அதிரடி (மலையாளம்)
தயாரிப்பு : பசில் ஜோசப், டாக்டர் அனந்து. எஸ்
இயக்கம் : அருண் அனிருத்தன்
நடிப்பு : டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினித் சீனிவாசன், ஷான் ரகுமான், ரியா சிபு, தர்ஷனா ராஜேந்திரன்
ஒளிப்பதிவு : சாமுவேல் ஹென்றி
இசை : விஷ்ணு விஜய்
வெளியான தேதி : மே 14, 2026
நேரம் : 2 மணிநேரம் 37 நிமிடம்
ரேட்டிங் : 3.25 / 5
பசில் ஜோசப் தனது அண்ணன் படித்த கல்லூரியிலேயே சிவில் இன்ஜினியரிங் சேர்கிறார்.. சில வருடங்களுக்கு முன்பு அவரது அண்ணன் கல்லூரியில் கலை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்தபோது, அதில் எதிர்பாராமல் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அந்த கல்லூரி மாணவியும் அவரது காதலியுமான தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்ட மூன்று பெண்கள் இறந்து போகின்றனர்.. அதன்பிறகு அந்த கல்லூரியில் கலை நிகழ்ச்சி நடக்கவே இல்லை.. இந்த நிலையில் பசில் தனது அண்ணன் மீது வைத்துள்ள பிரியம் காரணமாகவும், இன்னொரு பக்கம் தனது சக மாணவியாக ரியா சிபுவின் மீது கொண்ட காதல் காரணமாகவும் கல்லூரியில் தன் பெருமையை நிலைநாட்ட இத்தனை வருடங்களாக நின்று போயிருந்த அந்த விழாவை நடத்த முயற்சி எடுக்கிறார்.. ஒரு வழியாக கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதியும் வாங்கி, சிறப்பு அழைப்பாளராக நடிகரும் இயக்குனருமான வினித் சீனிவாசனை ஒப்பந்தமும் செய்கிறார்..
இன்னொரு பக்கம் அந்த ஊரைச் சேர்ந்த, மிகப்பெரிய ரவுடியாக இருந்த டொவினோ தாமஸ் திருந்தி, ஒரு பாடகராக மாறி தன்னை வெளி உலகத்திற்கு காட்டும் வேலைகளில் இறங்குகிறார். தனது கச்சேரியில் முதல் பாடலாக தனது தாய் தனக்கு சொல்லித்தந்த பாடலை பாட வேண்டும் என்பதற்காக பிரமாண்ட கச்சேரிக்கும் ஏற்பாடும் செய்து வருகிறார்.. இந்த நிலையில் கல்லூரி விழா நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கான கொண்டாட்டத்தில் இருக்கும் பசில் ஜோசப் நண்பர்கள் குழுவுக்கும், பாடல் கச்சேரியை விமர்சையாக நடத்த ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் டொவினோ தாமஸ் தரப்புக்கும் எதிர்பாராத மோதல் ஏற்படுகிறது. பசில் ஜோசப் தான் திட்டமிட்டபடி வினித் சீனிவாசனை கல்லூரி நிகழ்ச்சியில் பாட வைத்தாரா ? அல்லது ரவுடியான டொவினோ தாமஸ் தான் நினைத்ததை சாதித்தாரா ? என்பது மீதிக்கதை.
சாதாரணமாக கல்லூரி மாணவர்களுக்குள் தகராறு, கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதில் யார் பெரியவர் என்கிற போட்டி இப்படி சென்று கொண்டிருக்கும் படத்தில், எதிர்பாராத திருப்பமாக ஒரு ரவுடியை உள்ளே கொண்டு வந்து படத்தின் கலரையே மாற்றி விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார்கள்..
கல்லூரி இளைஞனாக பசில் ஜோசப் ஏக பொருத்தம்.. ஒரு பக்கம் அம்மாஞ்சி மாணவனாக இருந்தாலும் கூட, இன்னொரு பக்கம் தான் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்கிற துடிப்புடன் அவர் செய்கின்ற காரியங்கள் பரவாயில்லையே.. சரியான ஆளுதான் என்று சபாஷ் போட வைக்கின்றன. குறிப்பாக கிளைமாக்ஸில் டொவினோ தாமஸை சமாளிக்க முயற்சிப்பதும், வினித் சீனிவாசனை எப்படியாவது மேடையில் பாட வைக்க முயற்சிப்பதும் என அவர் நடத்தும் கடுமையான போராட்டம் ஏதோ நாமே அதில் மாட்டிக்கொண்டது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது..
