தமிழ் சினிமாவில் வசூலைக் குவித்த பார்ட் 2 படங்கள்
சில படங்களை பார்க்கும் போது 3 மணி நேரம் பார்த்த பிறகும் கூட, அதற்குள் படம் முடிந்து விட்டதே... இன்னும் கொஞ்ச நேரம் இந்த படத்தின் கதையை நீட்டி இருக்கலாம் என உணர்வு ஏற்படும். அதற்காக படத்தின் நீளத்தை அதிகரிக்கவும் முடியாது. அதேசமயம் ரசிகர்களின் ஆவலையும் நிறைவேற்ற வேண்டும். சில கதைகளை 3 மணி நேரத்தில் திரையில் படமாக உருவாக்கி விட முடியாது என்பதால் படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரித்து, ரசிகர்களின் ஆர்வத்தை கவருவதற்காக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களாக படம் இயக்கும் முறை சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்படி படத்தின் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியையும் மிஞ்சும் வகையில், மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துத் தமிழ் திரையுலகின் மைல்கல்லாக அமைந்த முக்கியமான இரண்டாம் பாகத் திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.
2.0 (2018)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக் ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமாக 2018ல் இப்படம் வெளியானது. செல்போன் கதிர்வீச்சால் பறவைகளுக்கு ஏற்படும் ஆபத்து குறித்துப் போராடி, இறுதியில் செல்போன் டவரில் தற்கொலை செய்து பின்னர் எதிர்மறை ஆற்றலை ஒன்றாக இணைந்து செல்போன்களை ஈர்க்கும் ஒரு பறவை வடிவ ஆற்றலாக ஆக்ஷய் குமார் மாறி பழிவாங்க, அதை விஞ்ஞானி ரஜினி தன் ரோபோல் எப்படி தடுக்கிறார் என்பதே படத்தின் கதை. கிராபிக்ஸ் காட்சிகளின் மிரட்டலால் உலகளவில் சுமார் ரூ.800 கோடி இப்படம் வசூலித்தது. தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த படமாக 2.0 திகழ்கிறது.
சிங்கம் 2 (2013)
ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்து 2010-இல் வெளியான 'சிங்கம்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, 2013-இல் வெளியான 'சிங்கம் 2' தமிழ் சினிமாவின் மிக வெற்றிகரமான சீக்வல் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்தது. தூத்துக்குடியில் ரகசிய உளவு அதிகாரியாகப் பணிபுரியும் துரைசிங்கம், சர்வதேச அளவில் நடைபெறும் கடல்வழி ஆயுத மற்றும் போதைப்பொருள் கடத்தலை எவ்வாறு முறியடிக்கிறார் என்பதே கதை. சூர்யாவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், ஹரியின் திரைக்கதை வேகம் மற்றும் ஆப்பிரிக்க நாடான தென்னாப்பிரிக்கா வரை நீளும் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றன. முதல் பாகத்தை விட அதிக வசூல் செய்து, 2013-ஆம் ஆண்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படமாக உருவெடுத்தது.
அரண்மனை 2 (2016)
சுந்தர்.சி இயக்கி, நடித்த படம் இது. சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, சூரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே சேர்ந்து கலக்கிய ஹாரர்-காமெடி பாணியில் குடும்பங்களை ஈர்க்கும் வகையில் சுந்தர் சி உருவாக்கிய 'அரண்மனை' வரிசையின் இரண்டாம் பாகம் இது. ஒரு கிராமத்து ஜமீன் அரண்மனைக்கு வரும் ஆவி, அங்கிருக்கும் குடும்பத்தைப் பழிவாங்கத் துடிப்பதும், அதை ரவி (சுந்தர் சி) தன் அறிவாற்றலால் எவ்வாறு கண்டுபிடித்து தடுத்து நிறுத்துகிறார் என்பதும் தான் இதன் திரைக்கதை. பயமுறுத்தும் ஆவி காட்சிகள் மற்றும் சூரியின் நகைச்சுவை கூட்டணி இணைந்து குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை திரையரங்குகளுக்கு அதிகளவில் வரவழைத்தது. வணிக ரீதியாக திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்று, அரண்மனை பிராஞ்சைஸை தமிழ் சினிமாவின் வலுவான பிராண்டாக மாற்றியது. ரசிகர்களின் பெரும் ஆதரவு காரணமாக 4 பாகங்களாக இந்த படம் எடுக்கப்பட்டது.
