PUBLISHED ON : ஜூன் 20, 2026

கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில், பாண்டா கரடியை நினைவூட்டும் தோற்றத்துடன் காணப்படுகிறது, ஓர்கா திமிங்கலம். மிக வலிமை மற்றும் புத்திசாலியான கடல் வாழ் உயிரினங்களில் ஒன்று; டால்பின் குடும்பத்தைச் சேர்ந்த மிகப்பெரிய இனம். இதன் அறிவியல் பெயர், ஓர்சினஸ் ஓர்கா.
வளர்ச்சி பெற்ற ஆண் ஓர்கா, 10 மீட்டர் நீளம் வரை இருக்கும். இதன் எடை, 8,000 கிலோ வரை உள்ளது. முதுகில் உயரமாக எழுந்திருக்கும் இறகு போன்ற அமைப்பு, துாரத்திலிருந்தே அதை அடையாளம் காண உதவுகிறது.
ஓர்கா திமிங்கலம், மிகவும் ஒழுங்கு மிக்க குழுக்களாக வாழும் தன்மை உடையது. இதை, 'குடும்பக் கூட்டம்' என்று குறிப்பிடுகின்றனர், ஆய்வாளர்கள். ஒரு கூட்டத்தில் பல தலைமுறைகளைச் சேர்ந்தவை கூட்டாக வாழ்வதை காணலாம். இவை, ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள, தனித்துவ ஒலி அலைகளைப் பயன்படுத்துகின்றன.
வேட்டையாடும் திறன் மிக்கது, ஓர்கா. மீன், கடல் நாய், கடல் சிங்கம், பென்குவின்கள் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் இதன் உணவாகும். பெரிய திமிங்கலங்களின் குட்டிகளையும், கூட்டமாகச் சேர்ந்து வேட்டையாடுவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த உயிரினம், உலகின் பெரும்பாலான கடல் பகுதிகளில் காணப்படுகிறது. பூமியின் வட, தென் துருவம் போன்ற குளிரான பகுதிகளிலும், மிதமான வெப்பநிலை கொண்ட கடல் பகுதிகளிலும் வாழ்கின்றன.
நீரில் எதிரொலி அலைகளைப் பயன்படுத்தி, சுற்றியுள்ள பொருட்களையும், உயிரினங்களையும் கண்டறியும் திறன் உடையது. கடல் சூழலியலில் சமநிலையைப் பேணுவதில், ஓர்கா திமிங்கலம் முக்கிய பங்கு வகிக்கிறது.
- வ.முருகன்
