லாஸ் ஏஞ்சல்ஸ் அகாடமி மியூசியத்தில் 'ராமாயணா' உலகளாவிய பிரீமியர் ஷோ
நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இதிகாசம் புராணம் 'ராமாயணா'. ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ்ஷூம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ராமாயணா முதல்பாகம் தீபாவளி வெளியீடாக நவ., 5ல் உலகம் முழுக்க வெளியாகிறது. உலகளாவிய வெளியீட்டை ஹாலிவுட் நிறுவனமான சோனி வெளியிடுகிறது.
'ராமாயணா' திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் காட்சி அக்டோபர் 27ம் தேதி மாலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அகாடமி மியூசியம் ஆப் மோஷன் பிக்சர்ஸின் டேவிட் கெபென் திரையரங்கில் நடைபெற உள்ளது. 945 பேர் அமரக்கூடிய அரங்கில், இப்படத்தின் 3D பிரீமியர் காட்சி திரையிடப்பட உள்ளது. இந்தியாவின் போற்றப்படும் இதிகாசமான ராமாயணத்தை சர்வதேச ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் நடைபெறும் இந்தப் பிரீமியர் நிகழ்ச்சி படக்குழுவினருக்கு முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது. இந்த அகாடமி மியூசியம், இதற்கு முன்பு பல்வேறு சர்வதேச நிகழ்ச்சிகளையும் ஆஸ்கர் விருது தொடர்பான கொண்டாட்டங்களையும் நடத்தியுள்ளது.
தீபாவளிப் பண்டிகையையொட்டி இந்தப் பிரீமியர் நடைபெறுவதால், இந்தியாவின் பண்டிகைக் கொண்டாட்ட உணர்வையும் லாஸ் ஏஞ்சல்ஸுக்குக் கொண்டு செல்ல படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி, சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் விருந்தினர்கள் பாரம்பரிய இந்தியப் பண்டிகை உடைகளை அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ராமாயணா படம் ஹிந்தி தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும், ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் இப்படம் திரையிடப்பட உள்ளது.