PUBLISHED ON : மார் 29, 2026

ரகுவின் கார் சத்தத்தை தொடர்ந்து, வாட்ச்மேன் கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது.
''சுதா,'' என்று, உள்ளே நுழையும்போதே, மனைவியை கூப்பிட்டுக் கொண்டே நுழைந்தார், கணவன், ரகு.
''எதுவாயிருந்தாலும் முதல்ல கொஞ்சம் ஆசுவாசப்படுத்திட்டு அப்புறம் பேசலாமே,'' என்றாள், சுதா.
சமையல் செய்யும், மாமி காபியும், போண்டாவும் கொண்டு வந்தாள். சாப்பிட்டுக் கொண்டே கேட்டார், ரகு...
''நம் பையன், ராகேஷ் இன்னும் வரலையா?''
''ராகேஷ், மருமகள் ஜனனி ரெண்டு பேரும் வர இன்னும் நேரமிருக்கே. என்ன விசேஷம், ஏதாவது முக்கியமா பேசணுமா?''
''அவன் தனிக்குடித்தனம் போறது பத்தி ஏதாவது சொன்னானா?''
''உங்களுக்கு தான் தெரியுமே, அவன் வாடகைக்கு வீடு தேடறது,'' என்றாள், சுதா.
''சுதா, நீயாவது எடுத்து சொல்லக்கூடாதா? கடலாட்டம் நம்ம வீடு இருக்கும் போது எதுக்கு தனி வீடு? அவனுடைய, 'ஸ்டார்ட்டப்' கம்பெனி இன்னும் சூடு பிடிக்கலை. பாங்க் லோனுக்கு அலைஞ்சிக்கிட்டு இருக்கான். ஜனனியின் சம்பளத்தில் மட்டுமே வாடகை குடுத்துட்டு, குடும்பச் செலவையும் எப்படி சமாளிக்க முடியும்?'' என்றார், ரகு.
''நீங்களே எவ்வளவோ சொல்லியாச்சு. கேக்கறதாயில்லை. விழுந்து எழுந்துக்கட்டும். தானா புரியும்,'' என்றாள், சுதா.
இரவு உணவு தயார் செய்ய சமையலறைக்கு சென்றாள், சுதா. மனசு மட்டும் கடந்த கால சம்பவங்களை அசை போட்டது...
ர கு, சொந்தமாக ஒரு கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வந்தார். அப்பா, அம்மா, தம்பி, தங்கை என்ற சொந்தங்களுடன் அவர் வாழ்க்கை ஆரம்பித்தது. காலச் சக்கரம் சுழன்றது. சுதா, அவருடைய வாழ்வில் வந்தாள். ரகுவின் சொந்தங்களை தன்னுடையதாகவே பாவித்தாள். ராகேஷ் அவர்களின் ஆஸ்திக்கு ஒரு பிள்ளை. ஏழு ஆண்டுகள் கழித்து பிறந்தாள் மகள், ரம்யா.
வெளிநாட்டில் கம்ப்யூட்டர் சம்பந்தமான பெரிய படிப்பு படித்து, இந்தியா திரும்பி சுயமாக ஒரு சிறு தொழில் ஆரம்பிக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தான், ராகேஷ். தன்னுடன் காலேஜில் படித்த, ஜனனியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட போது, சுதாவும், ரகுவும் மறுக்கவில்லை. ஜனனியின் குடும்பம், ரகு அளவு அந்தஸ்து இல்லை என்றாலும் ஓரளவு வசதி படைத்தவர்கள்.
ஒரு பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியில் நல்ல வேலையிலிருந்தாள், ஜனனி. நல்ல பெண்தான். ஆனால், தான் நினைத்ததை சாதிக்கணும்ன்னு ஒரு பிடிவாதம். ஒரே பெண் என்று பெற்றோர் ரொம்ப செல்லம் கொடுத்ததன் விளைவு அது.
'ராகேஷ், இந்த திருமணத்தில் எனக்கு ஒரே ஒரு நிபந்தனை தான். சீக்கிரமே நாம் தனிகுடித்தனம் போய் விடணும். நமக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும்...' என்று, திருமணத்துக்கு முன்பே சொல்லியிருந்தாள்.
