sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

இளஸ் மனஸ்! (334)

/

இளஸ் மனஸ்! (334)

இளஸ் மனஸ்! (334)

இளஸ் மனஸ்! (334)


PUBLISHED ON : டிச 27, 2025

Google News

PUBLISHED ON : டிச 27, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிளாரன்ஸ் ஆன்ட்டி,

நான் கல்லுாரில் பி.பி.ஏ., முதலாம் ஆண்டு மாணவி. என் அக்கா, இரண்டு வயது மூத்தவள். அதே கல்லுாரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். அக்கா பெயர் ராகிணி; என் பெயர் ரோகிணி.

அக்கா ஒல்லியாய், உயரமாய், மெல்லிய இடையும், வாளிப்பான உடலும் கொண்டவர். செண்பகப்பூ நிறம், தீர்க்கமான மூக்கு, இயற்கையாகவே மையிட்ட மாதிரி நீண்டகன்ற கண்கள். அவளை படைக்கும் போதே பிரம்மதேவன் தட்டித்தட்டி அழகிய சிற்பமாக படைத்துவிட்டார். என் அம்மாவின் பிரதிபிம்பம். அம்மாவின் அழகிற்கு ஆசைப்பட்டு தான், என் பணக்கார அப்பா, ஏழை அம்மாவை பணம் செலவழித்து திருமணம் செய்து கொண்டு வந்தாராம்.

அப்பா நல்ல கருப்பு; குட்டையான உருவம். ஆனால், தாராளமான பெரிய மனசு. உயர்ந்த உத்தியோகம். அம்மாவின் உருவ அமைப்புடன் ரோகிணி பிறந்த மாதிரி, நான் அப்பாவை போல் பிறந்திருக்கிறேன். நெருப்பை அலம்பிய கரி கருப்பு, குள்ளம், குண்டு. அதனால், எனக்கு விவரம் புரிய ஆரம்பித்த வயதிலிருந்தே சொந்த, பந்தங்களும், வீட்டுக்கு வருவோரும், 'இது அப்படியே அப்பாவை உரிச்சு பிறந்திருக்கு. தொட்டால் இந்த கருப்பு ஒட்டிக்கும் போல் இருக்கே...' என்பர்.

இப்படி கேட்டு, கேட்டே எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விட்டது. 'ராகிணியோட சிஸ்டரா நீ...' என்ற கேள்வியால், என் மனதிற்குள் ஆழமான பள்ளம் விழுந்து விட்டது. அம்மாவுக்கு கூட ராகிணியை தான் பிடிக்கும். தன் பிரதிபிம்பமாக இருப்பதில், அம்மாவுக்கு பெரும் சந்தோஷம்.

இது என்னை ரொம்பவும் கஷ்டப்படுத்துகிறது. மனசு வலிக்கிறது. 'அக்காவை அவ்வளவு நிறமாக படைச்சுட்டு, என்னை ஏன் இவ்வளவு கருப்பாகப் படைத்தாய்...' என்று தினமும் ஆண்டவனிடம் சண்டை போடுகிறேன்; அழுகிறேன். என் துயரத்தை எப்படி போக்குவது ஆன்ட்டி...

- இப்படிக்கு,

ரோகிணி.



என் அன்பு ரோகிணி,

கருப்பு அழகில்லை என்று உனக்கு யார் சொன்னது... கிருஷ்ணனின் வண்ணமென்ன... கருமைநிற கண்ணன் தானே அவன். அவனைச் சுற்றி எத்தனை கோபியர்...

ராமர் கூட கருப்பு தான். ராமருக்கும், கிருஷ்ணருக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடுமென்று கண்ணனை கருப்பாகவும், ராமனை பச்சையாகவும் வண்ணம் தீட்டி விட்டனர் என, சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இதிகாசங்களை விடு; இலக்கியத்திற்கு வா...

உலக பேரழகியாக கொண்டாடப்பட்ட கிளியோபாட்ரா, கருப்பு தான்.

லைலாவும் கருப்பு தான். 'இவளையா நீ காதலிக்கிறாய்...' என்று கேட்ட போது, மஜ்னு என்ன சொன்னான்... 'என் கண்களின் வழியாக லைலாவை பார்த்தால் புரியும்...' என்று சொன்னான் அல்லவா...

கார்மேகம் என்று தான் குறிப்பிடுகிறோம். அதுதான் வளம் தருகிறது.

'கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு...' என்ற சினிமா பாடலே உண்டு. அதில், கருப்பின் சிறப்பு அடுக்கப்பட்டிருக்கும். நம் தமிழ் சினிமா கதாநாயகிகளில் பலரும் கருப்பு தான். சரிதா, சில்க் போன்றோர் தொட்ட உயரம், உனக்கு தெரிய வேண்டும்.

யாருக்குமே குணம்தான் அழகு; சாதனை தான் அழகு.

அழகானவர்களை சரித்திரம் மறக்கும்; ஆனால், சாதனையாளர்களை மறப்பதில்லை .

ஆண்டவன் எல்லாவற்றுக்கும் தராசுத்தட்டு வைத்திருப்பான்; எடைக்கு எடை ஈடு செய்வான்.

பி.பி.ஏ., படிக்கிறேன் என்று சொல்கிறாய். எம்.பி.ஏ., படி. பொருளாதாரம், வணிகம், மக்கள் தொடர்பு என படித்து, உன்னை வளர்த்துக் கொள். உச்சம் தொடு.

நம் நாட்டு கமலா ஹாரிஸ், சுந்தர் பிச்சை எல்லாம், அமெரிக்காவில் கோலோச்சுகின்றனர்.

எத்தனை கருப்பினப் பெண்கள், உலக அழகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர்... உலக அழகிகள் தேர்வு என்பது, வெறும் அழகை மட்டுமா வைத்து எடை போடப்படுகிறது... அவர்களின் பொது அறிவு, கேள்விகளுக்கு விடையளிக்கும் புத்திசாலித்தனம், உடை அணியும் நேர்த்தி, மனித நேயம் அனைத்தும் கணக்கில் கொள்ளப்படுகிறதல்லவா...

ஆகவே, நீ உன்னைச் சுற்றி எழுப்பிக் கொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மை என்னும் செங்கல் சுவரை உடைத்துக் கொண்டு, வெளியில் வா. பட்டாம் பூச்சியாகப் பற. விண்ணையும் தொடுவேன் என்று சபதமேற்றுக் கொள். உன்னால் முடியும் பெண்ணே...

- இப்படிக்கு, பிளாரன்ஸ்.






      Dinamalar
      Follow us