
அஜித் கொடுத்த அதிர்ச்சி!
ஒ ரு படத்தில் நடிக்க, 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த விஜய், சினிமாவுக்கு குட் பை சொல்லப் போகும் நிலையில், தற்போது, அஜித்குமார் தன் சம்பளத்தை, 150 கோடி ரூபாயில் இருந்து, 170 கோடி ரூபாயாக உயர்த்தி விட்டுள்ளார்.
மேலும், சாதாரண குடும்ப கதையாக இருந்தாலும், காட்சிகளை பிரமாண்டமாக எடுக்க வேண்டும். தான் நடிக்கும் படங்களை, 300 முதல் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க வேண்டும் என்றும், தயாரிப்பாளர்களிடம் நிபந்தனை போட துவங்கி இருக்கிறார். இதனால், அவரை வைத்து படம் தயாரிக்க முண்டியடித்த சில நிறுவனங்கள், தற்போது பின்வாங்க துவங்கி உள்ளன.
— சினிமா பொன்னையா
'ஓவர் பில்ட்-அப்'பை தவிர்க்கும் நெல்சன்!
ர ஜினி நடிப்பில், ஜெயிலர் 2 படத்தை இயக்கி வரும், நெல்சனிடம், அந்த படம் குறித்து பத்திரிகையாளர் யாராவது கேள்வி எழுப்பினால், எந்த, 'பில்ட்-அப்'பான செய்திகளையும் கூறுவதில்லை.
'எதுவாக இருந்தாலும், படம் திரைக்கு வரும் போது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இப்போதே படத்தை பற்றி, ஆகா ஓகோ என்று பேசினால், நீங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தியேட்டருக்கு வருவீர்கள்.
'உங்களது எதிர்பார்ப்பு படத்தில் இல்லை என்றால், 'படம் வேஸ்ட்...' எனச் சொல்லி, ஒரே வார்த்தையில் படத்திற்கு எதிர்மறையான, 'இமேஜை' உருவாக்கி விடுவீர்கள். அதனால் இப்போதே, ஜெயிலர் -2 படத்துக்கு, 'ஓவர் பில்ட்-அப்'பை, ஏற்படுத்த, நான் விரும்பவில்லை...' என்கிறார், இயக்குனர் நெல்சன்.
— சி.பொ.,
அடக்கி வாசிக்கும், ருக்மணி வசந்த்!
ஏஸ் மற்றும் மதராஸி படங்களை அடுத்து, மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார், கன்னட நடிகை, ருக்மணி வசந்த்.
'தற்போதைக்கு தமிழில் மார்க்கெட்டை பிடிப்பது தான் முக்கியம். அதனால், அழுத்தமான கதாபாத்திரங்களை மட்டும் தேடி வருகிறேன். மார்க்கெட்டை பிடித்து ரசிகர்களை சம்பாதித்து விட்டாலே, சினிமாவில் கோடிகளை சம்பாதிப்பது ரொம்ப எளிது...' என்கிறார், ருக்மணி வசந்த்.
எலீசா
மிரட்டலான பேயாக, ராஷ்மிகா!
தமிழில், சுல்தான், வாரிசு போன்ற படங்களில் நடித்த போதும், ராஷ்மிகா மந்தனாவால் பெரிதாக மார்க்கெட்டை பிடிக்க முடியவில்லை. தற்போது, ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும், காஞ்சனா 4 படத்தில், பேய் வேடத்தில் நடிக்கிறார், ராஷ்மிகா.
குறிப்பாக, காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களையும் விட, நான்காவது பாகத்தில், தியேட்டருக்கு வரும் ரசிகர்களை குலை நடுங்க வைத்து விட வேண்டும் என, ராஷ்மிகா மந்தனாவை மிரட்டலான பேய், 'கெட்-அப்'பில் நடிக்க வைக்கிறார், லாரன்ஸ்.
— எலீசா
'ஸ்டைலிஷ்' ஆன கதை தேடும், சூரி!
காமெடியனாக இருந்து, 'ஹீரோ' ஆக நடித்து வரும், நடிகர் சூரி, மாமன் படத்திற்கு பின், தன்னை தேடி பல கிராமத்து, 'சென்டிமென்ட்' கதைகள் வந்தபோது, அவற்றை நிராகரித்து விட்டார்.
கிராமத்து கதைகளில் நடித்த, ராமராஜன், ராஜ்கிரண் போன்று, தன் மீதும் ஒரு முத்திரை விழுந்து விடக் கூடாது என, 'ஸ்டைலிஷ்' ஆன கதைகள் பக்கம் திரும்பியுள்ளார். அதோடு, 'ரொமான்டிக்' மற்றும் 'சென்டிமென்ட்' அல்லாமல், மாறுபட்ட கதைகளில் நடிக்க விரும்புவதாகவும் கூறி வருகிறார், சூரி.
— சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
கும்கி நடிகரின் மார்க்கெட் சுத்தமாக, 'அவுட்' ஆகி கிடப்பதால், அவரை வைத்து படம் இயக்க எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை. இந்த நேரத்தில், அவரிடம் கதை சொன்ன சில இயக்குனர்களும், 'உங்களது நிறுவனத்தின் மூலமாக இந்த படத்தை தயாரியுங்கள்...' என, அவரை, மூளைச்சலவை செய்தனர்.
கும்கி நடிகரோ, 'என்னுடைய சம்பளத்தை வேண்டுமானால் கணிசமாக குறைத்துக் கொள்ளுங்கள். ஆனால், சொந்த காசில் படமெடுத்து, ஒருநாளும் நான் சூனியம் வைத்துக் கொள்ள மாட்டேன்...' என, தடாலடியாக மறுத்து விட்டார்.
இதனால், கும்கி நடிகரை வைத்து, பிரமாண்ட படம் எடுக்க திட்டமிட்ட இயக்குனர், 'இவருக்காக இவரே, 'ரிஸ்க்' எடுக்காத போது, நாம் மட்டும் ஏன், 'ரிஸ்க்' எடுக்க வேண்டும்...' என, வேறு நடிகர்கள் பக்கம் தாவி விட்டார்.
********
தன் மூத்த மகள், சுள்ளானை சட்டரீதியாக பிரிந்து விட்ட போதும், பேரன்களை கொண்டே அவர்களை சேர்த்து விட வேண்டும் என, திட்டமிடுகிறார், உச்ச நடிகர். அதற்காக தன் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு பேரன்கள் மூலம், சுள்ளானை அழைத்து வர துவங்கி இருக்கும் உச்ச நடிகர், சுள்ளான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு, தன் மகளையும், மகன்களுடன் செல்ல வைத்து, நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
அதோடு, பேரன்களிடம் மீண்டும் அம்மாவுடன் சேர்ந்து வாழுமாறு சொல்ல வைத்து, மகளையும், மருமகனையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், உச்ச நடிகர்.
சினி துளிகள்!
* தெலுங்கில், அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்த, காட்டி என்ற படத்தில், முக்கிய வேடத்தில் நடித்திருந்தார், விக்ரம் பிரபு. தற்போது, சிறை என்ற பெயரில் தமிழில் உருவாகும், தன் 25 வது படத்தில் நடித்து வருகிறார்.
* தனுஷும், ஐஸ்வர்யா ரஜினியும் விவாகரத்துப் பெற்றாலும், மகன்களுக்காக சில பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
* தற்போது கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்காததால், ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள, பிளாக் மெயில் என்ற படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், பிந்து மாதவி.
அவ்ளோதான்!