வசூலை வாரிக் குவித்த ஒரே படம் : 2026 அக்டோபர் படங்கள் ஓர் பார்வை...!
2026ம் ஆண்டின் அக்டோபர் மாத முடிவில் சுமார் 190 படங்கள் வரை வெளிவந்துள்ளன. கடந்த 2025ம் ஆண்டில் இதே மாத முடிவில் 220க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 30 படங்கள் இந்த ஆண்டில் குறைவாகவே வெளியாகி உள்ளன.
அதே சமயம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் சுமார் 20 படங்கள் வசூலையும், வெற்றியையும், வரவேற்பையும் பெற்ற படங்களாக அமைந்துள்ளன. அதுவும் குறைவுதான் என்றாலும் முந்தைய வருடங்களை விடவும் இந்த வருடத்தில் அது அதிகமாகவே உள்ளது.
பத்தா வசூலில் கெத்தா...
அக்டோபர் மாதத்தின் முதல் நாளான 1ம் தேதி, “பத்தா, ஏழு கடல் ஏழு மலை' ஆகிய படங்கள் வெளியாகின. இயக்குனர் அட்லி தயாரிப்பில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 'பத்தா' திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தைப் பார்த்த ரசிகர்களும் படம் நன்றாக இருப்பதாகவே சொன்னார்கள். ஆனால், அதற்குரிய வசூலை இந்தப் படம் தராமல் போனது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் அமைந்தது. 50 கோடி வசூலைக் கூட கடக்கவில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். ராம் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி, சூரி நடித்து வெளிவந்த 'ஏழு கடல் ஏழு மலை' படத்தைப் பார்த்த பலரும் குழம்பித்தான் போனார்கள். சாமானிய ரசிகர்களுக்கு உண்டான படமாக அப்படம் அமையவில்லை.
ஏமாற்றம் தந்த சிக்மா
அக்டோபர் 2ம் தேதி 'அன்பில் அவன், சிக்மா' ஆகிய படங்கள் வெளிவந்தன. அசோக் செல்வன் நடித்த 'அன்பில் அவன்' சுமாரான வரவேற்பைப் பெற்றது. முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமான 'சிக்மா' படம் எந்த வரவேற்பையும் பெறாமல் தோல்வியைத் தழுவியது. விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் கூட அப்படத்தைப் பார்க்காமல் போனது ஆச்சரியம்தான்.
அக்டோபர் 9ம் தேதி, “ஆல் பாஸ், கிட்டி, பஞ்சாயத்துப்பட்டி, பருந்து, தாய் நிலம்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த ஆண்டில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கையை கூட்டிய படங்களாக இந்தப் படங்கள் அமைந்தன.
வசூல் கிங் ‛ஜெயிலர் 2'
அக்டோபர் 15ம் தேதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' படம் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து பெரும் வெற்றியைப் பெற்றது. தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரையில் எந்த ஒரு படமும் பெறாத வசூலை இந்தப் படம் பெற்றது. பாக்ஸ் ஆபீஸ் தகவல்படி 850 கோடி வசூலை இப்படம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இயக்குனர் நெல்சன், ரஜினிகாந்த் கூட்டணி ஒரு சிறப்பான கமர்ஷியல் வெற்றியை இப்படம் மூலம் தந்தது.
அக்டோபர் 16ம் தேதி 'டிரோன்ஸ்' படம் வெளிவந்தது. 'ஜெயிலர் 2' படத்துடன் போட்டி போட முடியாமல் தவித்தது. தியேட்டர்களே சரியாகக் கிடைக்கவில்லை என தயாரிப்பு தரப்பில் அழுது கொண்டே பேசினார்கள். இப்போது 25 நாட்களைப் படம் கடந்துவிட்டது என்று கூறியிருக்கிறார்கள்.
அக்டோபர் 23ம் தேதி 'ஹைக்கூ' படம் வெளிவந்தது. 'ஜெயிலர் 2' படத்தின் தாக்கம் அடுத்த சில வாரங்களாக நீடித்ததால் இது போன்ற சிறிய படங்கள் வந்ததும் பலருக்குத் தெரியவில்லை.
எண்ணிக்கையை கூட்டிய படங்கள்
அக்டோபர் 30ல் 'இ 1, எனிமி ஆப் த ஸ்மக்லர், காதல் போதை, நள்ளிரவு ராஜா அழைப்பு, பனி விழும் இரவு, புலவர், ராஜா வருகிறேன் உனக்காக, செய் செய்யாதே, சிங்காரம்' ஆகிய படங்கள் வெளிவந்தன. ஒரே நாளில் அதிகப் படங்கள் வெளிவந்த நாளாக அமைந்தது. இந்தப் படங்களும் படங்களின் எண்ணிக்கையைத்தான் கூட்டியது. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.
மொத்தத்தில் அக்டோபர் மாதத்தில் வெளிவந்த இத்தனை படங்களில் ஒரே ஒரு படம், 'ஜெயிலர் 2', வரலாற்று வசூலைப் பெற்று சாதனை படைத்துள்ளது. மீண்டும் ஒரு படம் இது போன்ற சாதனையைப் படைக்கும் வரை இந்தப் படத்தின் சாதனை நிலைத்திருக்கும்.
அக்டோபர் 2026 வெளியான படங்கள்...
அக்டோபர் 1 : பத்தா, ஏழு கடல் ஏழு மலை
அக்டோபர் 2 : அன்பில் அவன், சிக்மா
அக்டோபர் 9 : ஆல் பாஸ், கிட்டி, பஞ்சாயத்துப்பட்டி, பருந்து, தாய் நிலம்
அக்டோபர் 15 : ஜெயிலர் 2
அக்டோபர் 16 : டிரோன்ஸ்
அக்டோபர் 23 : ஹைக்கூ
அக்டோபர் 30 : இ 1, எனிமி ஆப் த ஸ்மக்லர், காதல் போதை, நள்ளிரவு ராஜா அழைப்பு, பனி விழும் இரவு, புலவர், ராஜா வருகிறேன் உனக்காக, செய் செய்யாதே, சிங்காரம்.