சைபர் செக்யூரிட்டி கேப்டனாக கேரள காவல்துறையால் நியமிக்கப்பட்ட மம்முட்டி
நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றைத் தடுப்பதற்காக ஒவ்வொரு மாநில காவல்துறையும் பல்வேறு விதமான முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் கேரளாவில் இப்படிப்பட்ட சைபர் தாக்குதலைத் தாங்குவதற்கான கேரளாவிற்கான சிறப்பு முன்னெடுப்பாக 'கிளிக்' என்கிற ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 2027ம் ஆண்டுக்குள் கேரள மாநிலம் முழுவதையும் சைபர் தாக்குதல்களில் இருந்து முற்றிலும் மீட்டு பாதுகாப்புடன் கூடிய மாநிலமாக மாற்றுவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதற்கான தொடக்க விழா கொச்சியில் உள்ள ராஜிவ்காந்தி இந்தோர் ஸ்டேடியத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் மம்முட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதுமட்டுமல்ல, இத்திட்டத்தின் ஒரு பகுதியாக நடிகர் மம்முட்டி கேரள காவல்துறையின் சைபர் செக்யூரிட்டி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். விழாவில் கலந்து கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து மாணவர்களுக்கு 'கிளிக் கேப்டன்' என்கிற தொப்பிகளையும் மம்முட்டி வழங்கிப் பாராட்டினார்.
மேலும் மம்முட்டி இந்த நிகழ்வில் பேசும்போது, இணையம் என்பது அணு ஆயுதம் போன்றது; அதை நல்லதற்கும் பயன்படுத்தலாம், தீயதற்கும் பயன்படுத்தலாம், அது பயன்படுத்துபவர்களின் மனநிலையைப் பொறுத்தது; குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன்களை கொடுப்பதைத் தவிர்த்துப் பொறுப்புடன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தியுள்ளார்.