உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 75 வயதிலும் ரஜினியின் பிட்னஸ் சீக்ரெட்... 70 வயதை கடந்தவர்களுக்கு ஒரு பாடம்!

75 வயதிலும் ரஜினியின் பிட்னஸ் சீக்ரெட்... 70 வயதை கடந்தவர்களுக்கு ஒரு பாடம்!

இந்திய திரையுலகினர் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் ரஜினிகாந்த். கடந்தவாரம் ஆக., 15ம் தேதி உடன் இவர் திரையுலகில் அறிமுகமாகி 51 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 75 வயதைக் கடந்த போதிலும் தொடர்ந்து ஹீரோவாக வலம் வருகிறார். இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்குகிறார். அவரின் நடை வேகம் ஒன்று போதும் அவர் 75 வயதை கடந்தவாரா என ஆச்சர்யத்துடன் பார்ப்பார்கள்.

இத்தனைக்கும் 2011ல் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிறுநீரகம் மற்றும் சுவாச தொடர்பான பிரச்னையில் இருந்து ரஜினி மீண்டு வந்தார். தொடர்ந்து 2021ல் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட 'கரோடிட் ஆர்டரி ரீவாஸ்குலரைசேஷன்' சிகிச்சை எடுத்தார். 2024ல் இதயத்தின் ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட அதற்கும் சிகிச்சை எடுத்தார். இப்படி பல்வேறு சிகிச்சை செய்யப்பட்டிருந்த போதிலும் உடலை பிட்டாக வைத்துக் கொண்டு இளைஞர் போன்று சுறுசுறுப்பாக படங்களில் நடித்து வருகிறார்.

உண்மையில் இது ஆச்சர்யமான ஒன்று தான். எப்படி 70 வயதுக்கு பிறகும் ரஜினி இப்படி பிட்டாக ஆக்டிவ்வாக இருக்கிறார் என கேள்வி எழும். அதற்கு அவர் மேற்கொள்ளும் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு முறைகள் தான். பொதுவாக இதுபோன்ற சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் ஹெவி ஒர்க்-அவுட் செய்ய முடியாது. மாறாக நடைபயிற்சி, முழு உடலுக்கும் தேவையான ஸ்டிரெச்சஸ், ஏரோபிக்ஸ் மாதிரியான பயிற்சிகளை செய்வர். ரஜினியும் அதை தான் மேற்கொள்கிறார். அதோடு லேசான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்கிறார். மேலும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகள் குறிப்பாக புரதம் மற்றும் கால்சியம், வைட்டமின் டி மற்றும் நார்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கிறார். எல்லாவற்றையும் விட அவர் யோகாசனமும் செய்கிறார். இதனால் தான் அவர் உடல் பிட்டாக சுறுசுறுப்பாக இந்த வயதில் இயங்குகிறது.

இதுபற்றி மருத்துவர்கள் கூறும்போது, ‛‛பொதுவாக வயதாகும்போது, தசையின் அளவும் வலிமையும் இயற்கையாக குறையும். 70 வயதில் உள்ளவர்களுக்கு ரஜினியின் பிட்னஸ் உண்மையில் ஒரு பாடமே. 70 வயதை கடந்தவர்கள் அன்றாடம் நடைப்பயிற்சி, மிதமான ஏரோபிக் செயல்பாடு மற்றும் ஸ்டிரெச்சஸ் மாதிரியான உடற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். புகையிலையைத் தவிர்த்தல், ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல், சமச்சீரான உணவை உட்கொள்ளுதல், போதுமான தூக்கம் ஆகியவையும் முக்கியமானவை. உடல்நல தேவைகளுக்கு ஏற்ப, போதுமான புரதம் மற்றும் கால்சியம், வைட்டமின் டி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை எடுக்க வேண்டும். நீர்ச்சத்தை பராமரிக்க வேண்டும், பழங்கள், காய்கறிகள், கொழுப்பு குறைந்த இறைச்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளையும் அவ்வப்போது செய்து கொள்ள வேண்டும் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !