பிளாஷ்பேக்: “தை பிறந்தால் வழி பிறக்கும்” திரைப்படமும், தரமான கலைஞர்களின் அணிவகுப்பும்
1950 மற்றும் 60களில் சமூக நலன் கருதி திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வந்த தரமான தயாரிப்பாளர்களின் வரிசையில் மிக முக்கியமான ஒருவராக பார்க்கப்படுபவர் தயாரிப்பாளர் ஏ கே வேலன். ஒரு நல்ல தமிழ் எழுத்தாளர், நாடக ஆசிரியர், கதாசிரியர், பேச்சாளர், படத் தயாரிப்பாளர் என்ற பன்முகத் தன்மையோடு தமிழ் திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் மேல் பயணித்து, அற்புதமான பல தரமான திரைப்படங்களைத் தந்து, தமிழ் திரைப்பட ரசிகர்களாலும், கலையுலகப் பெருமக்களாலும் பெரிதும் மதிக்கப்பட்ட ஒரு திரை ஆளுமையாக பார்க்கப்பட்டு வந்த இவர், ஒரு இயக்குநராக களம் கண்ட முதல் திரைப்படம்தான் இந்த “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற திரைப்படம்.
“அருணாச்சலம் பிக்சர்ஸ்” என்ற பெயரில் சொந்தமாக படக் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து, அதன் கீழ் “தை பிறந்தால் வழி பிறக்கும்” திரைப்படத்தை தயாரித்து, 1958ம் ஆண்டு வெளியிட்டார். பணத்தின் மேல் அளவு கடந்த ஆசை கொண்ட ஒரு பேராசைக்காரன் சொக்கனாதன். விவசாயிகளை ஆதரித்து, அரவணைத்துச் செல்லும் அன்புள்ளம் கொண்டவன் ரங்கன். இவ்விருவருக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில், சொக்கனாதனை எவ்வாறு ரங்கன் பழிதீர்க்கின்றான் என்பதுதான் இப்படத்தின் கதை.
ரங்கனாக எஸ் எஸ் ராஜேந்திரன், சாரதாவாக எம் என் ராஜம், மருதியாக ராஜசுலோச்சனா, சொக்கனாதனாக வி கே ராமசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்த இத்திரைப்படம்தான் பின்னாளில் மலையாள திரையுலகின் முன்னணி நாயகன் என அறியப்பட்ட நடிகர் பிரேம் நஸீரை வரதன் என்ற கதாபாத்திரத்தில் தமிழுக்கு அறிமுகம் செய்து வைக்கவும் காரணமாக இருந்தது.
அ மருதகாசி, கு சா கிருஷ்ணமூர்த்தி, சுரதா, கண்ணதாசன், பி கே முத்துச்சாமி ஆகிய கவிஞர்கள் இப்படத்தின் பாடல் வரிகளை எழுத, படத்திற்கு இசைமைத்திருந்தவர் திரையிசைத் திலகம் கே வி மகாதேவன். “மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு கிளை பாரமா?”, “ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே”, “எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்”, “அமுதும் தேனும் எதற்கு”, “தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்” போன்ற படத்தின் பாடல்கள் அந்நாளில் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தன.
படத்தின் கதை, திரைக்கதை வசனம் மற்றும் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்த ஏ கே வேலன் இயக்கிய முதல் திரைப்படமான இத்திரைப்படம், அவருக்கு வசூல் ரீதியாக ஒரு மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தின் வசூல் வெற்றியால் “அருணாச்சலம் ஸ்டூடியோ” என்ற சொந்த படப்பிடிப்புத் தளம் ஒன்றையும் நிர்மாணிக்க வைத்திருந்தது ஏ கே வேலனை. படத்தில் நடித்திருந்த நடிகை ராஜசுலோச்சனாவிற்கும் ஒரு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்த இத்திரைப்படம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டு, அங்கும் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தது.