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அப்பா ரகுவின் கம்பெனியில் வேலை செய்ய இருவரும் மறுத்து விட்டனர்.
காலை, 7:00 மணிக்கு தான் எழுந்திருப்பாள், ஜனனி. குளித்து ஆபீசுக்கு போகத்தான் நேரமிருக்கும். ஒரு தாயைப் போல தான் அவளை தாங்கினாள், சுதா. ஒரு சொல் கூட தவறாக பேசியதில்லை. ஜனனி, மரியாதையாக பழகினாலும், அவர்களுடன் ஒட்டவில்லை.
வீட்டு வேலை எதுவுமே செய்ய முன்வரவில்லை. ஏதோ ஒரு ஹோட்டலில் தங்குவது போல தான் தங்கினாள்.
இ ரவு உணவை தயார் செய்து, சுதா மேஜையில் வைக்கவும், ராகேஷும், ஜனனியும் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
''சுதா, சாப்பிட வரலாமா?'' என, ரகுவின் குரல் கேட்டது.
''இதோ எல்லாம் ரெடி. ராகேஷும், ஜனனியும் வந்துடட்டும். தயவு செஞ்சு சாப்பிடும்போது, வேலை விஷயமா பேசாதீங்க,'' என, எச்சரித்தாள், சுதா.
தான் ஊரில் இருக்கும் நாட்களில் இரவு எல்லாரும் சேர்ந்து சாப்பிடணும்ன்னு, ரகுவின் கட்டளை. பல விஷயங்களை பத்தி அலசியபடி சாப்பாடு முடிந்தது.
''படுக்க போகும் முன், என்னுடைய அறைக்கு வாங்க. ஒரு விஷயம் பேசணும்,'' என்றார், ரகு.
இரவு 10:00 மணிக்கு இருவரும் அவருடைய அறைக்கு வந்து அமர்ந்தனர்.
''ராகேஷ், பாங்க் லோன் என்னப்பா ஆச்சு?'' என்று கேட்டார், ரகு.
''முயற்சி பண்ணிட்டிருக்கேன், அப்பா. சில தொழிலதிபர்கள் புது கம்பெனியில முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்களிடமும் கேட்டிருக்கிறேன். நடக்கும்ன்னு நம்பிக்கையிருக்கு.''
''ஏம்பா, நான் கேக்கறேன்னு ரெண்டு பேரும் தப்பா நினைக்காதீங்க. நீ, 'செட்டில்' ஆகும்வரை, ஜனனியின் சம்பாத்தியத்தில் தான் குடும்பம் ஓடணும். இப்போ தனிக்குடித்தனம் அவசியமா?'' என்று கேட்டார்.
அவன் பதில் சொல்லும் முன், முந்திக் கொண்டாள், ஜனனி.
''மாமா, நீங்க கவலைப்படாதீங்க. சமாளிக்க முடியுமென்ற நம்பிக்கை இருக்கறதால தானே இந்த முடிவெடுத்தோம்,'' என்றாள்.
ரகுவுக்கு முகத்திலடித்தாற்போல இருந்தது.
''ஆமாம்பா. எங்களால் சமாளிக்க முடியும்,'' என்று மனைவிக்கு, 'ஜால்ரா' அடித்தான், ராகேஷ்.
''சரிப்பா. ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்க,'' என்றார், ரகு.
ஒ ரு வாரம் சென்றது. வீடு தேடும் படலம் தொடர்ந்தது. ரகுவோ, சுதாவோ வீட்டைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை. ராகேஷ் ஒரு பக்கம் வீடு தேடும் படலம், இன்னொரு பக்கம் லோனுக்கு அலையும் படலம்ன்னு ஓய்ந்து போனான்.
''நீங்க, ஏன் உங்கப்பா கம்பெனியிலேயே வேலை செய்யக் கூடாது,'' என, இந்தக் கேள்வியை சில முதலீடு செய்பவர்கள் கேட்டனர்.
''என் காலிலே எனக்கு நிற்கணும்ன்னு சொல்வது தானே,'' என்றாள், ஜனனி.
