சட்டுனு ஒரு பதிலை சொல்லுங்க ; சல்மான் கானுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
ஹிந்தியில் 'காலா ஹிரண் ; தி பேட்டில் பார் லீகல்' என்கிற திரைப்படம் தயாராகியுள்ளது. இது பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மான் வேட்டையாடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அதன் பிறகு அவர் மீது எடுக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த தகவலை அறிந்து, சல்மான் கான் தரப்பினர் இந்த படத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதே சமயம், சல்மான் கான் தனது பெயர் மற்றும் ஆளுமை உரிமைகளைத் திரைப்படங்களுக்கும் அதன் விளம்பரப் பொருட்களுக்கும் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதனைக் குறிப்பிட்டு, 'காலா ஹிரண்' படக்குழுவினர் இந்த இரண்டு வழக்குகளுமே ஒரே விதமானவை, எனவே சல்மான் கான் எங்கள் படத்தின் மீது தொடர்ந்திருக்கும் நடைமுறைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர்.. தயாரிப்பாளர் தரப்பு வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதி அனூப் ஜெயராம் பம்பானி, இது குறித்து விளக்கம் அளிக்க சல்மான் கானுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.