பிளாஷ்பேக்: 'லட்சிய நடிகர்' எஸ் எஸ் ராஜேந்திரன் அறிமுகமாக இருந்த புராண திரைப்படம்
கம்பீரமான குரல் வளத்தோடும், தெளிவான தமிழ் உச்சரிப்போடும், உணர்ச்சி பொங்கும் வசனங்கள் பேசி, கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் உயிர்ப்பினை தந்த உன்னத திரைக்கலைஞர்கள் வெகு சிலரில் மிக முக்கியமான ஒரு திரைக்கலைஞராக இன்றும் பார்க்கப்பட்டு வருபவர்தான் மறைந்த 'லட்சிய நடிகர்' எஸ் எஸ் ராஜேந்திரன்.
தமிழ் திரையுலகின் மூவேந்தர்கள் என அழைக்கப்பட்டு வந்த எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் ஆகிய மூவரும் கோலோச்சியிருந்த கலையுலகில், தனித்துவமிக்க தனது நடிப்பாலும், குரல் வளத்தாலும், அழகிய தமிழ் உச்சரிப்பாலும் தனக்கான ஒரு ரசிகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்ட இவரும், எம் ஜி ஆர், சிவாஜியைப் போல் நாடகத் துறையிலிருந்தே சினிமாவிற்கு விஜயம் செய்தவர். 1952ம் ஆண்டு சிவாஜிகணேசன் நாயகனாக அறிமுகமான “பராசக்தி” திரைப்படம்தான் இவரது அறிமுகத் திரைப்படம் என்றாலும், அதற்கு முன்பே இவர் அறிமுகமாக இருந்த ஒரு திரைப்படத்தைப் பற்றித்தான் நாம் இங்கு காண இருக்கின்றோம்.
“ஜூபிடர் பிக்சர்ஸ்” அதிபர்களான மறைந்த எம் சோமசுந்தரம் மற்றும் எஸ் கே மொகிதீன் ஆகியோர் சென்னையிலுள்ள “நெப்டியூன் ஸ்டூடியோ”வை வாங்கிய பின், அதுவரை கோயம்புத்தூரில் இயங்கி வந்த “ஜூபிடர் ஸ்டூடியோ” சென்னைக்கு 1948ம் ஆண்டு இடம் பெயர்ந்தது. இதே ஆண்டில் இவர்கள் தயாரித்த ஒரு புராண திரைப்படம்தான் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட “அபிமன்யூ”. மறைந்த பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ காசிலிங்கம் இயக்குநராக அறிமுகமான இத்திரைப்படத்தில் 'அர்ஜூனன்' கதாபாத்திரத்தில் எம் ஜி ஆர் நடித்திருந்தார்.
எஸ் எம் சுப்பையா நாயுடு மற்றும் சி ஆர் சுப்பராமன் ஆகிய இருவர் இசையமைத்திருந்த இத்திரைப்படத்தில் இடம் பெற்ற “வாழ்விலே புது வசந்தமாமே” என்ற ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைத்திருந்தவர் மறைந்த மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன். படத்தின் டைட்டிலில் இவரது பெயர் இடம் பெறாமல் போயிருந்தாலும், சினிமாவிற்காக எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்த முதல் திரைப்படம் இந்த “அபிமன்யூ” என்றால் அது மிகையன்று.
எம் ஜி ஆர், எம் என் நம்பியார், யு ஆர் ஜீவரத்னம், எம் ஜி சக்கரபாணி, எம் ஆர் சந்தானலக்ஷ்மி, டி பாலசுப்ரமணியம், சி கே சரஸ்வதி, நரசிம்ம பாரதி, எஸ் வி சுப்பையா போன்றோர் துணைக் கதாபாத்திரமேற்று நடித்திருந்த இத்திரைப்படத்தின் டைட்டில் கதாபாத்திரமான “அபிமன்யூ” என்ற நாயகன் கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வாகியிருந்தவர்தான் 'லட்சிய நடிகர்' எஸ் எஸ் ராஜேந்திரன். திராவிடக் கொள்கையின் தீவிர பற்றாளரான இவர், புராண இதிகாச திரைப்படங்களில் நடிப்பதில்லை என்பதை தனது இறுதிக் காலம் வரை கடைபிடித்தும் வந்தார். அதானல் தான் இவருக்கு 'லட்சிய நடிகர்' என்ற பட்டமும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.