29
தயாரிப்பு : ஸ்டோன்பெஞ்ச் ஸ்டூடியோ, ஜி ஸ்குவார்டு
இயக்கம் : ரத்னகுமார்
நடிப்பு : விது, ப்ரீத்திஅஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ்
ஒளிப்பதிவு : மகேஷ்மாணிக்கம்
இசை : ஷான்ரோல்டன்
வெளியான தேதி : மே 8, 2028
நேரம் : 2 மணிநேரம் 29 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
சேலத்தில் இருந்து சென்னைக்கு வரும் விது, தன்னுடன் தனியார் கம்பெனியில் வேலை செய்யும் ப்ரீத்தி அஸ்ராணியை காதலிக்கிறார். தனக்கென அடையாளம் இல்லாமல் தவித்த விதுக்கு 'காதலன்' என்ற அடையாளம் போதுமானதாக இருக்கிறது. ஆனால், ஹீரோயின் ப்ரீத்தியோ 'இது போதாது. வாழ்க்கையில் ஜெயிக்கணும். தான் ஐஏஎஸ் ஆகணும்' என ஆசைப்படுகிறார். காதலர்கள் பிரிகிறார்கள். கடைசியில் ஹீரோவின் காதல் ஜெயித்ததா? ப்ரீத்தியின் ஐஏஎஸ் கனவு பலித்ததா என்பது 29 படத்தின் கதை. மேயாதமான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கியிருக்கிறார். ஹீரோவின் 29 வயதில் இந்த சம்பவங்கள் நடப்பதால் இந்த தலைப்பு.
சூர்யாவின் ரெட்ரோ படத்தில் வில்லனாக வந்த விது இதில் கதைநாயகன். அவருக்கு ஹீரோயினக்குமான காதல் காட்சிகள் கொஞ்சம் கவித்துவமாக இருக்கிறது. வாழ்க்கை தத்துவங்களை சொல்கிறது. அதில் ஓரளவு நன்றாக நடித்து இருக்கிறார் விது. இடையில் அம்மா சென்டிமென்ட், ஊர் ஏரியை காப்பாற்ற போராடும் போராளி இன்னொரு பரிமாணத்திலும் வருகிறார். அதில் நடிப்பு பத்தாது. அதிலும் ஆக் ஷன் அவதாரம், சமூகபோராளி சீன்கள் செயற்கைதனமாக இருக்கிறது. மொத்தத்தில் நடிப்பில் பாஸ் மார்க் வாங்கவே தத்தளிக்கிறார்.
அயோத்தியில் அழுத்தமான நடிப்பை தந்த ப்ரீத்தி அஸ்ராணி தான் படத்தின் பெரிய பிளஸ். காதல் காட்சிகளில், காதலனுடன் சண்டையில், குடும்ப பிரச்னை சம்பந்தப்பட்ட சீன்களில், கிளைமாக்சில் கலக்கியிருக்கிறார். இடைவேளைக்கு முன்பு அவர் ஆடும் டான்ஸ் வாவ். அவருக்கும் இன்னும் சில மெலோடி பாடல் இருந்தால் படம் இன்னும் அழகாக இருந்து இருக்கும். ஹீரோ ரூம் மேட்டாக, சினிமா வாய்ப்பு தேடும் இயக்குனராக வரும் அவினாஷ் கேரக்டரும், அவர் நடிப்பும் செம.
இவர்களை தவிர, மாஸ்டர் மகேந்திரன் வில்லனாக, கல்லுாரி அதிபராக வருகிறார். அவர் நடிப்பு, சீன்களில் அவ்வளவு சினிமாதனம். தமிழ் சினிமாவில் இன்னும் எத்தனை படங்களில்தான் தனியார் கல்லுாரி அதிபர்களை வில்லனாக காண்பிப்பார்களோ?, போராடித்துவிட்டது. ஹீரோ அம்மாவாக வரும் ஆதிரா, ஹீரோயின் அம்மாவாக வரும் சிந்து இருவரும் பாசத்தை பொழிகிறார்கள். படத்தில் வரும் யாருமே இயல்பாக நடிக்கலையோ, ஓவர் ஆக்டிங் செய்கிறார்களோ? என தோன்றுகிறது.
2010ல் இந்த கதை நடக்கிறது. அதற்கான டச்சிங். அந்த சமயத்தில் இருந்த சென்னை, சேலம் படத்தில் பெரிதாக காண்பிக்கப்படவில்லை. படத்தை அத்தியாயம், அத்தியாயமாக ஒரு தலைப்பிட்டு நகர்த்தி இருப்பது ஒருவித இடைவெளியை ஏற்படுத்துகிறது. அதேபோல், இடைவெளிக்குபின் கதை சமூக சேவை, ஏரி, போராட்டம், கலெக்டர், போலீஸ் அராஜகம், வில்லன் என எங்கே செல்வது போராடிக்கிறது. அந்த சீன்கள் கதையுடன் ஒட்டவில்லை. கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் புதுசாக இருக்கிறது. காதலையும், காமத்தை வைத்து ஏதோ சொல்ல நினைக்கிறார் இயக்குனர். அதுவும் தெளிவாக சொல்லப்படவில்லை.
ஷான் ரோல்டன் இசை, பின்னணி இசை ஓகே. இன்னும் நன்றாக இருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். முந்தைய படங்களில் சாயல் பாடல்களில் தெரிகிறது. மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்.
தான் படித்த, தான் தெரிந்த விஷயங்களை இந்த காதல் கதையில் கொட்டி, பக்கம், பக்கமாக வசனம் எழுதி ஏகப்பட்ட சீன்களை வேஸ்ட் ஆக்கி இருக்கிறார் இயக்குனர். காதல் கதையில் வேறு விஷயங்கள் சேருவதும், அது பார்வையாளர்களை வேறு திசைக்கு இழுத்து செல்வதும் படத்தின் மைனஸ். இன்றைய காதல், இன்றைய காதலர்களின் பார்வை வேறு. இயக்குனர் சொல்ல வரும் கருத்து ரொம்பவே பின்னோக்கி இருக்கிறது. கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் கனகராஜ் இந்த படத்தின் தயாரிப்பாளர்களாம். எப்படி இந்த மாதிரியான கதையை தேர்ந்தெடுத்தார்கள் என புரியவில்லை. மேயாதமான் இயக்குனரின் இந்த கதையில் திரைக்கதை என்ற மான் மேயாமல் படுத்துவிட்டது.
29... படத்தில் 29 நிமிட சீன்கள் கூட உருப்படி இல்லை