ADDED : ஏப் 02, 2026 12:17 AM

பல்லடம்: பல்லடம் அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில், 'ஊதியது போதும்' என, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர், விசிலை துாக்கி எறிந்த சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
த.வெ.க.வினர், தங்கள் கட்சி சின்னமான விசில் இல்லாமல் வருவதில்லை. வேட்பாளர் வரவேற்பு, ஓட்டு சேகரிப்பு என அனைத்திலும் விசிலுடன் தான் செல்கின்றனர். த.வெ.க.,வினர் விசில் சின்னத்தை பிரபலப்படுத்தி வர, இதர கட்சியினரோ, பஸ்களில் நடத்துனர் விசில் அடித்தால் கூட, அதை முறைத்துப் பார்க்கும் அளவுக்கு விசிலை தவிர்த்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே நடந்த அ.தி.மு.க., கூட்டணி கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் நடந்த நிகழ்ச்சி தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள், தொண்டர்களை வரவேற்கும் விதமாக டிரம்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை வாசித்துக் கொண்டிருந்த கலைஞர்களில் ஒருவர், தனது கழுத்தில் விசில் தொங்கவிட்டிருந்தார். இதைக்கண்ட மங்கலம் பகுதி அ.தி.மு.க., நிர்வாகி மகேந்திரன் என்பவர், அவர் அணிந்திருந்த விசிலை கழற்றி துாக்கி வீசி எறிந்தார். இதை அங்கிருந்த தொண்டர் ஒருவர் வீடியோ எடுக்க, தற்போது, அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
