உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: சமூகப் பட பாணியில் வந்து, சாதனை புரிந்த ஒரு பக்தித் திரைப்படம்

பிளாஷ்பேக்: சமூகப் பட பாணியில் வந்து, சாதனை புரிந்த ஒரு பக்தித் திரைப்படம்


அதிக அளவிலான சமூகத் திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருந்த 1960களில், புராண, இதிகாச பக்தித் திரைப்படங்களைத் தயாரித்து இயக்கி, வெற்றிகளைக் குவித்த ஒரு இயக்குநராக பார்க்கப்பட்டவர்தான் 'இறையருட்செல்வர்' ஏ பி நாகராஜன். நாடகத் துறையிலிருந்து சினிமாத் துறைக்கு வந்த இவர், ஒரு நடிகராக, கதாசிரியராக பின் தயாரிப்பாளராக தன்னை உயர்த்திக் கொண்டிருந்த நிலையில், 1962ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜிகணேசன், சாவித்திரி ஆகியோரது நடிப்பில் உருவான “வடிவுக்கு வளைகாப்பு” என்ற திரைப்படத்தை முதன் முதலாக இயக்கி ஒரு இயக்குநராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். “குலமகள் ராதை”, “நவராத்திரி” என தொடர்ந்து நடிகர் சிவாஜிகணேசனை வைத்து சமூகத் திரைப்படங்களாகவே தந்துகொண்டிருந்த இவர் தயாரித்து இயக்கிய முதல் புராண பக்தித் திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் “திருவிளையாடல்”.

1965ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, “கந்தன் கருணை”, “திருவருட் செல்வர்”, “திருமால் பெருமை”, “அகத்தியர்”, “திருமலை தெய்வம்”, “ஸ்ரீகிருஷ்ண லீலா” என இவரது இயக்கத்தில் வெளிவந்து வெற்றிப் பெற்ற பக்தித் திரைப்படங்களின் வரிசையில் ஒன்றாக வெளிவந்த திரைப்படம்தான் “சரஸ்வதி சபதம்”.

1966ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தின் நாயகனும் நடிகர் சிவாஜிகணேசனே. 'நாரதர்' மற்றும் 'வித்யாபதி' என்ற இரட்டை வேடங்களேற்று சிவாஜிகணேசன் நடித்திருந்த இத்திரைப்படம், எழுத்தாளர் புதுமைப்பித்தனின் “வாக்கும் வக்கும்” என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதுபோல், நாரதராக நடித்திருக்கும் நடிகர் சிவாஜிகணேசன், தேவலோகத்தில் முப்பெரும் தேவியரான சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி என மூவரையும் சந்தித்து, உலகில் சிறந்தது கல்வியா? செல்வமா? வீரமா? என்ற ஒரு பிரச்சனையை அவர்களிடையே உண்டு பண்ணி, அவர்களைச் சீண்டி, யார் பெரியவர்? என்ற ஒரு போட்டி மனப்பான்மையை அவர்களிடம் எழ வைத்து, அதன் விளைவாக முப்பெருந் தேவியரும் பூலோகம் சென்று, அங்கே படிப்பறிவற்ற, வாய்பேச இயலாத ஒருவனை உலகம் போற்றும் கவிஞனாகவும், அன்றாடம் பிச்சை எடுத்து உயிர் வளர்க்கும் ஒரு பிச்சைக்காரியை நாட்டின் அரசியாகவும், பிறப்பிலேயே கோழையாக இருக்கும் ஒரு சோம்பேறியை யாரும் வெல்ல முடியா வீரனாகவும் மாற்றி, போட்டியில் தீவிரம் காட்டிவரும் முப்பெருந் தேவியரில் யார் வெற்றி பெற்றனர் என்பதை சுவாரஸ்யமாகவும், ஒரு சமூக சிந்தனையோடும் சொல்லியதோடு, அரங்க அமைப்புகள், ஆடை அணிமணிகள், கலைஞர்கள் தேர்வு, இசை, பாடல் வரிகள் என ஒவ்வொன்றும் இப்படத்தின் வெற்றியை உறுதி செய்வதாகவே அமைந்திருந்தன என்றால் அது மிகையன்று.

1951ம் ஆண்டு வெளிவந்த “கலாவதி” என்ற திரைப்படத்தின் தாக்கத்தையும் கொண்டிருந்த இத்திரைப்படத்தில், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சாவித்திரி, தேவிகா, பத்மினி, கே ஆர் விஜயா, நாகேஷ், மனோரமா, சிவக்குமார், வி நாகையா, ஈ ஆர் சகாதேவன் ஆகியோர் முக்கிய வேடமேற்று நடித்திருந்தனர். படத்தின் இசையை 'திரையிசைத் திலகம்' கே வி மகாதேவன் வழங்க, பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

“கல்வியா? செல்வமா? வீரமா?”, “அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி”, “தெய்வம் இருப்பது எங்கே?”, “உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி”, “ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி”, “தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா”, “கோமாதா எங்கள் குலமாதா” என படத்தின் அத்தனைப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, சமூகம் சார்ந்த ஒரு நல்ல பக்திப் படத்தைப் பார்த்த திருப்தி ரசிகர்களிடமும் மேலோங்க, படம் திரையரங்குகளில் 100 நாட்களையும் கடந்து ஓடி, பெரும் வெற்றியைப் பதிவு செய்திருந்தது. 03 செப்டம்பர் 1966ல் வெளிவந்த “சரஸ்வதி சபதம்” திரைப்படம், தற்போது தனது 60வது ஆண்டை நிறைவு செய்து, இன்றும் புதுப்பொலிவுடன் அனைத்து ரசிக மனங்களையும் கவர்ந்திருக்கும் ஓர் அரிய கலைப்படைப்பாகவே நிலைத்திருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !