளம், ஏ.டி.எம்., வசதிகள் இருக்கும் போது, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைவு தான்.

''சார், 'லைப் சர்டிபிகேட்' பார்த்துக்கிற அலுவலர் இன்னிக்கு வரலை. நாளைக்கு வாங்க பண்ணிடலாம்,'' என, வருந்தும் குரலில் சொன்னார், வங்கி ஊழியர் ஒருவர்.

''இன்று நமக்கு நேரம் சரியில்லை,'' என, நொந்தபடி கிளம்பினார், சிவராமன்.

அப்போது, ''சார், மேனேஜர் உங்களை கூப்பிடறார்,'' என்றபடி ஓடி வந்தான், வங்கியின் ப்யூன்.

மே னேஜர் கேபினில், சிவராமனை அமரச் சொன்ன மேனேஜர், அவருடைய பென்ஷன் பேப்பர் மற்றும் ஆதாரை சரிபார்த்து, 'லைப் சர்டிபிகேட்' தயார் செய்தார்.

நாளைக்கு வருமாறு கூறிய அலுவலரை அழைத்து, ''கார்த்திக், 'லைப் சர்டிபிகேட்' சரிபார்த்து கொடுக்கிற வேலை எல்லாருக்கும் தெரியும். அப்படியிருக்கும் போது, ஒரு அலுவலரை கூப்பிட்டு செய்ய சொல்லாம, எதுக்கு நாளைக்கு வாங்கன்னு சொல்றீங்க. குறிப்பா, மூத்த குடிமக்களை எதுக்கு அலைய விடணும்,'' என, கடிந்து கொண்டார், மேனேஜர்.

அதற்குள், சூடான காபி கொண்டு வந்து வைத்தான், பியூன்.

''நான், சார் கிட்டே கொஞ்சம் பேசணும். பத்து நிமிஷம் யாரையும் உள்ளே அனுப்பாதே,'' என, உத்தரவிட்டார், மேனேஜர்.

''உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கா சார்,'' எனக் கேட்டார், மேனேஜர்.

அப்போதுதான், மேனேஜர் பெயர், சுதாகர் என்பதை, மேஜை மீதிருந்த பெயர் பலகையிலிருந்து அறிந்து கொண்டார், சிவராமன்.

''மன்னிக்கணும், எனக்கு சட்டுன்னு ஞாபகம் வரலை. நீங்க எங்கிட்ட படிச்ச மாணவனா?'' என, கேட்டார், சிவராமன்.

''ஆமாம் சார், நீங்க என்னை, நீன்னே சொல்லலாம். நான் இப்படி வங்கி மேனேஜர் வேலையில இருக்கிறதுக்கு, நீங்க தான் சார் காரணம்,'' என்றான், சுதாகர்.

''இல்லை, சுதாகர். ஒரு ஆசிரியரா நாங்க எல்லாம் எங்க கடமையைச் செய்யறோம். நாங்க சொல்லித் தரதை மனசிலே வாங்கிக்கிட்டு, அதுக்கு மேலே நிறைய படித்து, பரீட்சையிலே நல்ல மதிப்பெண் வாங்கறவங்க, வாழ்க்கையிலே முன்னுக்கு வர்றாங்க. இதுக்கெல்லாம் உங்க உழைப்பு, விடாமுயற்சி தான் காரணம்,'' என்றார்.

''நீங்க சொல்றதை நான் ஒத்துக்கிறேன். ஆனால், என்னோட விஷயத்திலே, நீங்க எனக்கு மிகப் பெரிய உதவி பண்ணி இருக்கீங்க. ஒன்பதாவது வகுப்பிலே, சேகர் என்ற மாணவனோட, 'பார்க்கர்' பேனா திருட்டுப் போனதா, வகுப்பிலே புகார் கொடுத்தது ஞாபகம் இருக்கா, சார்,'' என்றான், சுதாகர்.

''சேகர், 'பார்க்கர்' பேனா, நல்லா ஞாபகம் இருக்கு, சுதாகர். நீ தோற்றத்தில ரொம்ப மாறிட்டா மாதிரி இருக்கு,'' என்றவர் கடந்த கால நினைவுகளில் மூழ்கினார்.

வ சதியான குடும்பத்துப் பையன், சேகர். எப்போதும், புதியதாக அப்பா வாங்கிக் கொடுக்கும் பொருட்களை பள்ளிக்கு எடுத்து வந்து, மற்ற மாணவர்களிடம் காண்பித்து, பெருமை அடித்துக் கொள்வான். அவனைச் சுற்றி நண்பர்கள் கூட்டம் எப்போதும் இருக்கும்.

