PUBLISHED ON : மார் 19, 2026 03:34 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி: அ.தி.மு.க., ஆட்சியில் குற்றவாளிகள் பயந்தனர். தி.மு.க., ஆட்சியில், குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகின்றனர். டில்லியில் பாலியல் வன்கொடுமை நடந்தால் கதறும் முதல்வர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் அமைச்சர்கள், தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை மட்டும் கண்டும் காணாமல் இருக்கின்றனர். தி.மு.க., ஆட்சியில், 'லாக் அப்' மரணங்கள் அதிகம் நடக்கின்றன. சாத்தான்குளத்தில் தந்தை, மகன் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நடந்ததை இவர் மறந்துட்டாரோ?
தமிழக காங்., சிறுபான்மை துறை தலைவர் முகமது ஆரீப் பேச்சு: கடந்த 2004ம் ஆண்டு முதல் நடந்து வரும் அனைத்து லோக்சபா, சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று வருகிறது. நகமும், சதையுமாக இருக்கும் இந்த வெற்றி கூட்டணியை உடைக்க திட்டமிட்டவர்களின் சதி திட்டம், தி.மு.க., - காங்கிரஸ் தலைவர்களின் சாதுர்ய நடவடிக்கையால், சுக்கு நுாறாக உடைத்தெறியப்பட்டுள்ளது. காங்கிரஸ் போட்டியிடும், 28 தொகுதிகளும், தி.மு.க., கூட்டணி கட்சிகள் போட்டியிடும், 206 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்.
ஏகத்துக்கும் உணர்ச்சி வசப்படுறாரே... காங்., போட்டியிடும், 28 தொகுதிகளில், இவரும் ஒரு தொகுதிக்கு, 'துண்டு' போட்டிருப்பாரோ?
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தவணை முறையில் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதை பற்றி சொல்ல ஸ்டாலினுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில், 525 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தனர். அதில், 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. பழனிசாமி, தேர்தல் அறிக்கை கொடுத்தால், 100 சதவீதம் நிச்சயம் நிறைவேற்றி தருவார்.
மத்திய பா.ஜ., அரசின் கூட்டணி இருப்பதால், அவங்க நிதியுதவியுடன், 100 சதவீதம் வாக்குறுதிகளையும் நிறைவேற்றிடலாம்னு நம்பி சவால் விடுறாரோ?
இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன் அறிக்கை: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல் கமிஷன் வழங்கும் வாக்காளர் பட்டியலை, வழக்கம் போல இரண்டு பிரதிகள் இலவசமாக தர வேண்டும். ஓட்டுப்பதிவை முன்னிட்டு, ஏப்., 21 முதல் 23ம் தேதி வரை, மூன்று நாட்கள் அனைத்து வகை மது கடைகளும், மனமகிழ் மன்றங்களும் மூடப்பட வேண்டும்.
என்னதான் மது கடைகளை மூடினாலும், அரசியல் கட்சியினர் முன்கூட்டியே மொத்தமா வாங்கி, 'ஸ்டாக்' வச்சிடுவாங்க!

