உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்குநர் ராம் என் தந்தை : அஞ்சலி நெகிழ்ச்சி

இயக்குநர் ராம் என் தந்தை : அஞ்சலி நெகிழ்ச்சி

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'ஏழு கடல் ஏழு மலை'. 'பறந்து போ' படத்திற்கு பிறகு ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம். நிவின்பாலி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் கதாநாயகனாக களம் இறங்குகிறார். சமீபகாலமாக கதையின் நாயகனாக மாறிவிட்ட சூரி, நிவின்பாலிக்கு இணையான மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தில் எலியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இதை தொடர்ந்து படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னை தரமணியில் உள்ள எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் அஞ்சலி பேசியதாவது: எல்லோருக்கும் வாழ்நாள் படங்கள் அப்படின்னு சில இருக்கும்; நாமும் அப்படி பண்ணினா எப்படி இருக்கும் என்று நினைப்போம். எனக்கு இந்த 'ஏழு கடல் ஏழுமலை' அப்படி ஒரு அனுபவத்தைத்தான் கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தில் என்னுடைய பங்களிப்பு நிறைய இருக்கிறது, ஆனால் அது இந்த அளவிற்கு வெளிப்படையாக எல்லோரும் பாராட்டும் அளவிற்கு இருக்கிறது என்பது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

ராம் சாரைப் பற்றி பல மேடைகளில் பேசியிருந்தாலும் கூட, என்னுடைய ஒரு வெல்-விஷராகவும் ஒரு மென்டராகவும், ஒரு தந்தையைப் போன்றும் அவரை பல கோணத்தில் நான் பார்த்திருக்கிறேன். இந்த 'ஏழு கடல் ஏழு மலை' படம் ராம் சாருக்கு எவ்வளவு இதயத்துக்கு நெருக்கமான படம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதில் என்னுடைய கதாபாத்திரத்தை இவ்வளவு அழகாக எழுதியதற்கு ரொம்ப நன்றி.

சினிமாவில் நான் 20 வருடங்களை எட்டியதற்கு நிறைய பேர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். என்னுடைய இந்த வெற்றிக்கும், பயணத்திற்குள்ளும் ராம் சார், வசந்த பாலன் சார், கார்த்திக் சுப்புராஜ், சுந்தர் சார் போன்ற நிறைய இயக்குநர்கள் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 55 படங்களில் நடித்துவிட்டேன். எல்லா இயக்குநர்களும் எனக்கு அழகானக் கதாபாத்திரங்களைத் தான் எழுதியிருக்கிறார்கள். அதற்காக இந்தத் தருணத்தில் நான் எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !