
நவராத்திரி, ஒன்பது நாட்களும் தலை வாசற்படியை துடைத்து, கோலமிட்டு, மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, பூ துாவி, பூஜை செய்வது நல்லது. வாசலில் மாவிலை தோரணம் கட்டுவது அவசியம்
* நவராத்திரியில் வெறும் கோலம் மட்டும் போட்டால் போதாது; கட்டாயம் செம்மண் இட வேண்டும். எந்த வீட்டுக் கோலத்தில் செம்மண் இருக்கிறதோ, அங்கு தான் அம்பாள் மனமகிழ்ந்து வருவாள்
* செவ்வகமான, கொஞ்சம் குழிவான பழக்கூடை போல் பிளாஸ்டிக் தட்டு கிடைக்கிறது. அதில், இரு ஓரங்களையும் ஒரு கயிற்றால் கட்டுங்கள். பட்டுத் துணி போட்டு, தவழும் கிருஷ்ணன் பொம்மையை வைத்து, வளையல் ஸ்டாண்டில் மாட்டி விடுங்கள். வளையல் ஸ்டாண்டின் மேல் பகுதியில் பிளாஸ்டிக் பூவைச் சுற்றுங்கள். அழகான வண்ணத் தொட்டில், கொலுவை அலங்கரிக்கும்
* நீண்ட விளக்குகள் வீட்டில் இருந்தால், அவற்றுக்கு அம்மன் முகம் வைத்து, பார்டர் வைத்த ரவிக்கை துணியை கொசுவம் வைத்து புடவை கட்டவும். அதே நிறத்தில் சிறிது வெட்டி ஜாக்கெட் போல, 'பின்' செய்து, மாலை போட்டு அலங்கரிக்கலாம்
* மாக்கோலம் போடும் போது, அரைத்த அரிசி மாவோடு சிறிது, 'ஒயிட் கம்' சேர்த்து கோலம் போடலாம். ஒரு வாரம் ஆனாலும், கோலம் அழகாக புதுப் பொலிவுடன் லட்சுமிகரமாக ஒளி வீசும்
* மலை செய்ய வேண்டுமா? ஒரு சிறிய பானையை கவிழ்த்து வைத்து, மண்ணால் மூடினால், வேலை எளிது. மண்ணும் நிறைய தேவைப்படாது.
தரையில் ஒரு விரிப்பை விரித்துவிட்டு அதன் மேல் மணலைப் பரப்பி, பூங்கா, கிராமம், ஊர் எல்லாமே உருவாக்கலாம். கொலு முடிந்ததும் தரையைச் சுத்தம் செய்வதும் சுலபம்
* பூங்கா அமைக்கும் போது, இயற்கை காட்சி உள்ள படம் அல்லது அழகிய பூக்கள் உள்ள வாழ்த்து அட்டையை பின்புலமாக வைத்து அமைத்தால், பார்க்க ரம்மியமாக இருக்கும்
* மரத் துாளில் பச்சைக் கலர் சாயம் கலந்து, ஊற வைத்து உலர்த்தி விட்டால், பாசி படிந்த பாறைகள் போல் தெரியும். இதை மலை, காடு போன்ற இடங்களுக்கு பயன்படுத்தினால் இயற்கையாகவே பசுமையாகவும் இருக்கும்
* மலை செய்யும் போது, சுற்றிலும் விதைகளை துாவி செடிகளை வளரச் செய்வோம். நான்கைந்து நாட்கள் ஆனதும் வெயில் படாமல் படுத்து விடும். மாறாக, ஏரிகள் அல்லது நிலங்களில் இருக்கும் களிமண்ணில் வளர்ந்த புற்களை மொத்தமாகப் பெயர்த்து, மலையில் வைத்தால், 10 நாட்கள் ஆனாலும் பச்சை பசேலென இருக்கும்
* கொலுவில் வைக்கும் கலசக் குடத்தை சுற்றி, பார்டர் ஒட்டவும். ஆங்காங்கே சமிக்கி மற்றும் குந்தன் கற்களால் அலங்கரித்தால், தங்கக் கலசம் போல் ஜொலிக்கும்.
தொகுப்பு : எஸ். தாரிணி