அன்று காலை, புதிய, 'பார்க்கர்' பேனா ஒன்றை எடுத்து வந்து, எல்லாருக்கும் காண்பித்தான், சேகர். பளபளக்கும் அந்த பேனா, பட்டை தீட்டாமல் எழுதும், 'நிப்' மாணவர்களைக் கவர்ந்தது. பலர் மனதிலும் இதைப் போன்ற பேனா கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் எழுந்தது.

ஆனால், நம் நாட்டில் கிடைக்காத, விலையுயர்ந்த பொருள். அயல் நாட்டிலிருந்து வாங்கி வந்தது என்பதை அறிந்த போது, எல்லா மாணவர்களுக்கும் சேகர் மேல் பொறாமை வந்தது.

பள்ளிக்கூடத்தில் முதல் இரண்டு வகுப்புகள் முடிந்தவுடன், 15 நிமிடம் மாணவர்களுக்கு இடைவெளி உண்டு. வகுப்பிற்கு வெளியே வந்து, 15 நிமிடம் மாணவர்கள், நுாலகம், பள்ளி அலுவலகம் என, வேலை ஏதாவது இருந்தால் சென்று முடித்து விட்டு, மூன்றாவது வகுப்பு நேரத்திற்கு வகுப்பறையில் நுழைவர்.

வகுப்பாசிரியர் சிவராமன் வகுப்பறையில் நுழையும் போது, பேச்சு சத்தம் அதிகமாக இருந்தது. பதட்டத்துடன் இருந்தான், சேகர். வகுப்பறையில் நுழைந்தவுடன் அழுது கொண்டே சிவராமனிடம் புகார் செய்தான்.

'சார், இன்னிக்கு நான் ஒரு, 'பார்க்கர்' பேனா கொண்டு வந்தேன். நண்பர்கள் எல்லாரும் வாங்கிப் பார்த்தனர். இரண்டாம் கால வகுப்பு முடிந்து வெளியே போன போது, பேனாவை என்னுடைய பையில் வைத்து விட்டுப் போனேன்.

'திரும்பி வந்து பார்த்தால் பேனாவைக் காணவில்லை. வகுப்பில் யாராவது எடுத்திருக்க வேண்டும். பேனாவைத் தொலைத்து விட்டது தெரிந்தால், அப்பா கோபித்துக் கொள்வார்...' எனச் சொல்லி அழ ஆரம்பித்தான், சேகர்.

பேனாவைப் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்த, சிவராமன், வகுப்பு முழுவதையும் ஒரு பார்வை பார்த்தார். சற்றே யோசித்தவர், மாணவர்களை பள்ளி மைதானத்தில் போய் விளையாடச் சொன்னார்.

'நான் பேனாவைக் கண்டுபிடித்தப் பின், உங்களை வகுப்பறைக்கு கூப்பிடுகிறேன்...' என்றார்.

சேகரின் அருகிலும், முன், பின் வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்களின் பைகளை சோதனை செய்த போது, அவர் தொலைந்து போன பேனாவை கண்டுபிடித்தார். மாணவர்களை வகுப்பிற்கு அழைத்த சிவராமன், பேனாவை சேகரிடம் கொடுத்தார்.

'சேகர், உன்னுடைய பேனா, நீ அமர்ந்திருந்த இடத்திற்கு சற்று தள்ளி, பெஞ்சின் அடியில் இருந்தது. நீ பையில் வைத்த போது, கீழே விழுந்து உருண்டு போய் இருக்கலாம். பேனா தொலைந்த உடன், உனக்கு உன் நண்பர்கள் மேலே சந்தேகம் எழுந்தது.

'பள்ளிக்கு விலை உயர்ந்த பொருட்களை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். ஒரு நல்ல மாணவனைக் கூட சில சமயம், மனம் தடுமாறி, அவனைத் திருடத் துாண்டும்...' என, அறிவுரை செய்தது, நினைவுக்கு வந்தது, சிவராமனுக்கு.

இ ப்போது, சுதாகர் தொடர்ந்தான்...

''சார், எனக்கு சின்ன வயசிலேயிருந்து கெட்ட பழக்கம் ஒன்று இருந்தது. ஏதாவது நல்ல பொருட்களைப் பார்த்தால் எடுத்து வைச்சுக்கணும் அப்படின்னு தோணும். எங்க வீட்டிலே அந்த மாதிரி எடுத்து வைச்சுக்கிட்டு இருக்கேன். அது திருட்டுன்னு எனக்கு தோணலை.

''அன்னிக்கு சேகர், 'பார்க்கர்' பேனாவைப் பார்த்தவுடனே, அது எனக்கு வேணும் அப்படின்னு தோணித்து. 15 நிமிட இடைவெளியில், வெளியிலே போகறதுக்கு முன்னாலே அவசர அவசரமா எடுத்துப் பையிலே வெச்சுக்கிட்டேன்.

''பேனாவைக் கண்டுபிடிக்க நீங்க வெளியில எல்லாரையும் போக சொன்னீங்க. வெளியிலே வந்த பின்னாலே நான், என்ன காரியம் பண்ணியிருக்கேன். இன்னிக்கு கண்டிப்பா மாட்டிக்கப் போறேன்னு நினைச்சேன்.

''பொய் பேசக் கூடாதுன்னு புத்திமதி சொல்ற நீங்க, எடுத்தது நான் தான்னு தலைமை ஆசிரியரிடம் சொல்வீங்க. அப்ப எனக்கு, 'டிசி' தான். எனக்கு திருடன்கிற பட்டம். என்னால எங்க குடும்பத்துக்கு கெட்ட பேர் வரும். அதனால, வீட்டை விட்டு ஓடிப் போய் தற்கொலை பண்ணிக்கணும்ன்னு முடிவு எடுத்தேன்.

''ஆனால், நீங்க பேனா கீழே கிடந்ததுன்னு, சொன்ன உடனே, கடவுள் என்னை காப்பாத்திட்டார்ன்னு சந்தோஷப் பட்டேன். அவசர அவசரமா வைச்சதிலே பேனா கீழே விழுந்திருக்கும்ன்னு முடிவு பண்ணினேன்.

''இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம், அடுத்தவர் பொருளைத் திருடற எண்ணம் அடியோடு நின்னு போச்சு. அப்படி தோணும் போதெல்லாம், 'பார்க்கர்' பேனா திருட்டை நினைச்சுப்பேன்.

''இருந்தாலும், திருடினது தப்பு, அதை சொல்லணும்ன்னு அப்பா, அம்மாகிட்டே சொல்லி, 'இனிமே இந்த மாதிரி தப்பு செய்ய மாட்டேன்'னு, சத்தியம் பண்ணினேன். உங்களைப் பார்த்து செய்த தப்பைச் சொல்லி மன்னிப்பு கேட்கணும்ன்னு நினைச்சேன். என்னை மன்னிச்சிடுங்க, சார்,'' என்றான்.

''சுதாகர், செய்த தப்பை உணர்ந்து, அதற்காக மன்னிப்பு கேட்கிறது உயர்ந்த குணம். அந்த குணம் உங்கிட்டே இருக்கு. இப்ப யாருக்கும் சொல்லாத ஒரு உண்மையை, நான் சொல்றேன்...

''அன்னிக்கு, 'பார்க்கர்' பேனாவை நான், உன்னுடைய பையிலிருந்து தான் எடுத்தேன். ஆனால், உண்மை வெளியே சொன்னால், உன்னுடைய எதிர்காலம் பாதிக்கப்படும்ன்னு, எனக்கு மனசில தோணியதால், நான் யார் கிட்டேயும் சொல்லலை,'' என்றார், சிவராமன்.

சற்று திகைத்து, நா தழுதழுக்க, ''சார், நீங்க செய்த உதவி, என்னிக்குமே நான் மறக்க முடியாதது. ஆனால், தப்பு செய்த என்னை காட்டி கொடுக்கக் கூடாதுன்னு, எனக்காக பொய் சொன்னீங்களா?'' என்றான், சுதாகர்.

''சுதாகர், ஒரு ஆசிரியர் வேலை, மாணவனுக்கு பாடம் எடுக்கிறது மட்டுமில்லை. அவனை நல்வழிப்படுத்தி, நல்ல குடிமகனாக மாத்தறதும் தான்.

''உண்மையை சொல்லி, நல்ல மாணவன் சரிவுக்கு காரணமாக இருக்கிறதுக்கு, பொய் சொல்லி, திருந்த சந்தர்ப்பம் கொடுக்கிறது என்னுடைய கடமைன்னு நினைச்சேன். அதனால் தான் பொய் சொன்னேன்.

''நான் நினைச்சது சரின்னு, நீ நிரூபிச்சிட்ட. நல்லாப் படிச்சு, உயர்ந்த பதவிக்கு வந்திருக்கே. செஞ்ச தப்பைச் சொல்லி எங்கிட்ட மன்னிப்பும் கேட்டே. என்னுடைய மாணவன் ஒழுக்கசீலன் என்ற சந்தோஷத்தோட நான் கிளம்பறேன்,'' எனச் சொல்லி கிளம்பினார், நல்லாசிரியர், சிவராமன்.

பொய்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.

கே. என். சுவாமிநாதன்






      Dinamalar
      Follow us