PUBLISHED ON : ஜூன் 21, 2026

சைக்கிள் கடைக்காரரின் வித்தியாசமான முயற்சி!
சைக்கிள் கடை நடத்தி வந்த ஒருவர், சமீபத்தில், 'மினி டெம்போ' வாகனத்தில் சைக்கிள் உதிரிபாகங்கள் மற்றும் பழுது நீக்கும் கருவிகளை ஏற்றி, 'சைக்கிள் ரிப்பேர்!' என்று கூவி, தெருத்தெருவாகச் சென்று கொண்டிருந்தார்.
அவரை பார்த்து, 'கடை என்ன ஆனது?' என்று கேட்டேன்.
அதற்கு அவர், 'பள்ளி விடுமுறை நாட்களில் சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் காட்டுவர், சிறார்கள். கடந்த விடுமுறையில், பல பெற்றோர், குழந்தைகளின் சைக்கிளை சர்வீஸ் செய்ய கடைக்கு கொண்டு வர முயன்றனர். ஆனால், சைக்கிளை துாக்கிக் கொண்டு வருவது அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.
'குழந்தைகளின் பெற்றோர், 'இவ்வளவு துாரம் கடைக்கு எடுத்து வர வேண்டுமா... அதற்கு பதிலாக கிரிக்கெட் அல்லது வேறு விளையாட்டு விளையாடு...' என்று, குழந்தைகளிடம் சொன்னாலும், அவர்கள் சைக்கிள் ஓட்டுவதையே பிடிவாதமாக தேர்வு செய்ததாக பெற்றோர் புலம்பினர்.
'பழுதான சைக்கிளை கடைக்கு கொண்டு வர மக்கள் சிரமப்படுகின்றனர். சைக்கிள் பழுது நீக்கும் தொழில் நலிவடைந்து வருவதற்கும், இதுவே காரணமாகிறது என்று உணர்ந்தேன். பழைய, 'மினி டெம்போ' வாகனம் ஒன்று வாங்கி, அதிலேயே தேவையான அனைத்து கருவிகளையும் வைத்து, அவரவர் வீட்டிற்கே சென்று சேவை செய்யத் துவங்கினேன்.
'தினமும் ஒவ்வொரு பகுதிக்கு சென்று, சைக்கிள்களை பழுது நீக்கி தருகிறேன். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் இந்த புதிய முயற்சியை பயன்படுத்திக் கொள்கின்றனர்...' என்றார்.
அவரது வித்தியாசமான முயற்சியை, நானும் மனதார பாராட்டினேன்.
ஒரு தொழில் பல காரணங்களால் நலிவடையலாம். அந்த காரணங்களை சரியாக கண்டறிந்து, காலத்திற்கேற்ற மாற்றங்களை செய்தால், அதே தொழிலை மேன்மையாக்கி, முன்னேற்ற முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
-அ.துரைமணி, நாகர்கோவில்.
புது முயற்சி!
திருநெல்வேலி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள, 'பெட்ரோல் பங்க்கில் ஒரு சிறிய அறை ஒதுக்கப்பட்டு, அதில், 'நீங்கள் படித்து முடித்த புத்தகங்கள் எதுவாக இருந்தாலும் இங்கு வைத்தால், பாளையங்கோட்டை சிறை கைதிகளுக்கு படிக்க கொடுப்போம்...' என்று எழுதி இருந்தது.
அங்கு இருந்தவரிடம் இதுகுறித்து விசாரித்ததில், 'ஆத்திரத்தில் தவறு செய்து, சிறையில் இருக்கும் படித்த இளைஞர்கள் மற்றும் வயது முதிர்ந்த ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள், ஏதாவது புத்தகம் படிக்க கிடைக்காதா என ஏங்குவதை கேள்விப்பட்ட எங்கள், 'பெட்ரோல் பங்க்' முதலாளி, இப்படி ஒரு யோசனை செய்தார். இதனால், நல்ல பலனும் கிடைக்கிறது...' என்றார்.
