பிரபாஸின் ‛பௌசி' படத்தில் வரலாறு திரிப்பு... : இயக்குனர் மன்னிப்பு கேட்க நேதாஜியின் உறவினர் வலியுறுத்தல்
ஹனு ராகவுப்புடி இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் 'பௌசி' படத்தின் வீடியோ முன்னோட்டம் ஒன்று 'பைல் நம்பர் 25' என்ற தலைப்பில் சில தினங்களுக்க முன்பு வெளியானது. அதில் ஹிட்லரை நேரில் சந்தித்து சுபாஷ் சந்திர போஸ் பேசும் காட்சியும், அதில் கடைசியாக பிரபாஸ் கதாபாத்திரமான 'பௌசி' பற்றி ஹிட்லரிடம் நேதாஜி சொல்வது போலவும் அமைக்கப்பட்டிருந்தது. அவர்களது பேச்சின் முடிவில் பிரபாஸின் கதாபாத்திரம் அந்த வீடியோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
வரலாற்றில் இடம் பெற்ற தலைவர்களை சினிமாவிற்காக பயன்படுத்தி, அவர்களை விடவும் பிரபாஸ் கதாபாத்திரமான பௌசி வலிமையான ஒரு கதாபாத்திரமாக அந்த வீடியோவில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக ஒரு சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் நேதாஜியின் உறவினர்களின் வாரிசான சந்திரகுமார் போஸ் 'பௌசி' வீடியோ குறித்த தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
“அடால்ப் ஹிட்லருடன் நேதாஜி சந்தித்துப் பேசியது தொடர்பான வரலாற்று உண்மைகளைப் படத்தின் இயக்குநர் திரித்துக் காட்டியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், இந்திய மக்களிடம் திரைப்பட இயக்குநர் மன்னிப்புக் கேட்க வேண்டும். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தையும் அதன் தலைவர்களையும் திரைப்படமாக உருவாக்குவதற்கு இயக்குநர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு என்றும், ஆனால் அந்தச் சுதந்திரம் வரலாற்று உண்மைகளைப் புறக்கணிப்பதாக இருக்கக் கூடாது.
தேசத்தின் தலைவர்கள் குறித்து உண்மைகளைத் திரித்து, கற்பனைக் கதைகளைப் புகுத்துவது ஒரு குற்றம் என்று நான் கருதுகிறேன். ஹிட்லருடனான நேதாஜியின் சந்திப்பு தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜியின் ஆளுமை குறைத்து மதிப்பிடப்பட்டுளளது. இந்தியாவின் சுதந்திரத்திற்கான உதவியை நாடியே நேதாஜி ஹிட்லரை அணுகினார். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஜெர்மனியின் ஹிட்லரும், ஜப்பானின் ஹிடேகி டோஜோவும் உதவ முடியும் என்பதை நேதாஜி உணர்ந்திருந்தார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து 'பௌசி' இயக்குனர் ஹனுராகவுப்புடி இதுவரையில் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.