விஷால் இயக்கி நடித்த 'மகுடம்', இப்படி ஒரு தோல்வியா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படமாக, ரவி அரசு இயக்க, விஷால் நடிக்க புதிய படத்திற்கான பூஜை கடந்த வருடம் ஜூலை மாதம் நடந்தது. ஆகஸ்ட் மாதம் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது.
படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களிலேயே இயக்குனர் ரவி அரசுக்கும், படத்தின் நாயகன் விஷாலுக்கும் மோதல் ஏற்பட்டது. அதன்பின் அப்படத்தை விஷால் இயக்கி வருவதாக சொல்லப்பட்டது. அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தன்று அதிகாரப்பூர்வ அறிக்கை மூலம் படத்தைத் தானே இயக்குவதாக விஷால் அறிவித்தார்.
இரு தரப்பும் பரஸ்பரம் மாறி மாறி புகார் அளித்ததாகத் தெரிகிறது. கடைசியில் படத்தின் கதையை மட்டும் தந்துவிட்டு படத்தை இயக்குவதிலிருந்து விலகினார் ரவி அரசு.
படப்பிடிப்பு நடந்து முடிந்து படம் கடந்த வாரம் வெளியானது. விஷால் நடித்து இதுவரையில் வந்த படங்களிலேயே மிகவும் மோசமான ஒரு தோல்வியை இந்தப் படம் பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் வார இறுதியில் 2 கோடி வசூலைக் கூடப் படம் பெறவில்லை என்கிறார்கள். இப்படத்தின் மூலம் மிகப் பெரும் நஷ்டம் ஏற்படலாம் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.