நானும் இதைப் பாராட்டி, என்னால் முடிந்த பழைய புத்தகங்களையும், சில புதிய புத்தகங்களையும் வாங்கி மாதந்தோறும் அங்கு சென்று வைக்கிறேன். எனக்கு, அதில் மன திருப்தியும் கிடைக்கிறது.
நீங்களும் செய்யலாமே!
- ஏ.அர்ச்சனா, திருநெல்வேலி.
சூழ்நிலைக்கு தக்க வேலை!
எங்கள் ஊரில், அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், முப்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் காலையில் வேலைக்கு செல்வதற்கு முன், சமையலுக்கு காய் நறுக்குவது பெரிய பிரச்னையாக இருந்தது.
இதை உணர்ந்த எங்கள் பக்கத்து வீட்டு பெண், அப்பிரச்னையை தீர்க்க முன்வந்தாள். அவள் கணவர், ஜவுளி கடை ஒன்றில் வேலை செய்கிறார். மகன், பத்தாம் வகுப்பு படிக்கிறான். மூவரும் விடியற்காலை, உழவர் சந்தைக்கு சென்று, காய்களை வாங்கி, பொரியல், குழம்புக்கென தனித்தனியாக நறுக்கி, நுாறு, இருநுாறு கிராம், கால், அரை கிலோ அளவில் பாக்கெட்டுகளில் அழகாக, 'பேக்' செய்து, தந்தையும், மகனும் எல்லா வீடுகளுக்கும், தேவையான காய்களை, 'டோர் டெலிவரி' செய்து விடுவர். அதற்குரிய பணத்தை, வாரம் ஒருமுறை வசூலித்துக் கொள்வர்.
மீதமாகும் காய்களை கலவையாக செய்து, ஒரு ஹோட்டலில் கொடுத்து விடுவர். அதிலும், கணிசமான தொகை கிடைக்கிறது.
இந்த வேலைகள் அனைத்தும் காலை, 9:30 மணிக்குள் முடிந்து விடும். கணவர், ஜவுளி கடை வேலைக்கு செல்ல, மகன் பள்ளி செல்ல, அந்த பெண் தான் சொந்தமாக வைத்திருக்கும் தையற் கடைக்கு சென்று விடுவாள்.
காய் வியாபாரத்தில் இட வாடகை, 'கரன்ட் பில்' எதுவும் கிடையாது. எல்லா செலவும் போக மாதம், 20 ஆயிரம் ரூபாய் கிடைப்பதாக கூறுவாள், அப்பெண்.
சூழ்நிலைக்கு தக்கவாறு தொழில் செய்வதைப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. இன்று, இதுபோல், வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன; செய்வதற்கு தான் மனம் வேண்டும்!
- எஸ்.சுந்தரமூர்த்தி, முசிறி.
பந்தியில் தந்த காகிதப்பை!
அண்மையில் எங்கள் ஊரில் நடந்த என் உறவினர் வீட்டு திருமணத்துக்கு போயிருந்தேன். திருமணம் முடிந்து சாப்பிட போன போது, சாப்பாட்டு பந்தியில் இலையில் பரிமாறப்பட்ட, ஸ்வீட், வடை, பழம் போன்றவற்றை சாப்பிட முடியாதவர்கள், வீட்டுக்கு எடுத்துச் செல்ல வசதியாக இலையின் பக்கத்தில் ஒரு காகிதப்பையும் வைத்திருந்தனர். சாப்பிட வந்தவர்கள், சாப்பிட தவிர்க்கும் உணவுப்பொருட்களை இலையிலேயே போட்டு விட்டு, யாருக்கும் பயன்படாமல் குப்பைத் தொட்டிக்கு போவதை தடுக்க, திருமண வீட்டினர் எடுத்திருந்த முயற்சி பாராட்டுக்குரியது.
நம் குடும்பத்தில் நடக்கும் திருமணம், உபநயனம் போன்ற விசேஷங்களிலும் இந்த நல்ல செயலை கடைபிடிக்கலாமே!
- ஆர்.கீதா, ஆலுவா, கேரளா.
