PUBLISHED ON : செப் 21, 2025

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 40 வயது ஆண். வங்கி ஒன்றில், 'கிளார்க்' ஆக பணிபுரிகிறேன். என் மனைவியின் வயது: 34. பி.எட்., படித்து, தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக உள்ளார்.
எங்களுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை எங்களுக்கு குழந்தை இல்லை. டாக்டர்களிடம் பரிசோதித்ததில், என்னால், ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியாது எனக் கூறி விட்டனர்.
வேறு ஒருவர் உயிரணு மூலம், செயற்கை கருவுறுதல் செய்து, குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும், அதற்கு, சில லட்சங்கள் செலவாகும் என்றனர்.
குழந்தை இல்லாததால், எங்கள் இரு குடும்பத்தினரும் வருத்தம் அடைகின்றனர்.
எனக்கு ஒரு அக்கா உள்ளார். அவருக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். மனைவிக்கு, ஒரு தங்கை. அவள் திருமணத்துக்கு வரன் பார்த்து வருகின்றனர்.
டாக்டர் அறிவுரைப்படி, செயற்கை கருவுறுதல் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள எனக்கும், மனைவிக்கும் சம்மதம் தான். ஆனால், என் அம்மாவும், மாமியாரும் இதற்கு சம்மதிக்கவே மாட்டார்கள்.
இப்போது, மனதை தேற்றி, டாக்டர் கூறிய முறையில் கருத்தரிக்க சம்மதித்தாலும், எதிர்காலத்தில் குழந்தை வளர வளர, இது, நம் குழந்தை இல்லை என்ற நினைப்பு வந்துவிட்டால், என்ன செய்வது என்றும் தோன்றுகிறது.
உறவினர்களும், நண்பர்களும், எங்களை, 'குழந்தை உன்னை மாதிரி இல்லை, உன் மனைவி மாதிரியும் இல்லையே...' எனக் கூறிவிட்டால், அவமானமாகி விடுமே என, அஞ்சுகிறேன்.
உறவினர்களில், சிறு குழந்தைகள் இருந்தாலும், எடுத்து வளர்க்கலாம் என்றால், அதற்கும் வழியில்லை. ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுப்பதற்கு, இரு வீட்டு பெரியவர்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
ஒரே குழப்பமாக உள்ளது. நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன். எனக்கு நல்ல ஆலோசனை கூறுங்கள் அம்மா.
— இப்படிக்கு, உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு —
குழந்தையின்மை குறைபாட்டை நீக்க, கணவன் - மனைவி இருவர் முன்னும் கீழ்க்கண்ட தெரிவுகள் உள்ளன.
* தற்போதுள்ள நவீன மருத்துவத்தில் தீர்க்க முடியாத உடல் குறைகள் இருக்கிறதா? உரிய சிகிச்சை மூலம், குறையை நிவர்த்தி செய்ய முயலுங்கள்
* உறவினர் ஆண் ஒருவரின் விந்தணுவை தானமாக பெற்று, உன் மனைவியின் முட்டைக்கருவுடன் இணைத்து, செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளுதல். அந்த உறவுக்கார ஆண், உன் தம்பியாகவோ, அண்ணனாகவோ அல்லது சித்தப்பா, பெரியப்பா மகன்களில் ஒருவராய் இருக்கலாம்
* அனாதை இல்லத்திலிருந்து முறைப்படி ஒரு குழந்தையை தத்தெடுத்தல்
* கணவன் -- மனைவி தாம்பத்யத்தில் குழந்தை பெறுதல் உலகக்கட்டாயமா என்ன? மலடன்- - மலடி பட்டத்தை துாக்கி எறிந்து விட்டு, நீங்கள் இருவரும், 'உனக்கு நான், எனக்கு நீ' என, வாழுங்கள்.
ஆண்டுக்கு இருமுறை, இந்தியாவுக்குள் சுற்றுலா போங்கள். ஓய்வு பெற்ற பின் இருவரும் உலகச்சுற்றுலா போங்கள். உறவுக்கார குழந்தை ஒன்றின் கல்விச் செலவை, 'ஸ்பான்சர்' செய்யுங்கள்.
உங்களுக்கு குழந்தை இல்லாத விஷயத்தை, உங்கள் உறவுகளிடம் ஒரு பட்டிமன்ற விவாதப் பொருளாக ஏன் அனுமதிக்கிறீர்கள்?
உங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பது, உங்களின் சந்தோஷத்திற்கா அல்லது உறவினர்களின் திருப்திக்கா?
விந்து தானம் பெற்று உன் மனைவி கருத்தரித்தாலும், பிறக்கும் குழந்தை கட்டாயம், 50 சதவீதம் மனைவியின் சாயலைக் கொண்டிருக்கும். மனைவியின் மீது காதல் கொண்டிருக்கும் உனக்கு, அவளின் சாயலிலுள்ள குழந்தை இனிக்கும் தானே?
எந்த முடிவு எடுத்தாலும் நீயும், மனைவியும் எடுங்கள். இருவரும் மனம் விட்டு பேசுங்கள். எடுத்த முடிவை உங்கள் குலதெய்வம் கோவிலுக்கு போய், தெய்வத்தின் முன் அறிவியுங்கள்.
குரங்கு போல கிளைக்கு கிளை தாவாமல், எடுத்த முடிவில் உறுதியாக இருங்கள். சிறப்பான முடிவை எடுத்து, செயல்படுத்த பாருங்கள்.
காலத்தை தள்ளிப் போடாதீர்கள். இப்போதே, செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றாலோ, உறவினர் - அந்நியர் குழந்தையை தத்தெடுத்தாலோ, உங்கள் ஆயுட்காலத்தில் அவர்களை படிக்க வைத்து ஆளாக்கி, திருமணம் செய்து வைக்க முடியும்.
வாழ்த்துகள்!
-என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.