/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
சொந்தமாக்கிக்கொள்ள ஒரு ரோபோ -கார்!
/
சொந்தமாக்கிக்கொள்ள ஒரு ரோபோ -கார்!
PUBLISHED ON : டிச 11, 2025 07:28 AM

இன்று சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சில ஆயிரம் தானோட்டி கார்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன, அதேபோல, கூகுளின் வேமோ உட்பட எல்லா தானோட்டி கார்களுமே ரோபோ டாக்சி என்ற பெயரில் வாடகை வாகனங்களாகவே ஓடுகின்றன.
இப்போது, அமெரிக்காவின் சிலிக்கான் வேலியைச் சேர்ந்த 'டென்சார்', 2026ல், உலகின் முதல் முழுமையான நுகர்வோர் பயன்பாட்டு தானோட்டி காரை விற்பனைக்குக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
டென்சாரின் பொறியாளர்கள், ஏற்கனவே உள்ள கார்களில் தானோட்டித் தொழில்நுட்பத்தை பொருத்தாமல், அடித்தளத்திலிருந்தே ரோபோகாராக வடிவமைத்துள்ளனர். இதன் கூரையில் உள்ள சக்திவாய்ந்த 'லிடார்', கேமராக்கள் மற்றும் ரேடார்கள் வினாடிக்கு 53 ஜி.பி., தரவுகளை சேகரிக்கின்றன.
இவற்றை உடனுக்குடன் அலச, 10 ஜி.பி.யு.,க்கள் மற்றும் 144 சி.பி.யு.,க்களைக் கொண்ட ஒரு சூப்பர் கணினியே காருக்குள் உள்ளது. கார் இயங்கத் துவங்கியதும் ஸ்டீயரிங் மற்றும் பெடல்கள் உள்ளிழுக்கப்பட்டு, வாகனம் ஒரு 'நகரும் வரவேற்பறை' போல மாறிவிடுகிறது.
இது வெறும் எலக்ட்ரிக் கார் அல்ல; உரிமையாளரை இறக்கிவிட்டு, தானாகவே சென்று பார்க் செய்துகொள்ளும் ஒரு 'தானோட்டி ஏஜன்ட்' (Autonomous Agent) போல செயல்படுகிறது. டென்சாரின் இந்த திட்டம் வெற்றியடைந்தால், தனிநபர் போக்குவரத்தின் எதிர்காலமே தலைகீழாக மாறக்கூடும்.

