கட்டா குஸ்தி 2
தயாரிப்பு : வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்
இயக்கம் : செல்லா அய்யாவு
நடிப்பு : விஷ்ணுவிஷால், ஐஸ்வர்ய லட்சுமி, மோக் ஷா, ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு, கருணாகரன், கருணாஸ், சாரா
ஒளிப்பதிவு : கே.எம்.பாஸ்கரன்
இசை : ஷான் ரோல்டன்
வெளியான தேதி : ஜூலை 3, 2026
நேரம் : 2 மணிநேரம் 34 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5
கட்டா குஸ்தி முதல்பாகத்தில் காதலர்களாக, இளம் தம்பதிகளாக இருந்த விஷ்ணு விஷாலும், ஐஸ்வர்ய லட்சுமியும் இரண்டாம் பாகத்தில் பெற்றோர்களாக மாறி இருக்கிறார்கள். அரசு கோட்டாவில் கிடைத்த வேலையை பார்த்துக் கொண்டே குஸ்தி போட்டிகளிலும் கலந்து கொள்கிறார் ஐஸ்வர்ய லட்சுமி, மகள் சாரா பள்ளிக்கு செல்ல, ஹவுஸ் ஹஸ்பண்டாக வீட்டை பார்த்துக் கொண்டு சமையல் வேலைகளை கவனிக்கிறார் விஷ்ணு விஷால். மனைவியின் வெற்றிக்கு உதவியாக இருக்கிறார். திடீரென குடும்பத்தில் பிரச்னை, தான் விளையாடிய போட்டியில் தோற்கிறார் ஐஸ்வர்ய லட்சுமி. அதை தொடர்ந்து கணவன், மனைவி இடையே பிரிவு, டைவர்ஸ் கேட்டு கோர்ட் என செல்ல, கணவன் மனைவி இணைந்தார்களா? ஐஸ்வர்ய லட்சுமி மீண்டும் போட்டியில் ஜெயித்தாரா என்பது கட்டா குஸ்தி 2 கதை.
முதற்பாகத்தில் காதல், தெனாவட்டு, மனைவியுடன் சண்டை என இருந்த விஷால், இதில் பொறுப்புள்ள குடும்ப தலைவராக நடித்து இருக்கிறார். அதாவது, எந்த வேலைக்கு போகாமல் வீட்டில் சமையல் செய்வது, மகளை பள்ளிக்கு அழைத்து செல்வது, பக்கத்து வீட்டு பெண்களுக்கு உடற்பயிற்சி சொல்லி கொடுப்பது என சின்சியராக இருக்கிறார். இந்த காட்சிகளை பெண்கள் ரசிப்பார்கள். ஆண்கள் முறைப்பார்கள். குறிப்பாக, மனைவி மீது சந்தேகப்பட்டு, தனது மனைவிக்கு உதவும் விஷ்ணு விஷாலை வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர் வீட்டை சேர்ந்த கருணாகரன் பிளான் பண்ணுவது சிறப்பு.
இப்படி செல்லும் கதையில் கோச் மூலமாக பிரச்னை வர, படம் சூடுபிடிக்கிறது. அப்போதும் விஷ்ணு விஷால் ஸ்கோர் பண்ணுகிறார். அப்பாவியான முகம், டீச்சருடன் ஆட்டம், மனைவிக்காக, குழந்தை அன்புக்காக ஏங்குவது, கடைசியில் மனைவியுடனே குஸ்தி சண்டை என, கதையின் முக்கியத்துவம் உணர்ந்து நடித்து இருக்கிறார். எங்கேயும் பில்டப், ஹீரோயிசம் அதிகம் இல்லாதது படத்தை ரசிக்க வைக்கிறது. நடிப்பில் காமெடி கலந்து கொடுத்து இருப்பது இன்னும் ஸ்பெஷல்.
முதற்பாகத்தில் சவால், சண்டை என மிரட்டிய ஐஸ்வர்ய லட்சுமி இதில் குடும்ப பெண்ணாக கொஞ்சம் அடக்கி வாசித்து இருக்கிறார். ஆனால் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். மகள், டீச்சருடன் கணவருக்கு ஏற்பட்ட நட்பை பார்த்து பொறாமை படுவது, தோல்வியால் சந்தேப்பட்டு சண்டைபோடும் இடங்களில் நடிப்பில் கலக்கியிருக்கிறார். அந்த ஹாட்டான முதல் பாடல், கிளைமாக்சில் கணவருடன் குஸ்தி சண்டை சீன்களில் பின்னி எடுத்து இருக்கிறார்.
