PUBLISHED ON : செப் 13, 2025 12:00 AM

'ஆட்சியில் இல்லா விட்டாலும், வருமானத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை...' என, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியினரைப் பற்றி வயிற்றெரிச்சலுடன் பேசுகின்றனர், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகள்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு தொடர்ச்சியாக, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்த பாரத் ராஷ்ட்ர சமிதி, 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
இந்த தோல்விக்குப் பின், அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ் குடும்பத்தில், அவரது மகன் கே.டி.ராமாராவுக்கும், மகள் கவிதாவுக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், கவிதா, சமீபத்தில் கட்சியை விட்டே வெளியேறி விட்டார். இந்த நிலையில் தான், நாட்டில் உள்ள மாநில கட்சிகளின், 2023 - 24ம் ஆண்டுக்கான வருமானம் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.
இதில், 685 கோடி ரூபாய் வருமானத்துடன், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி முதலிடத்தை பிடித்துள்ளது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 'அதிகாரத்தில் இல்லா விட்டாலும், வருமானம் மட்டும் எப்படி வருகிறது...' என்ற முணுமுணுப்பு எழுந்துள்ளது.
'கட்சியில் உள்ள இந்த நிதியை கைப்பற்றுவதற்கு தான், சந்திரசேகர ராவ் குடும்பத்துக்குள் தகராறு ஏற்பட்டது போலிருக்கிறது. இந்த ரகசியம் இப்போது அம்பலமாகி விட்டது...' என்கின்றனர், தெலுங்கானா அரசியல்வாதிகள்.