வீடு பிடித்தால் தெரு பிடிக்கலை. தெரு பிடித்தால் வீடு பிடிக்கலை. இரண்டும் பிடித்தால், வாடகை பிடிக்கலை. இப்படியே வீடு தேடும் படலம் ஓடிக் கொண்டிருந்தது. ஜனனியோ தனியாகப் போவதில் பிடிவாதமாக இருந்தாள். இப்படியே, ஒரு மாதம் ஓடியது. நாளுக்கு நாள் நம்பிக்கை இழந்து வந்தான், ராகேஷ்.
''ஜனனி, நான் வேலை தேட ஆரம்பிக்கப் போறேன். எவ்வளவு நாள் தான் அப்பா, அம்மா வீட்டில் தண்டச்சோறு சாப்பிடறது?''
''ராகேஷ், நம்பிக்கையை மட்டும் விட்டுடாதே. சிரமப்படாமல் எதுவுமே நடக்காது. இன்னும் கொஞ்ச நாள் பார்க்கலாம்,'' என்றாள், ஜனனி.
''நேத்திக்கி பார்த்த வீட்டுக்கான புரோக்கர் போன் பண்ணி, இரண்டு நாளுக்குள் சம்மதம் தெரிவிக்க சொன்னார். ஒரு முடிவுக்கும் வர முடியலை,'' என்றான், ராகேஷ்.
அ ன்று இரவு சாப்பிட வந்த, ராகேஷைப் பார்த்த, சுதாவுக்கும், ரகுவுக்கும் அவனுடைய முகத்தைப் பார்த்ததும் வயிற்றை கலக்கியது. அவர்கள் வெளியே போனதும், சுதாவால் அழுகையை அடக்க முடியவில்லை.
''எனக்கு அவனைப் பார்க்கவே முடியலை. கடவுள் தான் வழி காட்டணும்,'' என்றாள், சுதா.
''எனக்கு ஒரு யோசனை தோணுது. அதை இன்னிக்கி, 'ட்ரை' பண்ணி பார்க்கறேன்,'' என்றார், ரகு.
''என்ன யோசனை?'' என்றாள், சுதா.
''பொறுத்திருந்து பார்,'' என, மர்மமாக சிரித்தார், ரகு.
சாப்பிட்டவுடன் தன் அறைக்கு சென்றார், ரகு. மறுநாளுக்கு தேவையானதை கவனிக்க சமையலறைக்கு சென்றாள் சுதா. ராகேஷும், ஜனனியும் ஹாலில் வந்து உட்கார்ந்தனர். சோபாவின் பக்கத்தில் இருந்த மேஜையில் சில போட்டோ ஆல்பங்கள் இருந்தன.
எடுத்து பார்க்க ஆரம்பித்தாள், ஜனனி.
''இது என்னுடைய சின்ன வயசு ஆல்பங்கள்,'' என்று சொல்லிக்கொண்டே, ராகேஷும் பார்க்க ஆரம்பித்தான். ஒவ்வொரு போட்டோவாக பார்த்து விபரம் சொன்னான்.
''ஜனனி, இது நான் பிறந்தபோது, என் தாத்தா ஒரு பெரிய விழா மாதிரி கொண்டாடினாராம். இது, அப்பா எனக்கு சைக்கிள் ஓட்ட கத்து கொடுத்தபோது எடுத்த படம். பாவம் அப்பா, படாதபாடு படுத்துவேன். கூடவே ஓடி வருவார்.
''பாட்டி எனக்கு கதை சொல்லி தான் சாதம் ஊட்டுவாங்க. எனக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தபோது ராப்பகல் கண் முழித்து, அம்மாவும், பாட்டியும் எனக்கு பணிவிடை செஞ்சாங்க. தாத்தா நிறைய நீதிக் கதைகள் சொல்லியிருக்கிறார். படிப்பதற்கு நல்ல புத்தகங்கள் கொடுப்பார்.
''நான் இன்னிக்கு ஒரு நல்ல மனிதனாக இருப்பது இவங்களுடைய அறிவுரையால் தான். அம்மா என்னுடைய பிறந்த நாளில், விதவிதமான, 'கேக்'குகள் தயாரித்து என்னுடைய பிரண்ட்ஸுக்கு கொடுப்பாங்க.
