PUBLISHED ON : செப் 14, 2025

ஒரு காட்டில் இருந்த சிங்கத்துக்கு மிகவும் வயதாகி விட்டதால், முன்பு போல் வேட்டையாட முடியவில்லை. எனவே, அது, தன் குகையை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்தது.
பசியின் கொடுமையால் சாகும் தருவாயில் இருந்த சிங்கம், 'கடவுளே! எனக்கு மிகவும் பசிக்கிறது. என்னால் முன்பு போல் வேட்டையாட முடியவில்லை. என்னை காப்பாற்றுங்கள்...' என, கதறியது.
சிங்கத்தின் பசியை போக்க விரும்பிய, கடவுள், ஒரு சிறு முயலை, அதன் குகைக்கு அனுப்பி வைத்தார். முயலைப் பார்த்தவுடன், அதை அடித்துத் தின்று, கடவுளுக்கு நன்றி கூறியது, சிங்கம்.
அடுத்தநாள், சிங்கத்தின் பசிக்கு, ஒரு மானை அனுப்பி வைத்தார், கடவுள். அதற்கு அடுத்தநாள், ஒரு கழுதையை அனுப்பி வைத்தார்.
இப்படியே தினமும், முயல், மான், கழுதை என, மாறி மாறி சிங்கத்தின் குகைக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார், கடவுள். உட்கார்ந்த இடத்திலேயே தின்று தின்று நன்றாக கொழுத்து விட்டது, சிங்கம்.
ஒருநாள், 'கடவுளே! தினமும் முயல், மான், கழுதை என, தின்று தின்று என் நாக்கு செத்து விட்டது. இன்று என் பசிக்கு ஒரு யானையை அனுப்பி வையுங்கள்...' என, கோரிக்கை வைத்தது, சிங்கம்.
ஆனால், கடவுள் வழக்கம் போல் அன்றைய தினப்படி, ஒரு முயலை அனுப்பி வைத்தார். அதைப் பார்த்ததும் ஏமாற்றமடைந்து, முயலை குகையை விட்டு விரட்டி விட்டது, சிங்கம்.
பின்னர், 'கடவுளே! நான் யானையைத் தானே கேட்டேன். நீங்களோ வழக்கம் போல் முயலை அனுப்பி வைத்து, என்னுடைய வீரத்தை கேவலப்படுத்தி விட்டீர்கள். என் பசிக்கு யானை தான் வேண்டும். இல்லாவிடில் பட்டினி கிடந்து உயிரைத் துறப்பேன்...' என, பிடிவாதம் பிடித்தது.
கடவுளும் வேறு வழியின்றி, சிங்கத்தின் கோரிக்கையை ஏற்று, யானையை அனுப்பி வைத்தார். யானையைப் பார்த்ததும், அதன் மீது பாய்ந்தது, சிங்கம்.
வயதான சிங்கத்தின் பாய்ச்சலில் இருந்து விலகி, தன் தும்பிக்கையால் சிங்கத்தை துாக்கிப் போட்டு, காலால் மிதித்துக் கொன்றது, யானை. தன்னுடைய பேராசையால் வீணாக உயிரை விட்டது, சிங்கம்.
கடவுள், தன் பக்தர்கள் விரும்பும் எல்லாவற்றையும் செய்வதில்லை. பக்தர்களுக்கு எந்த நேரத்தில் எதை செய்தால் நன்மை கிடைக்குமோ, அதை அவர் நிச்சயமாக செய்வார். பக்தர்கள் விரும்பியபடி செய்தால், அது அவர்களுக்கு தீமையாகவே முடியும்! கடவுள் நமக்கு எதை கொடுத்தாலும், அதை நாம் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் கேட்பதை அவர் கொடுக்காவிட்டால், குறை எதுவும் சொல்லக் கூடாது. கடவுள் நமக்கு எதை செய்தாலும் அது, நம் நன்மைக்காகவே இருக்கும்!
அருண் ராமதாசன்