டீச்சராக வரும் மோக்ஷாவை படம் பார்க்கும் ஆண்கள் கொண்டாடுவார்கள். ஹாட்டான டீச்சராக, சாப்டான கேரக்டரில் வந்து, அப்படிபோடு பாடலுக்கு செம குத்தாட்டம் போடுகிறார். எந்த ஊரில், எந்த ஸ்கூலில் இப்படிப்பட்ட டிரஸ் போடுகிறார்கள் டீச்சர்ஸ் என்ற விமர்சனங்களும் வரலாம்.
இவர்களை தவிர, ஹீரோ பக்கத்து வீட்டுக்காரராக, சந்தேகப்பேர்வழியாக வரும் கருணாகரன், ஹீரோயின் உறவினராக வரும் முனிஸ்காந்த், ஹீரோ மாமா கருணாஸ், அவர் மனைவி லிஸி ஆகியோர் சீன்கள், நடிப்பிலும் குறைவில்லை. கிளைமாக்சில் கொஞ்ச நேரம் ஜட்ஜ் ஆக வந்தாலும் ரம்யா கிருஷ்ணன் கைதட்டல் அள்ளுகிறார். அதபோல் பஞ்சாப் வர்ணையாளராக வரும் யோகிபாபுவும் சிரிக்க வைத்து இருக்கிறார்.
படத்தில் குறிப்பிட்டு பாராட்ட பட வேண்டியவர் சாரா. விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி மகளாக வரும் அந்த சிறுமியின் நடிப்பு, டயலாக் டெலிவரி, க்யூடான எக்ஸ்பிரஸன் பெரிய பிளஸ். அந்த சிறுமி காட்சிகளை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. வழக்கம்போல் கோச்சை வில்லனாக்கி இருக்கிறார்கள். நடிகர்கள் தேர்வு, அவர்களுக்கான காட்சியில் பாதியை வெற்றியை கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.
முதல்பாதி கொஞ்சம் காமெடியாக, லேசான தொய்வுடன் நகர்ந்தாலும், சண்டை, பிரச்னை வந்தபின் இரண்டாம்பாதி விறுவிறுப்பாகிவிடுகிறது. குறிப்பாக, கிளைமாக்ஸ்க்கு முந்தைய அரை மணி நேரம் பழைய சுந்தர் சி படங்கள் பார்த்த மாதிரி செம கலகலப்பு. டீச்சர் குத்துபாட்டில் ஆரம்பிக்கும் அந்த போர்ஷன், கோர்ட், கணவன், மனைவி குஸ்தி சண்டை, அதில் ஒருவித ஸ்டைல் என அனைத்து தரப்பை ரசிக்க வைக்கிறது. பாடல்காட்சி, சண்டைக்காட்சிகளை அழகாக காண்பித்து இருக்கிறார் கேமராமேன் பாஸ்கரன். சம்பவக்காரி பாடலும் ஷான் ரோல்டன் பின்னணி இசையும் ஓகே. ஆங்காங்கே தொய்வு வரும்போது அடுத்த சீன்களில் அதை சரி செய்து விடுகிறார் இயக்குனர்.
கணவன், மனைவி ஈகோ சண்டை, டைவர்ஸ், விட்டுகொடுப்பது என்பதை பல படங்களில் பார்த்து இருந்தாலும், சில சீன்கள் சில பட பாதிப்பு என்றாலும் காமெடி கலந்து புதுவிதமாக சொல்கிறார் இயக்குனர். முதல்பாகத்தில் ஹீரோயின் சீன்களை, அவர் கேரக்டரை உயர்வாக காண்பித்தவர், இதில் ஹீரோக்கு, அதாவது ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார். அதை பெண்களும் ரசிக்கும்வகையில் காண்பித்து இருக்கிறார். தத்துவம், கருத்து, தனது திறமை காண்பிக்கணும் என நினைக்காமல் படம் பார்ப்பவர்கள் கவலையை மறக்கணும் என்ற நினைத்து இருக்கிறார். அது வொர்க்-அவுட் ஆகியிருக்கிறது. ரொம்ப சென்டிமென்ட், சீரியஸ்தனம், சினிமாதனம் இல்லாமல் அனைத்து தரப்பும் ஜாலியாக சிரித்து ரசித்து விட்டுபோகணும் என்ற இயக்குனரின் பாலிசி, அதற்கேற்ற நடிகர்களின் நடிப்பு இந்த குஸ்திசண்டையை ஜெயிக்க வைத்து இருக்கிறது. முதற்பாகம் அளவுக்கு இல்லாவிட்டாலும், இரண்டாம் பாகம் குறைவில்லை. பாக்யராஜ் ஸ்டைலில் ஆண்கள் கஷ்டத்தை சொல்லும் கதை, பெண்களும் ரசிக்கலாம்.
கட்டா குஸ்தி 2 - குடும்பத்துடன் ரசிக்கலாம்