பாலியல் வழக்கில் இருந்து நிவின் பாலி பட இயக்குனர் விடுவிப்பு: 'டாக்ஸிக்' இயக்குநரால் சிக்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு
கடந்த 2022-ல் நிவின் பாலி, அதிதி பாலன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் 'படவேட்டு'. இந்தப் படத்தை லிஜு கிருஷ்ணா என்பவர் இயக்கியிருந்தார். இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இயக்குனர் லிஜு கிருஷ்ணா மீது அந்தப் படத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தார். கடந்த நான்கு வருடங்களாக நடந்த வழக்கில் சமீபத்தில் எர்ணாகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இயக்குனர் மீது குற்றமில்லை என்று கூறி அவரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லிஜு கிருஷ்ணா, இந்த வழக்கில் தான் பொய்யாக சிக்கவைக்கப்பட்டதாக கூறினார். 'படவேட்டு' படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அதன் கதை உருவாக்க விவாதங்களில் டாக்சிக் பட இயக்குனர் கீது மோகன்தாஸுடன் கலந்து பேசியபோது தனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது வாக்குவாதமாக மாறியதாகவும், அந்த இயக்குனரின் ஈகோ காரணமாகவே தனக்கு எதிராக இப்படி வழக்கு ஜோடிக்கப்பட்டதாகவும் பகிரங்கமாகவே குற்றம் சாட்டியுள்ளார் இயக்குனர் லிஜு கிருஷ்ணா.
தன்னிடம் திரைக்கதையின் சில பகுதிகளை எழுத வந்த பெண் உதவியாளர் மூலமாக இப்படிப்பட்ட ஒரு புகாரை தன் மீது கொடுக்க வைத்ததாகவும், இதற்காக தான் சார்ந்துள்ள சினிமா பெண்கள் அமைப்பின் அதிகாரத்தையும் செல்வாக்கையும் கீத்து மோகன்தாஸ் தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார் லிஜு கிருஷ்ணா. இத்தகைய வழக்குகளில் இருதரப்பு வாதங்களையும் கேட்டு உண்மையை கண்டறிய வேண்டும்; ஏனென்றால் குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என்பதை நிரூபிக்க பல ஆண்டுகள் ஆவதால் தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியாக தனக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.