PUBLISHED ON : செப் 12, 2025 12:00 AM

'எனக்கு வெளியில் எதிரிகள் இல்லை. எங்கள் குடும்பத்துக்குள்ளேயே தான் இருக்கிறார்...' என, விரக்தியுடன் கூறுகிறார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், லாலு பிரசாத்தின் மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவ் அதிரடியாக களத்தில் குதித்துள்ளார். இவர், கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக சில மாதங்களுக்கு முன், லாலு பிரசாத்தால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்.
சமீபத்தில், பீஹாரில் பலத்த மழை பெய்து, பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. அப்போது, தேஜஸ்வி யாதவின் தொகுதியான ரகோபூருக்கு படகில் சென்ற தேஜ் பிரதாப், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
மேலும், 'இந்த தொகுதியின் எம்.எல்.ஏ., எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. அதனால், மக்களுக்கு உதவுவதற்காக நானே வந்துள்ளேன்...' என்றார், தேஜ் பிரதாப்.
இதனால் ஆத்திரம் அடைந்த தேஜஸ்வி யாதவ், 'பூஜைக்குள் கரடி புகுந்த கதையாக, தேர்தல் நேரத்தில் இவர் வேறு குட்டையை குழப்புகிறாரே...' என, புலம்புகிறார்.