காஞ்சனா 2 முனி 3 (2015)
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடிக்க அவருடன் டாப்சி, நித்யா மேனன், கோவை சரளா ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் 'பேய்ப் படம் + நகைச்சுவை + குடும்ப சென்டிமென்ட்' என்ற பார்முலாவை வெற்றிகரமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டார் ராகவா லாரன்ஸ். ஒரு தொலைக்காட்சி கேமராமேன் (ரமேஷ்) மற்றும் அவரது குழுவினர் ஒரு பேய் வீட்டைப் பற்றி நிகழ்ச்சி தயாரிக்கச் செல்லும் போது, அங்குள்ள பழிவாங்கும் ஆவிகளிடம் மாட்டிக் கொள்வதை மையமாகக் கொண்ட கதை. ராகவா லாரன்ஸின் மாறுபட்ட கதாபாத்திரங்கள், நித்யா மேனனின் உருக்கமான நடிப்பு, கோவை சரளாவின் காமெடி மற்றும் தமனின் அதிரடி பின்னணி இசை இவை அனைத்தும் இந்த படத்தை வெற்றி பெற வைத்தது. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, 2015-இன் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக சாதனை படைத்தது. இதன் தொடர்ச்சியாக காஞ்சனா 3யும் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
பொன்னியின் செல்வன் 2 (2023)
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா நடிப்பில் உருவான படம் இது. கல்கியின் புகழ்பெற்ற வரலாற்று நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'பொன்னியின் செல்வன்' காவியத்தின் இறுதிப் பாகம். அருண்மொழி வர்மன் (ராஜராஜ சோழன்) கடலில் மூழ்கிய பிறகு சோழ நாட்டில் ஏற்படும் அரசியல் குழப்பங்கள், ஆதித்ய கரிகாலனின் மர்ம மரணம், நந்தினியின் பழிவாங்கும் பின்னணி மற்றும் சோழ அரியணையைக் காக்கும் தந்திரங்களை முழுமையாக விவரித்த படம். விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு இடையேயான உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள், ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்ட இசை மற்றும் சர்வதேசத் தரத்திலான ஒளிப்பதிவு ஆகியவை உலக அளவில் 350 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. முதல்பாகத்தை விட இரண்டாம் பாக வசூல் குறைவு என்றாலும் ஒட்டுமொத்த பொன்னியின் செல்வன் என பார்க்கையில் படம் வெற்றியே.
ஜெயிலர் 2
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‛ஜெயிலர்' படத்தின் முதல்பாக வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்கள் கூட்டணியில் சமீபத்தில் வெளியான படம் ‛ஜெயிலர் 2'. டைகர் முத்துவேல் பாண்டியனின்(ரஜினி) அமைதியான வாழ்க்கையில் ஒரு சிலைக் கடத்தல் விவகாரம் மற்றும் உள்ளூர் பிரச்னைகள் குறுக்கிடுகின்றன. முதல் பாகத்தில் கொல்லப்பட்ட வில்லன் வர்மனின் நண்பரான சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் கோவாவை மையமாக வைத்து செயல்படும் சக்திவாய்ந்த எஸ்.ஜே. சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, வித்யா பாலன் கும்பல் உடனான மோதல் தான் ஜெயிலர் 2 படக் கதை. ரஜினியின் மிரட்டலான, சாத்தமான ஸ்டைலான நடிப்பே படத்தை வெற்றி பெற செய்துவிட்டது. 750 கோடிக்கு மேல் வசூலித்துள்ள இப்படம் விரைவில் 2.0 பட வசூலையும் முறியடிக்க போகிறது.
பிறமொழி படங்கள்
தெலுங்கில் இருந்து வெளியாகி தமிழ் உள்ளிட்ட பான் இந்தியா படங்களாக வெளியான பாகுபலி 2 (2017), புஷ்பா 2 (2024), காந்தாரா சாப்டர் 1 (2025), துரந்தர் தி ரிவெஞ்ச் (2025) ஆகிய படங்களும் தமிழில் வசூலைக் குவித்த படங்களாக அமைந்தன.
பொதுவாக முதல் பாகத்தின் வெற்றியை இரண்டாம் பாகங்கள் ஈடுசெய்வது கடினம் என்ற பிம்பத்தை உடைத்து, இந்த திரைப்படங்கள் பிரம்மாண்ட வசூலையும், ரசிகர்களின் ஏகோபித்த அன்பையும் பெற்றுத் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் எல்லையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளன.