
நவராத்திரி, ஒன்பது நாட்களும் குறிப்பிட்ட நிறங்களில் புடவை அணியலாம். அதில் தனிச் சிறப்பு உள்ளது. பச்சை, மஞ்சள், நீலம், கருநீலம், சிவப்பு, கிளிப்பச்சை, இளஞ்சிவப்பு, பச்சை அரக்கு பார்டர் மற்றும் வெங்காய கலர். இப்படி முடியாதவர்கள் முதல் மூன்று நாட்கள் சிவப்பு, அடுத்த மூன்று நாட்கள் மஞ்சள், கடைசி மூன்று நாட்கள் பச்சை நிற புடவை அணியலாம்
* குழந்தைகளுக்கு நம் நாட்டு கலாசாரம், பண்பாடு, இதிகாச புராண விஷயங்களை இந்த சமயத்தில் தெரிய வைக்க சரியான சந்தர்ப்பம், நவராத்திரி பண்டிகை. ராமாயணம், மகாபாரதம் கதைகளையும் முக்கியமான நிகழ்வுகளையும், 'தீம்' ஆக அமைக்கலாம். ஹாரிபாட்டர் கதைகள், டோரா, புஜ்ஜி போன்றவற்றைக் கூட அமைக்கலாம். பழமையும், புதுமையும் பாலம் அமைத்து இந்த நவராத்திரியை களை கட்ட வைக்கும்
* நவராத்திரி சமயங்களில், அம்பாள், ஊசி மேல் அமர்ந்து தவம் செய்வதாக கூறுவர். அதனால், அந்த சமயங்களில் வீட்டில் கிழிந்த துணிகளைத் தைக்கக் கூடாது. முடிந்தவரை ஊசியைப் பயன்படுத்தாமல் இருப்பது நலம் என்ற நம்பிக்கை உள்ளது
* கொலு பார்க்க வரும் குழந்தைகளுக்கு, கார்ட்டூன், சித்திரம் வரைதல் போன்று அவர்களுக்கு உபயோகமான புத்தகங்களை அளித்தால் மிகவும் சந்தோஷப்படுவர்
* நவராத்திரியில், 'பிளவுஸ் பிட்' கொடுத்தால் விசேஷம். ஆனால், அது அதிகம் பயன்படாமல் கை மாறிக் கொண்டே இருக்கிறது. அதனால், சுமங்கலிகளுக்கு நவதான்ய பிள்ளையார், குபேர விளக்கு, மூங்கில் பூக்கூடை இதுபோல் வாங்கி கொடுக்கலாம்.
* ஒவ்வொரு வருடமும் புதிதாக மூன்று பொம்மைகளாவது வாங்க வேண்டும் என்பது
சம்பிரதாயம். நம் வீட்டுக்கு மட்டுமல்ல, கோவில்களில் நடக்கிற கொலுவுக்கும்
பொம்மைகளை வாங்கிக் கொடுப்பது விசேஷம்
* கொலு, 'ஷாப்பிங்'
செல்பவர்கள், ஒருநடை புத்தகக்கடைக்கு சென்று, ராமகிருஷ்ண பரமஹம்சரின்
பொன்மொழிகள், விவேகானந்தர், ரமண மகரிஷி, காஞ்சி பெரியவரின் உபதேசங்கள்
மற்றும் 'வாழ்வில் சிறக்க, மன அமைதி பெற என்ன செய்யலாம்?' இப்படி பல
குட்டிப் புத்தகங்கள் 10 ரூபாய்க்கு கிடைக்கின்றன. 50 ரூபாய், 'பிளவுஸ்
பிட்'டில் கிடைக்கும் அதே திருப்தி, இந்த புத்தகத்திலும் கிடைக்கும்
* கொலு பார்க்க வருபவர்களுக்கு தாம்பூலத்துடன், ஒரு பூந்தொட்டியை தந்து,
'பூமி வெப்பம் அடைவதை தடுக்க, வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்;
முடியாதவர்கள் இந்தப் பூந்தொட்டியையாவது வளர்ப்போம்...' என, சொல்லி
கொடுக்கலாம்.