கிட்டத்தட்ட இடைவேளைக்கு கொஞ்சம் முன்னர்தான் என்ட்ரி கொடுக்கிறார் டொவினோ தாமஸ்.. ஆரம்பத்தில் அவர் கச்சேரியில் பாடுவதற்காக ரிகர்சல் செய்யும்போதெல்லாம் என்னடா இவர் கதாபாத்திரம் இப்படி இருக்கிறதே என்று நினைக்கையில், திடீரென யூ-டர்ன் எடுத்து அவர் ஒரு முன்னாள் ரவுடி என்று தெரிய வரும்போது நிச்சயமாக நமக்கு அது ஆச்சரியமான ட்விஸ்ட்தான்.. இடைவேளைக்குப் பிறகு அவர் காட்டும் ரவுடியிசமும் படத்தின் டைட்டிலை போலவே அதிரடிதான்.
இவர்கள் இருவரிடையே மாட்டிக் கொண்ட விட்டில் பூச்சி போல வினித் சீனிவாசன் தான் கடத்தப்பட்ட சமயத்திலும் சரி, தன்னை காப்பாற்ற நடக்கும் முயற்சியிலும் சரி ஒரு அப்பாவி விஐபியாக தன் கதாபாத்திரத்தை, இல்லை இல்லை வினித் சீனிவாசன் என்ற தன்னுடைய சொந்த குணாதிசயத்தை மிகச் சரியாக பிரதிபலித்திருக்கிறார். கிளைமாக்ஸில் ஆங்காரத்துடன் தாக்க வரும் டொவினோ தாமஸை அடக்குவதற்காக எடுக்கும் முயற்சி எதிர்பாராத ஒன்று, தியேட்டரில் கைதட்டலையும் அள்ளுகிறது..
ஏற்கனவே சர்வம் மாயா படத்தில் நம்மை கவர்ந்த ரியா சிபு தான் இதில் நாயகி.. கதாநாயகனுக்கு உற்சாகமும் உத்வேகமும் கொடுக்கும் கதாபாத்திரத்தில் செவ்வனே செய்திருக்கிறார்.. அவரது அழகும் வசீகர சிரிப்பும் அவருக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்..
ஆரம்பக் காட்சியில் மட்டும் வந்து பரிதாபமாக உயிரைவிடும் தர்ஷனா ராஜேந்திரன் கதாபாத்திரம் உச் கொட்ட வைக்கிறது. கல்லூரியில் ஏற்பட்ட அசம்பாவிதத்தால் ரொம்பவே உடைந்துபோன கதாபாத்திரத்தில் பசில் ஜோசப்பின் அண்ணனாக விஷ்ணு அகஸ்தியாவும் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். இதில் யாரும் எதிர்பாராத விதமாக இசையமைப்பாளர் ஷான் ரகுமானும் அவராகவே தன்னுடைய நிஜ கேரக்டரில் நடித்திருக்கிறார்.. சீரியஸாக செல்லும் கதையில் அவர் செய்யும் காமெடிகள் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்கின்றன..
கிட்டத்தட்ட ஒவ்வொரு பிரேமிலும் நூற்றுக்கணக்கான இல்லையென்றால் ஆயிரக்கணக்கான நபர்களை வைத்து படமாக்கும் சவாலை ரொம்பவே எளிதாக கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சாமுவேல் ஹென்றி. இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் கல்லூரி படம் என்பதாலோ என்னவோ கல்லூரி இளைஞர்களை கவரும் விதமாக பின்னணி இசையில் அதிரடி காட்டியிருக்கிறார். டொவினோ தாமஸ் தனது அம்மாவின் பாடலாக பாடும் அந்த பாடல் படத்தில் கேட்பதாற்கு காமெடியாக இருந்தாலும் இனி பல மேடைகளில் ஒலிக்க கூடும்..
மின்னல் முரளி படத்திற்கு கதை எழுதி, இயக்குனர் பசில் ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அருண் அனிருத்தன் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். முதல் படத்திலேயே மாஸ் காட்டியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக கல்லூரி கலை நிகழ்ச்சியை, ஒரு ரவுடியின் கச்சேரியுடன் இணைத்து ஒரு புதிய கோணத்தில் கதையை உருவாக்கி அதை விறுவிறுப்பாகவும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
இடைவேளைக்கு முன்பு வரை கல்லூரி காட்சிகள், மாணவர்களுக்குள் ஏற்படும் அடிதடி என்பது ஏற்கனவே பல படங்களில் பார்த்ததால் கொஞ்சம் சலிப்பை தருகிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகான பசில் ஜோசப், டொவினோ தாமஸ் இவர்களுக்கிடையே நடக்கும் பூனை எலி ஆட்டத்தால் அதை ஈடு கட்டி விடுகிறார் இயக்குனர்.. குறிப்பாக கிளைமாக்ஸில் வினித் சீனிவாசன், டொவினோ தாமஸ் பிரச்சனையை சமாளிக்க அவர் கையாண்ட யுக்தி புதிது. இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் அந்த வேலையை சரியாக செய்திருக்கிறது என்று தாராளமாக சொல்லலாம்.
அதிரடி : விடாக்கண்டனும் கொடாக்கண்டனும் பின்னே நடுவே மாட்டிக்கொண்ட ஒரு மணிகண்டனும்