''அத்தை தான் என்னை, 'ஹோம்வொர்க்' செய்ய வைப்பாங்க. படிப்பில் என்னோட சந்தேகங்களை தீர்த்து வைத்து, புரியும்படி சொல்லி தருவாங்க. சித்தப்பா என்னை சர்க்கஸ், பொருட்காட்சி எல்லாம் அழைத்துப் போவார். அத்தை, தாத்தா, பாட்டி, சித்தப்பா எல்லாருக்குமே என்னுடைய வளர்ச்சியில் பெரும் பங்கு உண்டு.
''ஜனனி, கூட்டுக் குடும்பத்தில் இருக்கற சுகமே தனி. ஒருத்தருக்கு ஒருத்தர் துாணாயிருந்து தாங்கினர். உங்கப்பா, ஒரே மகன். நீ, அவர்களுக்கு ஒரே பெண். உனக்கு அதன் அருமை புரியாது. நாம் தனிக்குடித்தனம் போகலாம். ஆனால், நாளைக்கு நமக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு இந்தப் பாசமும், பந்தமும் கிடைக்குமா?
''குழந்தை வேலைக்காரர்களிடமும், குழந்தைகளுக்கான காப்பகத்திலேயும் தான் வளரும். தாத்தா, பாட்டிக்கு இருக்கும் அக்கறையும், பாசமும் அவர்களுக்கு இருக்குமா? உறவுகளின் அருமையும், பெருமையும் அவர்களுக்கு எப்படி புரியும்?'' என்று கூறி, கண் கலங்கினான், ராகேஷ்.
ஜனனியின், கண்களிலும் நீர் நிரம்பியது.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், பேச ஆரம்பித்தாள்...
''ராகேஷ், நீ இன்னும் ஒரு மாசம், 'ஸ்டார்ட்டப்' கம்பெனி ஆரம்பிக்க, பணத்துக்கு முயற்சி பண்ணு. கிடைக்கலேன்னா உன்னோட அப்பா கம்பெனியிலேயே, 'ஜாயின்' பண்ணு. அவருடைய உதவியை ஏற்றுக்கொண்டால், நம்ம கவுரவம் குறைஞ்சுடாது. நீ, அவர்கிட்ட பேசு. முதல் காரியம் நாளைக்கு அந்த புரோக்கருக்கு போன் பண்ணி, வீடு வேண்டாம்ன்னு சொல்லிடு. நம்ம குழந்தைகள், நான் அனுபவிக்காத அன்பை அனுபவிக்கட்டும்,'' என்றாள்.
''என்னை புரிஞ்சுகிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்,'' என்றான், ராகேஷ்.
யதேச்சையாக அந்தப் பக்கம் வருவது போல வந்த, ரகுவின் காதில், ஜனனி பேசியது கேட்டது. ஒன்றுமே தெரியாததுபோல, ''என்னப்பா, இரண்டு பேரும் இன்னும் துாங்கலையா?'' என்று கேட்டார்.
''அப்பா! நாளைக்கு உங்களிடம் கொஞ்சம் பேசணும்,'' என்றான், ராகேஷ்.
''பேசலாமே, இப்போ அமைதியா துாங்கு,'' என்றார், ரகு.
தன் அறைக்குத் திரும்பிய, ரகு, ''நான் போட்ட திட்டம் வெற்றி,'' என்று, சுதாவிடம் கூறி சிரித்தார்.
புரியாமல் முழித்தாள், சுதா.
''சுதா, நாம் பேசி சாதிக்க முடியாததை, போட்டோ ஆல்பங்கள் சாதித்து விட்டன. கூட்டுக் குடும்பத்தின் அருமை, ஜனனிக்கு புரிஞ்சுது. நம்ம பையன் நம்மை விட்டு போக மாட்டான். நாளை பொறுத்திருந்து பார்,'' என்றார்.
''நான் இன்னிக்கி ராத்திரி நிம்மதியா துாங்குவேன்,'' என்றாள், சுதா.
பானு சந்திரன்
