மூர்த்தி அண்ணன் நமோவுக்கு ஒரு கார் பார்சல் : சசிகுமார்
ஜெயிலர் 2 படத்தின் முதற்பாகத்தில் காமெடி கலந்த கேரக்டரில், வில்லத்தனம் செய்தவர் நமோ நாராயணன். படம் பார்த்தவர்கள் அவர் நடிப்பை, அவரின் அப்பாவிதனத்தை, அவர் சம்பந்தப்பட்ட சீன், வசனங்களை கொண்டாடுகிறார்கள். விமர்சனங்களிலும் அவரை புகழ்கிறார்கள், சோஷியல் மீடியா மீம்ஸ்களிலும் மூர்த்தி அண்ணன் கேங் காமெடிகள், போட்டோ, வீடியோ கொடி கட்டி பறக்கிறது.
2009ம் ஆண்டு வெளியான நாடோடிகள் படத்தில் அறிமுகம் ஆனவர் நமோ நாராயணன். அடுத்து, ஈசன்,போராளி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, குட்டி புலி, தெனாலிராமன், கொம்பன், ரஜினி முருகன், ஆண்டவன் கட்டளை, விஸ்வாசம், கைதி, நாடோடிகள் 2, ராயன், அரண்மனை 4 உட்பட 50க்கும் அதிகமான படங்களில் நடித்து இருந்தாலும் ஜெ யிலர் 2 அவரை உயரத்துக்கு கொண்டு சென்றுவிட்டது.
இந்நிலையில் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர், நடிகர் சசிகுமார் ஜெயிலர் 2 படத்தில் சிறப்பாக நடித்த நமோ நாராயணனுக்கு ஒரு கார் பார்சல் என தனது பாணியில் நகைச்சுவையாக வாழ்த்தியிருக்கிறார். அதோடு ஜெயிலர் 2 படக்குழுவையும் வாழ்த்தியிருக்கிறார். கடந்த சில நாட்களாக நமோ நாராயணனிடம் பேட்டி கேட்டு 100க்கும் அதிகமானவர்கள் போன் செய்கிறார்களாம். ஆனால், அவரோ எந்த பேட்டியும் வேணாம் என எஸ்கேப் ஆகிறார்.